Published:Updated:

``நெல் ஜெயராமன் ஐயாவுடைய ஆசைக்கு நாங்க அணிலாக இருப்போம்..!’’ - பாண்டிராஜ்

சனா

`நெல் ஜெயராமன்' குறித்த தன்னுடைய நினைவுகளை இயக்குநர் பாண்டிராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

``நெல் ஜெயராமன் ஐயாவுடைய ஆசைக்கு நாங்க அணிலாக இருப்போம்..!’’ - பாண்டிராஜ்
``நெல் ஜெயராமன் ஐயாவுடைய ஆசைக்கு நாங்க அணிலாக இருப்போம்..!’’ - பாண்டிராஜ்

``நெல் ஜெயராமனோட என் முதல் அறிமுகம் இன்னும் என் நினைவில் இருக்கு. மூணு வருடத்துக்கு முன்பு ஈரோட்டில் பெரியார் அமைப்பு ஒரு இரவு விழா நடத்துனாங்க. அதில் நான் விருந்தினாரா கலந்துக்கிட்டேன். என்கூட நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஐயாக்களும் கலந்துக்கிட்டாங்க. அந்த சமயத்தில் நான் பெரியார் விருது வாங்கியிருந்தேன். அதனால கெளரவிக்கக் கூப்பிட்டு இருந்தாங்க. ஐயாயிரம் பேர் பார்வையாளர்களாக இருந்த அந்த மேடையில்தான் நெல் ஜெயராமன் ஐயாவை முதலில் சந்தித்தேன்'' என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசத் தொடங்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். 

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாகப் பயணம்செய்து, 150-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் வகைகளை மீட்டெடுத்தவர் `நெல்’ ஜெயராமன். புற்றுநோயால் அவதிப்பட்ட இவர் சில தினங்களுக்கு முன்பு இறந்தார். பலதரப்பட்ட உயரிய விருதுகளை வாங்கியிருக்கும் இவர் நெல் ஜெயராமன் என்கிற பெயர் விருதையும் மக்கள் அன்பால் வாங்கியவர். இவரது நினைவுகள் குறித்து சில விஷயங்களை பாண்டிராஜிடம் பேசினேன். 

``அந்த விழாவில் அவரை சந்திப்பதற்கு முன்புவரை அவரைப் பற்றிய அறிமுகம் எனக்கு இல்லை. அவரைப் பற்றிப் படித்ததுகூட இல்லை. ஆனா, விழா மேடையில் அவரது சிறப்புகளைப் பற்றிச் சொல்லிக் கேட்குறப்போ எனக்கு பிரமிப்பா இருந்தது. அவரை கெளரவிக்கும் விதமாக அங்கே இருந்த எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினோம். அவரின் உழைப்புக்கான மரியாதையா அது இருந்தது. என் பக்கத்தில்தான் உட்கார்ந்தார். நிறைய விஷயங்களை என்கிட்ட பேசுனார். `நல்ல விஷயங்களை சினிமாவுல சொல்லுறப்போ அதோட ரீச் அதிகம். அதனால நீங்க நல்ல விஷயங்களை சொல்லுங்க. விவசாயம் பற்றியெல்லாம் சொல்லுங்க'னு சொன்னார். நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் ஐயா. எனக்கும் விவசாயம் பத்திச் சொல்லணும்ங்கிற ஆசை இருக்கு. சரியான தருணத்துல கண்டிப்பாச் சொல்றேன் ஐயானு சொன்னேன். இந்த உரையாடல்தான் எனக்கும் அவருக்குமான முதல் உரையாடல். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நெல் ஜெயராமன் ஐயா நடத்திட்டு இருந்த `நெல் திருவிழா'வுக்கு என்னை அழைச்சிருந்தார். ஒரு இரண்டு வருடம் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா, என்னால ஷூட்டிங் காரணமா கலந்துக்க முடியல. அதுக்கு அப்புறம் அவரை சந்தித்தது `கடைக்குட்டி சிங்கம்' படத்தோட வெற்றிவிழாவின் போதுதான். இந்த நிகழ்வில் விவசாயிகளை கெளரவுப்படுத்தினோம். அதில் நெல் ஜெயராமன் ஐயாவும் ஒருவர். மூணு வருடத்துக்குப் பிறகு அவரை அப்போதுதான் பார்த்தேன். `அன்னைக்கு நீங்க சொன்னீங்க ஐயா.. என்னால முடிஞ்சளவுக்கு விவசாயம் பற்றிப் பேசியிருக்கேன்'னு சொன்னேன். அவர் சந்தோஷப்பட்டார். அதுமட்டுமல்லாம `கடைக்குட்டி சிங்கம்' படத்தையும் பார்த்திருந்தார். மேடையில் படம் பற்றியும் ரசிச்சுப் பேசுனார். `இயற்கை விவசாயம் பற்றிப் பேசியிருக்கீங்க. நம்மாழ்வார் ஐயாவோட ஆசையும் இதுதான். முக்கியமா படத்துல நாட்டுப் பசு பற்றிச் சொல்லியிருந்தீங்க. ஒரு நாட்டுப் பசு இருந்தா 32 ஏக்கருக்கான எரிபொருளை உண்டாக்க முடியும். இந்த விஷயத்தையெல்லாம் படத்துல தெளிச்சிருந்தீங்க'னு சொன்னார். அதுமட்டுமல்லமா `நான் 150 சாப்ட்வேர் கம்பெனிக்கு ஆலோசகரா இருக்கேன். இயற்கை விவசாயம் பற்றிச் சொல்லுவேன்'னு சொன்னார். `நம்மாழ்வார் கால்நடை இல்லாமல் வேளாண்மை இல்லனு சொல்லுவார். அதை படத்துல சரியாச் சொல்லியிருந்தீங்க'னு மேடையில் சந்தோஷமாப் பேசுனார். 

