Published:Updated:

இந்த வாழ்க்கை! எனக்கொரு வரம்! - உமா ரியாஸ்

இந்த வாழ்க்கை! எனக்கொரு வரம்! - உமா ரியாஸ்
பிரீமியம் ஸ்டோரி
இந்த வாழ்க்கை! எனக்கொரு வரம்! - உமா ரியாஸ்

உறவுகள்... உணர்வுகள்...

இந்த வாழ்க்கை! எனக்கொரு வரம்! - உமா ரியாஸ்

உறவுகள்... உணர்வுகள்...

Published:Updated:
இந்த வாழ்க்கை! எனக்கொரு வரம்! - உமா ரியாஸ்
பிரீமியம் ஸ்டோரி
இந்த வாழ்க்கை! எனக்கொரு வரம்! - உமா ரியாஸ்

``என் பசங்களைப் பார்க்கிற எல்லாரும், `அருமையா வளர்த்திருக்கீங்க... ரெண்டு பேரும் ரொம்ப நல்ல பசங்க’னு பாராட்டாம இருக்க மாட்டாங்க. நல்லது கெட்டதைச் சொல்லிக்கொடுக்க, அவங்களுக்கு வீட்டுல பெரியவங்க இருந்தாங்க, இருக்காங்க. அந்த வகையில நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்’’ - பேச ஆரம்பிக்கும்போதே பெருமிதம் பொங்குகிறது உமா ரியாஸுக்கு.

நடிகை உமா, கமலா காமேஷின் மகள்; பிறகு ரியாஸ்கானின் மனைவி என்றெல்லாம் அறியப்பட்டவர். இப்போது `பிக் பாஸ்’ ஷாரிக்கின் அம்மாவாக இன்னும் பாப்புலர். மகனுக்குக் குவியும் பாராட்டுகளால் ஈன்றபொழுதின் பெரிதுவந்து நிற்கிறார் உமா.

பெற்றோரையே சுமையாக நினைக் கும் பிள்ளைகளுக்கு மத்தியில், உமா தன் அம்மாவையும் மாமியாரையும் தன்னுடனேயே வைத்துப் பார்த்துக் கொள்கிறார். இது அவரது பெருந் தன்மை மட்டுமல்ல, அவரின் அம்மா, மாமியாரின் பெருந்தன்மையும்தான். `வயதானவர்கள், யாரோடும் இணக்கமாக இருக்க மாட் டார்கள்’ என்கிற பொதுக்கருத்தை உடைத்திருக்கிறார்கள். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இவர்கள் குடும்பமே சரியான உதாரணம்.

இந்த வாழ்க்கை! எனக்கொரு வரம்! - உமா ரியாஸ்

``கல்யாணம் என்பது, ஆயுசுக்குமான கமிட்மென்ட். அதை வெற்றிகரமா தொடரும் பொறுப்பு கணவன் மனைவிக்கு இருக்கணும். விட்டுக்கொடுக்கவோ, உறவுகளை அனுசரிக் கவோ தெரியாதவங்களுக்குக் கல்யாணமே தேவையில்லை’’ - கமிட்மென்ட்டை வெற்றி பெறச் செய்த நிறைவில் தொடர்கிறார் உமா.

``அந்தக் காலத்தில் ஹீரோயின்கள் கொழுகொழுனு இருந்தாதான் வாய்ப்புகள் கிடைக்கும். சிம்ரனும் த்ரிஷாவும் வந்த பிறகுதான் ஒல்லியான ஹீரோயின்கள் பிரபலமாக ஆரம்பிச்சாங்க. ஒல்லியான எனக்கு, பெருசா வாய்ப்புகள் அமையலை. சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு லைஃப்ல செட்டிலாகிடணும்னு நினைச்சேன். ரியாஸைச் சந்திச்சேன். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை இன்னும் சந்தோஷமா மாறும்னு தோணினது. கல்யாணமானபோது எனக்கு 18 வயசு. ரியாஸுக்கு 20 வயசு. அன்பைத் தவிர வேற எதுவும் எங்களுக்குத் தெரியலை. எந்த ஐடியாவும் இல்லாம திருமண வாழ்க்கையில அடியெடுத்து வெச்சோம்.

