வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (14/12/2018)

கடைசி தொடர்பு:17:12 (14/12/2018)

இது தெறிக்கும் தோட்டா...

60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் 'துப்பாக்கி முனை'. பெயரிலேயே திரில்லருக்கு பஞ்சம் இருக்காது என கொஞ்சமாய் ஹின்ட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். டீசரும் அப்படித்தான், துப்பாக்கிகள் வெடி வெடிக்கின்றன, விக்ரம் பிரபுவின் வசனம் இடி இடிக்கிறது. 

கலைப்புலி S. தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது துப்பாக்கி முனை. 'பிர்லா போஸ்' எனும் கதாபத்திரத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கி முனையில் குற்றவாளிகளுக்கு மரண பயம் காட்ட இருக்கிறார் விக்ரம் பிரபு. ஹீரோயின் ஹன்சிகா வெறும் ஜாலி கேலி கேர்ள் அல்ல, பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண், கதைக் களத்துக்கு தேவையான கதாபாத்திரம், எனக் கூறுகிறார் இயக்குனர் தினேஷ்! பிற முக்கிய வேடங்களில் வேல ராம மூர்த்தி மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ளனர். எம்.எஸ். பாஸ்கரின் ஒரு ஷாட்டை மட்டுமே டீசரில் காட்டியுள்ளதால் கதையின் நகர்வை மாற்றியமைக்கக் கூடிய கதாபாத்திரமாக இருக்கலாம் என யூகிக்க வைக்கின்றனர். எல்.வி. முத்து-கணேஷ் இணையின் பின்னணி இசை, துப்பாக்கி-துரத்தல்-த்ரில்லர் டீசரை மேலும் முறுக்கேற்றியுள்ளது.

மணல் பரப்பில் ஜீப்புக்கு மேல் பறக்கும் பருந்து, கானகத்துள் வேனுக்கு முன்பு ஓடும் மயில், மூடும் லிப்டுக்கு நடுவே குறிவைத்துச் சுடும் ஹீரோ என ஒவ்வொரு ஷாட்டுக்கும் மெனக்கட்டுள்ளது தெரிகிறது... ஒளிப்பதிவாளர் ராசாமதி கவனிக்க வைத்திருக்கிறார். அன்பரிவு ஸ்டன்ட்களை இயக்கியுள்ளார். ஆட்களை அசால்டாக அந்தரத்தில் தூக்கிப்போட்டு அசத்துகிறார் விக்ரம் பிரபு, ஸ்டன்ட் காட்சிகள் இணையத்தில் பாராட்டபட்டு வருவதிலேயே படத்துக்கு வரவேற்பு பலமாக இருப்பது தெரிகிறது...

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான விக்ரம் பிரபுவின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஒரு கேஸ், அது என்னவாக இருக்கும்? ஏதோ முக்கியமான ஒன்றைச் சொல்ல இருக்கிறது எனத் தோன்றவைக்கும் காட்சியமைப்புகள், விக்ரம் பிரபுவின் ஸ்டைலான சால்ட் அண்ட் பெப்பர் லுக், இவையெல்லாம் ஹெவியான பில்டப்பைக் கொடுத்து நம்மை சஸ்பென்சில் ஆழ்த்துகின்றன...  டீசரிலேயே அனல் பறக்க தெறிக்கவிட்டிருக்கும் இயக்குனர், படத்தில் பரபரப்பைக் கூட்டும் வகையில் கதையில் என்ன ட்விஸ்ட் வைத்திருப்பார் என்று இப்போதே நகம் கடிக்கும் அளவிற்கு நெஞ்சு திக்..திக் என்று இருக்கிறது. 

"இது ஒரே நாளில் நடக்கும் கதைங்க", எனச் சொல்லி மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறார் இயக்குனர் தினேஷ்.  ஆறு வருடங்களுக்கு முன்பே தினேஷின் முதல் கதையாக  துப்பாக்கி முனை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது தீப்பொறி வருகிற 14ம் தேதி திரையில் தெறிக்க இருக்கிறது. தினேஷின் குரு மணிரத்னம் புகழ்ந்த துப்பாக்கி முனைத் தோட்டா திரையில் சீருமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க