வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (21/12/2018)

கடைசி தொடர்பு:14:45 (21/12/2018)

`திரைத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அம்மாவே பதில் சொல்லணும்னு நினைப்பாங்க!’ - கடம்பூர் ராஜு

தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க துவக்க விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியது

திரையரங்கு மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தமைக்காக தமிழக அரசுக்குப் பாராட்டு விழாவும் 'தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க'த் துவக்க விழாவும் ஒரே மேடையில் சமீபத்தில் நடந்தது. அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்ரமணியன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திரையரங்கு உரிமையாளர்களும். திரைப்பட விநியோகிஸ்தர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.

கடம்பூர் ராஜு

கடம்பூர் ராஜு பேசியபோது, ``நாங்கெல்லாம் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்தே அரசியல் கத்துக்கிட்டோம். அடுத்து எம்.ஜி.ஆர் வழியிலேயே அம்மாவும் சினிமாவிலிருந்தே அரசியலுக்கு வந்தாங்க. அதனால அம்மா காட்டிய வழியில் நடக்கிற இந்த `சர்கார்' சினிமா தொடர்புல இருக்கிற உங்களோட சர்கார். 'சர்க்கார்'ங்கிற வார்த்தையைக் கேட்டதும், உங்க நினைப்பு வெறெங்கும் போனா அதுக்கு நான் பொறுப்பில்லை. நான் சொல்றது நாங்க நடத்திக்கொண்டிருக்கிற சர்க்காரை' எனக் கலகலப்பூட்டியவர், 'சர்கார்'னும் ஒரு சர்ச்சை கொஞ்ச நாளுக்கு முன்னாடி வந்தது. அப்பக்கூட தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்தாங்க. அந்த சர்ச்சைக்குப் பிறகு நடந்தையெல்லாம் பேசினா நாகரிகமா இருக்காது' என்றார்.

கடம்பூர் ராஜு

தொடர்ந்து, ``செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரா நான் பதவியேற்ற உடனேயே எங்கிட்ட ஒரு விஷயத்தைச் சொன்னாங்க. `உங்க துறையிலதான் சினிமாவும் வருது. சட்டமன்றத்துல அது தொடர்பான விவாதம் வர்றப்ப மட்டும், நீங்க டக்னு எழுந்து பதில் சொல்லிட வேண்டாம். சபையில அம்மா இருந்தா, அவங்கள ஒரு முறை பார்த்துக்கோங்க. ஏன்னா, பெரும்பாலும் சினிமா தொடர்பான கேள்விகளுக்கு அவங்களே பதில் சொல்ல விரும்புவாங்க. நீங்க பார்த்தா, ஒரு கண்ணசைவில் அதை உங்களுக்கு உணர்த்திடுவாங்க. அவங்ககிட்ட இருந்து ரியாக்‌ஷன் வராதப்ப மட்டுமே நீங்க எழுந்து பேசுங்க'ன்னாங்க. இதை எதுக்குச் சொல்றேன்னா, அரசியலுக்கு வந்து பல வருடங்களான பிறகும் சினிமா மீது அம்மாவுக்கு ஒரு பிரியம் இருந்துட்டே இருந்ததுங்கிறதுதான் நிஜம்' என்றபடி தனது பேச்சை முடித்தார்.