Published:Updated:

``உங்கள் தங்கை `மீ டூ' என்று சொன்னால் சந்தேகப்படுவீர்களா?'' - லட்சுமி ராமகிருஷ்ணன்

``உங்கள் தங்கை `மீ டூ' என்று சொன்னால் சந்தேகப்படுவீர்களா?'' - லட்சுமி ராமகிருஷ்ணன்
``உங்கள் தங்கை `மீ டூ' என்று சொன்னால் சந்தேகப்படுவீர்களா?'' - லட்சுமி ராமகிருஷ்ணன்

ஹாலிவுட்டில் இன்னமும் 'மீ டூ' எனப் பெண்களின் குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. பல பெண்களால் பாலியல் வன்கொடுமை புகார் கூறப்பட்ட பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது, மேலும் ஒரு நடிகையும் பாலியல் புகார் எழுப்பியிருக்கிறார். இந்த நேரத்தில், பிரபலமான ஆண்கள் மீது, பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பும்போது இந்தச் சமூகம் அந்தப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்று இயக்குநரும் திரைக்கலைஞருமான லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.

``பெண்களில் சிலரே இதைச் சரியா புரிஞ்சிக்கலை. 'இது, பெண்களே பெண்களை அசிங்கப்படுத்திக்கிற மாதிரி' என்று என் துறையில் இருக்கிற பெண்களே சொன்னாங்க. முதலில், இந்த எண்ணத்தைப் பெண்களின் மனதில் இருந்து ஒழிக்கணும். மீடியா மனசுவெச்சா அதைச் செய்திடலாம். 

தாங்கள் பாதுகாப்பா இருக்கிற பெண்கள், `பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் வாங்கித் தர போலீஸ் இருக்கு, கோர்ட்டு இருக்கு'ன்னு சொல்றாங்க. இல்லைன்னா, `இந்த அசிங்கத்தையெல்லாம் எதுக்கு வெளியே சொல்லணும்'ங்கிறாங்க. நான் கேட்கிறேன், பாதிக்கப்பட்டவங்க ஏன் அசிங்கப்படணும்?

சமூக வலைதளங்களில் ஒரு குரூமிங் நடக்குதுங்க. மக்கள் எப்படி சிந்திக்கணும்னு ஒரு சிலர் முடிவு பண்ணி, சமூகத்தை நகர்த்திட்டு வர்றாங்க. பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை எழுப்பும்போதெல்லாம் இப்படிப்பட்டவர்களுடைய ஆபாச கமென்ட்ஸ், அந்தப் பெண்களுடைய நியாயங்களை அப்படியே அமிழ்த்தி விட்டுடுது. பொதுமக்களிலும் நிறைய பேரு,  சமூக வலைதளங்களில் மெஜாரிட்டியா என்ன கருத்துப் பரவுதோ, அதுதான் சரின்னு நினைச்சுக்கிறாங்க. மீறி ஒரு சிலருக்கு நியாயம் தெரிஞ்சாலும், நமக்கெதுக்கு வம்பு என்று பாலியல் குற்றச்சாட்டுகளைக் கடந்துடுறாங்க. ஆனா, இதெல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது.

நம்ம வீட்டில் ஒரு பெண், 'அண்ணா, ஒரு ஆளு என்கிட்ட அத்துமீறி நடக்கப் பார்த்தார்'னு சொன்னா அந்த ஆண் நம்புவான் இல்லையா. சொந்த தங்கைக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு சாட்சி கேட்பானா ஒரு ஆண். கேட்க மாட்டான் இல்லையா. தங்கையால் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆண், சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், தங்கை சொல்வதைத்தான் நம்புவான் இல்லையா. இந்த 'நம்ம வீட்டுப் பெண்' அப்படிங்கிற மனப்பான்மை வந்தால் தான், `மீ டூ' என்று சொல்கிற பெண்களை இந்தச் சமூகம் பரிவாகப் பார்க்கும். அதைவிட முக்கியமாக நம்பும்'' என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.