`பசுமை புரட்சிதான் என்னை மாதிரியான நோயாளிகளை உருவாக்கி விட்டது'னு சொல்லியிருந்தார். இதை சில ஊடகங்கள் நேர்காணலிலும் சொல்லியிருக்கார். `இன்னைக்கு இருக்கிற இளைஞர்கள் விவசாயத்தைக் கையில் எடுக்கணும்'னு சொன்னார். அவர் சொன்னதெல்லாம் ஏதோ நேத்துப் பேசுனது மாதிரியிருக்கு. இன்னைக்கு ஐயா நம்மோட இல்லை; வருத்தமா இருக்கு. 

ஐயா மருத்துவமனையில் இருந்த செய்தி கேட்டவுடனே பார்க்கணும்னு நினைச்சேன். ஆனா, கஜா புயல் பாதிப்பால் சொந்த ஊர் பக்கம் வரவேண்டியதாகி விட்டது. சென்னை வந்து அவரைப் பார்க்கிறதுக்குள்ளே ஐயா இறந்துட்டார். அதனால அவருடைய இறுதி அஞ்சலியில்தான் கலந்துக்கிட்டேன். 

அரசாங்கம்தான் பசுமை புரட்சி இயக்கத்தைக் கொண்டு வந்தது. இது விவசாயிகளுக்கு இடையே ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்திருச்சு. பசுமை புரட்சிங்கிற பெயரில் நஞ்சை விதைக்க ஆரம்பிச்சிட்டோம். நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஐயா சொன்னதுகூட இதைதான். நம்ம சாப்பிட்டு இருக்கிறதெல்லாம் நஞ்சுனு சொன்னார். நெல் ஜெயராமன் ஐயாவுக்குப் புற்றுநோய் இருந்தது அவருக்கே அதிர்ச்சியான விஷயம்தான். `நஞ்சுகளை நானும் சாப்பிட்டதுதான் எனக்கு வருத்தம்’னு சொல்லிட்டு இருந்தார். நம்முடைய நெல் வகைகள் ஒவ்வொன்றிலும் மருத்துவக் குணங்கள் இருக்கு. உணவே மருந்து, மருந்தே உணவு இதைதான் ஐயா சொன்னார். ஆம்பளைகளுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை சம்பா அரிசியைச் சமைச்சுக் கொடுப்பாங்க. இளவட்டகல் தூக்குறதுக்குத் தேவையான தெம்பை இந்த அரிசி கொடுத்தது. அரிசிகளில் அத்தனை சத்துகள் இருக்கு. ஆனா, அதிலேயே கலப்படம் வந்திருச்சேனு ஐயா கவலைப்பட்டார். 10,000 வகையான நெல்கள் இருந்துச்சுனு நம்மாழ்வார் சொல்லுவார். அவ்வளவு பாரம்பர்ய நெல் வகைகளை இழந்துட்டோம். இப்போது இருக்கிற விதை நிலங்கள் எல்லாத்துலேயும் நஞ்சு கலந்திருக்கு. நம்முடைய பாராம்பர்ய நெல் வகைகளை அரசாங்கம் நினைத்தா சேகரிக்க முடியும், விதைக்க முடியும்னு சொல்லுவார். அதனால அரசாங்கம் ஒரு குழு அமைத்து இதை கவனிக்கணும். 

நெல் ஜெயராமன் ஐயாவுடைய `நெல் திருவிழாவை' வருடம் வருடம் சரியாப் பண்ணணும். அதில் நானும் ஒரு ஆளாக இருக்கணும்னு ஆசைப்படுறேன். `நெல் திருவிழாவுக்கு' உண்டான செலவு மற்றும் மற்ற விஷயங்களை நான், கார்த்தி, சூர்யா சார் எல்லோரும் சேர்ந்து செய்வோம். நாங்க மூணு பேரும் சேர்ந்து விவசாய அமைப்பை உருவாக்கிட்டு இருக்கோம். எங்களால முடிஞ்சளவுக்கு நெல் ஜெயராமன் ஐயாவுடைய ஆசைக்கு நாங்க அணிலாக இருப்போம். 

நெல் ஜெயராமன் ஐயா நமக்கு ஒரு பாடம். ஏன்னா, இவ்வளவு நெல் வகைகளை கண்டுபிடித்த அவருடைய உடம்பிலேயே ஒரு நோய் பரவி இருந்துச்சுன்னா, நம்மலாம் எம்மாத்திரம். நமக்கு நல்ல விழிப்புஉணர்வை அவர் ஏற்படுத்திட்டுப் போயிருக்கார். `நடுகல்லாய் மாறிய விதைக்கல்'னு நெல் ஜெயராமன் பற்றி எழுதியிருந்தாங்க. இது உண்மை. நம்ம மனதில் நல்ல விதைகள் விதைச்சிட்டுப் போயிருக்காங்க நம்மாழ்வாரும், நெல் ஜெயராமன் ஐயாவும். இதுக்கு அப்புறம் நம்மதான் சுதாரிக்கணும்'' என்று மனவருத்ததுடன் முடித்தார் இயக்குநர் பாண்டிராஜ்.