ரியாஸ், அவங்க வீட்டுக்கு ஒரே பையன்; ஒரே பேரன். அவர் வீட்டுல அவருடைய கல்யாணத்தைப் பத்தி நிறைய கனவுகள் கண்டிருப்பாங்க. நானும் அவரும் கல்யாணம் பண்ணிக்கிட்டபோது, அது அவங்க எதிர்பார்ப்புகளுக்கு நேரெதிரா இருந்திருக்கும். அந்தச் சின்ன அதிர்ச்சி அவங்களுக்கு இருந்தது. அதுலேருந்து மீண்டுவர கொஞ்சம் காலம் பிடிச்சது. அதெல்லாம் மூத்த மகன் ஷாரிக் பிறக்கிற வரைக்கும்தான். அப்புறம் லைஃப் ரொம்ப சுமுகமாகிடுச்சு’’ - அம்மாவின் பேச்சை ஆளுக்கொரு பக்கம் அமர்ந்தபடி ரசிக்கிறார்கள் ஷாரிக்கும் அவரின் தம்பி சமர்த்தும்.

ஷாரிக் இஸ்லாமியப் பெயர், சமர்த் சம்ஸ்கிருதம்.

``கல்யாணத்துக்குப் பிறகு உங்களுக்குள்ள கல்சுரல் ஷாக் எதுவும் வரலையா?’’

``எங்க ரெண்டு பேர் மதங்களைச் சார்ந்த பண்டிகைகள் மட்டுமில்லாம, கிறிஸ்துமஸ்கூடக் கொண்டாடு வோம். பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் உருவாக்கினதே மனுஷங்க தான். அதுல எதுக்கு பேதம்? கல்யாணமான புதுசுல ரம்ஜான் பண்டிகை வந்தபோது நான் ஃபாஸ்டிங் இருந்திருக்கேன். நான் கர்ப்பமானபோது எங்க அம்மா சீமந்தம் நடத்தினாங்க. ஹோம சடங்கை முழு மனசோடு ரியாஸ் பண்ணினார். ஆரம்பத்திலேருந்து எங்களுக்குள்ள பரஸ்பரமான அந்தப் புரிந்துணர்வு இருந்தது, இருக்கு...’’ - உண்மையாகப் பேசுகிறவர், மகன்களை வளர்ப்பதிலும் ஈகோ எட்டிப்பார்க்க அனுமதிக்கவில்லை என்கிறார்.

``உங்க மனசுக்கு என்ன தோணுதோ அதைச் செய்யுங்கனு சொல்லித்தான் என் பசங்களை வளர்த்திருக்கேன். கடவுளை வேண்டுறது உள்பட எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும். பசங்க பிறந்த பிறகு, வாழ்க்கை இன்னும் அழகானதா ஃபீல் பண்றோம். எங்க வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க எங்களுக்கு உரிமை இருந்த மாதிரி, எங்க பசங்களுக்கும் இருக்குனு நம்புறோம்.  நல்லது, கெட்டதைச் சொல்லிக் கொடுக்கிறது மட்டும்தான் பெற்றோரின் வேலை’’ - பிள்ளை வளர்ப்பு என்பதும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட பொறுப்பு என்கிறது உமாவின் பேச்சு.

``மாமனார் தவறி பல வருஷமாச்சு. எனக்கும் அப்பா கிடையாது. வயதான ரெண்டு பெண்களைப் பார்த்துக்கிறதைவிடப் பெரிய விஷயம் வாழ்க்கையில வேற என்ன இருக்கப்போகுது?  எங்கம்மா என்னை `அம்மா’னுதான் கூப்பிடுவாங்க. மாமியாருக்கு நான் மாமியார். அம்மாவுக்கோ, மாமியாருக்கோ உடம்புக்கு முடியலைனா நான்தான் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போவேன். ரெண்டு பேருக்கும் செய்யவேண்டியதை குறைவைக்காமப் பண்ணிடு வேன். அம்மாவுக்குக் காரம் இல்லாத சாப்பாடு கொடுக்கணும். மாமியாருக்கு அசைவச் சாப்பாடு. ரெண்டு சமையலானு நான் அலுத்துக்கிட்டதே இல்லை.

ஏதோ கோபத்துல அவங்க பேசற வார்த்தைகளை நான் என்னிக்கும் பெருசா எடுத்துக்க மாட்டேன். `என்னை மதிக்கணும், நான் சொல்றதைக் கேட்கணும்’ங்கிற எண்ணம் சின்னவங்கள்லேருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் இருக்கும். அதைச் செய்துட்டாலே திருப்தியாகிடுவாங்க. வேற வேற கலாசாரத்தைச் சேர்ந்த ரெண்டு பாட்டிகளோடு ஒரே வீட்டுல வாழற கொடுப்பினை என் பசங்களுக்குக் கிடைச்சிருக்கு. மொத்தத்துல இந்த வாழ்க்கை எனக்கொரு வரம்’’ - சொல்லி முடித்தவரை அணைத்துக்கொள் கிறார்கள் அம்மாக்கள் இருவரும்.

அது அன்பாலே அழகான வீடு!

-ஆர்.வைதேகி,   படம் : ப.சரவணகுமார்