``விருதுக்குப் பிறகு கிடைத்த முதல் பாராட்டு!” -குறும்பட வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்த எஸ்.ரா | writer s.ramakrishnan says about the first honour after got sahitya academy award

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (10/12/2018)

கடைசி தொடர்பு:14:30 (10/12/2018)

``விருதுக்குப் பிறகு கிடைத்த முதல் பாராட்டு!” -குறும்பட வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்த எஸ்.ரா

இயக்குநர் பி.எஸ்.மித்ரனிடம் உதவி இயக்குநராக இருக்கும் அனு சத்யா என்பவர் `நான்காம் விதி' எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். இக்குறும்படம் நேற்று சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. அவ்விழாவில் நடிகர் பார்த்திபன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்தக் குறும்படத்தைப் பார்த்து பாராட்டிப் பேசிய நடிகர் பார்த்திபன், பின், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைப் புகழ்ந்து பேசினார்.

எஸ்.ராமகிருஷ்ணன்

``சாதாரண விருதுநகர் சாகித்ய விருதுநகரா மாறியிருக்கு. இந்த விருது அவருக்குக் கிடைத்தது தாமதம்தான். `புதிய பாதை' படத்துக்கு மனோரமா அம்மாவுக்குத் தேசிய விருது கிடைச்சது. அப்படினா, அவங்க இந்தப் படத்துல அருமையா நடிச்சிருக்காங்கன்னு இல்லை. அதுக்கு முன்னாடி ஆயிரம் படங்கள் நடிச்சிருக்காங்க. அப்படிச் சிறப்பு வாய்ந்த நடிகைக்கு `புதிய பாதை' ஒரு வாய்ப்பா இருந்திருக்கு அவ்ளோதான். அதே மாதிரி, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சதுக்கு `சஞ்சாரம்' மட்டும் காரணம் இல்லை. அதுவும் ஒரு காரணம். இன்னைக்கு எஸ்.ராவைப் பாராட்ட உலகமே தயாரா இருக்கு. சக எழுத்தாளர்கள் எல்லோரும் பொறாமைப்படாம அவரை பாராட்டிட்டு வர்றாங்க. அதுக்கு காரணம் இவர் எல்லோர் மீதும் வைத்திருந்த நட்புதான்" என்று கூறி அவருக்குப் பொன்னாடை போர்த்தி பெரிய பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்து கௌரவப்படுத்தினார். 

நான்காம் விதி


இவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ``குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டலாம் என்று வந்தேன். ஆனால், எனக்கான பாராட்டு விழாவாக மாத்திட்டார், பார்த்திபன். எனக்கு விருது கிடைச்ச உடன் கிடைக்குற முதல் பாராட்டு இதுதான். விகடன்ல மாணவப் பத்திரிகையாளராதான் ஆரம்பிச்சேன். நிறைய எழுதியிருக்கேன். விகடன்ல நேரடியாப் பணிபுரியலைனாலும் நான் விகடனின் ஊழியன்தான். என்னுடைய எல்லா அங்கீகாரமும் விகடனுக்குச் சொந்தம்தான். என் எழுத்துகளை ரசிச்சுக் கொண்டாடுறது என் வாசகர்கள்தான். ஆனா, அவங்க கொண்டாடுற அளவுக்கு அரசு ஏன் கொண்டாடலைனு ஆதங்கம் இருந்தது. அது இப்போ சரியாகிடுச்சு. இந்த அங்கீகாரம் என் வாசகர்களுக்குதான்" என்றவர் `நான்காம் விதி' படத்தைப் பாராட்டி விடைபெற்றார்.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க