தமிழில் பாடவுள்ளார் அதிதி ராவ்! - ஜி.வி இசையில் முதல் பாட்டு | Actor Aditi rao hydari will be singing her debut Tamil song in G.V.Prakash Kumar

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (05/12/2018)

கடைசி தொடர்பு:11:40 (05/12/2018)

தமிழில் பாடவுள்ளார் அதிதி ராவ்! - ஜி.வி இசையில் முதல் பாட்டு

நடிகை அதிதி ராவ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் தமிழ் படத்தில் முதல் முறையாக பாட்டு பாட உள்ளார். 

அதிதி ராவ்

'குப்பத்துராஜா', 'ஐங்கரன்', 'அடங்காதே', '100% காதல்', 'சர்வம் தாளமயம்' ஆகிய படங்களைத் தன் கைவசம் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் ‘ஜெயில்’ படத்தில் நடித்துவருகிறார். ஆர்யா பங்குபெற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சிமூலம் புகழ்பெற்ற அபர்ணதி, இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 'இரும்புத்திரை' படத்தை வெளியிட்ட கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றது. ஜி.வி.பிரகாஷ் இசையில் வரும் இப்படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 

சிருங்காரம் தான் முதல் படம் என்றாலும் நடிகை அதிதி ராவ் ஹைதரி, மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டார். இவர் 2012-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான லண்டன், பாரிஸ், நியூயார்க் என்ற படத்தில் முதல்முறையாக இரண்டு பாடல் பாடியிருந்தார்.  இதையடுத்து தற்போது தமிழில் முதல்முறையாக  ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் 'ஜெயில்' படத்தில்  ஒரு பாடலைப் பாட இருப்பதாக ஜி.வி தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ மிகவும் சந்தோஷமான அறிவிப்பு. சிறந்த திறமையாளர் அதிதி ராவ். அவர், என் இசையில் முதல்முறையாக தமிழில் ஒரு பாடல் பாட உள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாக உள்ள ஜெயில் படத்தில் இடம்பெறும் ‘காத்தோடு’ என்ற டூயட் பாடலைப் பாட உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். ஜி.வி. பிரகாஷின் இந்த அறிவிப்பு, அதிதிராவ் மற்றும் ஜி.வி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.