வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (07/12/2018)

கடைசி தொடர்பு:22:29 (07/12/2018)

`பண்டிகை நாள்களில் படங்களை வெளியிடத் தடை இல்லை!’ - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை வெளியீடுகளில் எந்த முறைப்படுத்துதலும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.  

தமிழ்ச் சினிமா சமீபகாலமாக பல மாறுதல்களைச் சந்தித்து வருகிறது. தமிழ்ச் சினிமாவில் பிப்ரவரி, மார்ச் மாதம் நடந்த ஸ்டிரைக்கின் காரணமாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் சில விதிமுறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று படங்கள் ரிலீஸில் முறைப்படுத்துதல்.

தயாரிப்பாளர்கள் சங்கம்

கடந்த வாரங்களில் வெளிவந்த சில படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பில் பிரச்னை வந்தது. `மாரி 2’, `சீதாக்காதி’, `அடங்க மறு’ படத்தின் வெளியீட்டை மாற்றியமைக்க முடியாது என்று அப்படங்களின் தயாரிப்பாளர்கள் விடாப்பிடியாக இருந்த சூழலில், அண்மையில் தயாரிப்பாளர் சங்கக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், புதிய திரைப்படங்களின் வெளியீட்டுக்குழு கூட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் `டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10-ம் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்று (festival date) தான் வெளிவர வேண்டும். அவ்வாறு வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்று முடிவெடுத்து அவர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டதின் பேரில், தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கண்ட கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு தேதிகளில் தயாரிப்பாளர்களின் விருப்பத்துக்கேற்ப அவர்களது திரைப்படங்களை வெளியிட்டுக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளது.

சீதக்காதி

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவையடுத்து வரும் டிசம்பர் 21-ம் தேதி `அடங்க மறு’, `மாரி 2’, `சீதக்காதி’, `கனா’ என அனைத்துப் படங்களும் வெளியாகும். `பேட்ட’, `விஸ்வாசம்’ தவிர மற்ற படங்களும் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது. ஜனவரி 10, டிசம்பர் 21 தேதிகள் தவிர்த்த மற்ற நாள்களுக்கான படங்களின் வெளியீடு குறித்த முடிவுகள், வரும் வாரம் நடைபெறும் அனைத்து தயாரிப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் முடிவு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.