பிரீமியம் ஸ்டோரி

எனக்கு உதவி இயக்குநராகி, அதன்பின் இயக்குநராவதுதான் எண்ணம். ஆனால் உதவி இயக்குநராகப் போனால் நிரந்தர வருமானம் இல்லை என்பதால் வீட்டில் தயங்குகின்றனர். உதவி இயக்குநர்களுக்குக் கல்வித் தகுதி ஏதும் தேவையா, அவர்களுக்கென்று நிலையான வருமானம் இருக்கிறதா?

- சண்முக பாண்டியன், திருநெல்வேலி

தெர்ல மிஸ்!

உதவி இயக்குநர்களுக்கு​ ​நிரந்தர வருமானம்​ என்பது அவர் சேரப்போகிற இயக்குநரையும், தயாரிப்பு​ நிறுவனத்தையும் பொறுத்தது. மாதச் சம்பளம் கொடுக்கும் இயக்குநர்களும் உண்டு. ஒரு படம் முடிந்து, இன்னொரு படம் தொடங்குவதற்குத் தாமதம் ஆனால்கூட சம்பளம் கொடுப்பவர்கள் உண்டு. நான்கூட அப்படித்தான் செய்திருக்கிறேன். ஆனால் சங்க விதி என்று எதுவும் இல்லை. ஆனால் நிறைய உதவி இயக்குநர்கள்​ சரிவர​ கவனிக்கப்படாமல் இருப்பதாக எங்களுக்குப் புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.​ இயக்குநர்கள் சட்ட விதியில் மா​தச் சம்பளம்​ குறித்த எந்த விதியும் இல்லை. ​ இனிவரும் காலங்களில் இதை​ச்​ சாத்தியப்படுத்த, நடைமுறை வேலைகளில்​ ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

அதே மாதிரி இன்றைய சூழ்நிலையில் உதவி இயக்குநராகச் சேர விரும்புபவர்களுக்கு குறைந்த பட்ச​ப் படிப்பறிவும், கணினி அறிவும் அவசியமாக இருக்கிறது. உலக சினிமா​, உள்ளூர் சினிமா குறித்த ஆர்வமும் பார்வையும் வேண்டும். முக்கியமாக திரைப்படங்களை தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும். அப்போதுதான் ரசிகர்களின் நாடித்​ துடிப்பை உணர முடியும்.”

தெர்ல மிஸ்!

-விக்ரமன், தலைவர், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்

நான் 11-வது, காமர்ஸ், பிசினஸ் மேத்ஸ் படிக்கும் மாணவி. சி.ஏ படிக்கவேண்டுமென்பது என் லட்சியம். சி.ஏ ஃபவுண்டேஷன் கோர்ஸும் படித்து வருகிறேன். ஆனால் சி.ஏ. மிகவும் கடினமான படிப்பு என்று சொல்கிறார்கள். அதைத் தனியார் வகுப்புகளில் அல்லது கல்லூரியில்...எதில் படிப்பது சிறப்பு?

- தட்சணா, ஈரோடு

தெர்ல மிஸ்!

“சி.ஏ. ஒரு தொழில் சார் படிப்பு. . இதனை Self learning முறையில் படிக்கலாம். நாட்டின் பல பகுதிகளில் இந்தப் படிப்புக்கான பயிற்சி வகுப்புகள் உள்ளன. இந்திய கணக்குத் தணிக்கையாளர் பயிற்சி நிறுவனத்தின்  (ICAI) கிளை அலுவலகம் ஈரோட்டில் திண்டல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு முழுநேர மற்றும் பகுதி நேர வகுப்புகளும், குறுகிய காலப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்தப் படிப்பு குறித்து சி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.”

-கோபால கிருஷ்ண ராஜூ, இந்திய கணக்குத் தணிக்கையாளர் பயிற்சி நிறுவனத்தின் தென் மண்டல கவுன்சில் உறுப்பினர்.

நான் எனது சொந்த நிலத்தில் சந்தன மரம் அல்லது தேக்குமரம் நட்டால் அதற்கு அரசிடம் அனுமதி ஏதும் வாங்க வேண்டுமா? அப்படி வளர்த்தால் அதை முறைப்படி விற்பனை செய்யமுடியுமா? இன்சூரன்ஸ் எதுவும் செய்யவேண்டுமா?

- க.மதுரை வீரன் , செந்தட்டியாபுரம் .

தெர்ல மிஸ்!

``சந்தன மரம் யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். அதில் எந்தத் தடையுமில்லை. மரம் வளர்ந்து முதிர்ச்சியடைந்த பிறகு அரசாங்கமே அதை வாங்கிக்கொள்ளும். நிச்சயமாக வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது, வனத்துறைக்கு மட்டுமே கொடுக்கவேண்டும். விற்பனை அரசாங்கம் மட்டுமே செய்யலாம். உங்களிடம் மரத்தை வாங்கிக்கொண்டு, ஏலம் நடத்துவார்கள். ஏலத்தில் விற்கப்பட்ட பிறகு கிடைக்கும் தொகையில் 80% பங்கு மரம் வளர்த்தவர்களுக்குக் கிடைக்கும்.’’

முனைவர் கிருபாஷங்கர் IFS, மாவட்ட வனத்துறை அதிகாரி

தமிழ் மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் உள்ள கெட்டவார்த்தைகள் பெண்களை மையமாகக் கொண்ட வார்த்தைகளாகவே இருக்கிறதே, ஏன்?

- யுவன்கார்கி, கரூர்

தெர்ல மிஸ்!

“மொழி உருவான வரலாறு வேறு விதமாக இருக்கலாம்; ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் மொழி என்பது உலகம் முழுவதும் ஆணாதிக்கம் வலுப்பெற்ற பின், உருவான மொழி. அதனால், வசைச் சொற்கள் பெண்களை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் மட்டும், மொழி, இனம், நிறம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இல்லாமல் ஆணாதிக்கம் நிலவுகிறது. பெண்கள் முன்னெடுக்க வேண்டிய போராட்டங்களில் முக்கியமானது மொழி சார்ந்ததும்தான்.”

-ஓவியா, சமூகச் செயற்பாட்டாளர்

வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு