Published:Updated:

``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்

``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்
``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்

தமிழ் சினிமாவில் 1980-களில் வந்த வருஷம் 16, அஞ்சலி, தளபதி முதல் சமீபத்தில் வந்த செக்கச் சிவந்த வானம் வரை பல படங்களில் நடித்த, நடிகர் சீனு மோகன் இன்று மரணமடைந்தார். 

கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகக் குழுவில் ஆரம்பத்திலிருந்தே இடம்பெற்றுவந்த மோகன், கிரேஸி மோகனின் பல நாடகங்களில் ‘சீனு’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து  'சீ'னு' மோகன் ஆனார். மேடை நாடகங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிய சீனு மோகன் 3000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளதோடு, குறும்படங்களிலும் நடித்துள்ளார். 

'சீ'னு' மோகன் குறித்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துக்கொண்ட கிரேஸி மோகன்  ``சீனுவோட மறைவு மிகப்பெரிய இழப்பு சார் எனக்கு. உங்களோட போன் அழைப்பை ஏற்க முடியாததற்கு காரணமும் அதுதான். என்னுடைய நெருங்கிய  நண்பர்களிடம் சீனுவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். காலையில் சீனுவுக்கு இப்படி ஆகிடுச்சுன்னு, சீனுவோட அப்பா எனக்கு போன் பண்ணிச் சொன்னாரு. உடனே, போய்ச் சீனுவைப் பார்த்துட்டு வந்துட்டேன். அவன் இறந்துவிட்டான் என்பதை என்னால் நம்பவே முடியலை.

ரொம்ப அர்ப்பணிப்பான மனிதன் சீனு. நான் நாடகம் நடத்தும்போது, ஒண்றரை மணி நேரத்துக்கு ஸ்டாண்ட்-அப் காமெடி மாதிரி ஸ்டேஜ்ல பண்ணிட்டு இருப்பேன். அவ்வளவு நேரம் காமெடி பண்றதால எனக்கு தொண்டை வறண்டு போயிடும். எனக்காக டீ வாங்கிட்டு வருவாங்க சீனு. அதுல, இருந்து எனக்கு பர்சனலா ரொம்ப க்ளோஸ் ஆகிட்டான்.

நான் நாடகத்துக்கு போறதுக்காக கம்பெனியில் இருந்து எனக்கு மட்டும் தனி கார் அனுப்புவாங்க. அதுல நான் மட்டும்தான் போவேன். என் தம்பிகூட அந்த கார்ல வந்தது கிடையாது. சீனு மோகன்தான் என் கூட வருவான். என்னோட சொந்தத் தம்பி மாதிரிங்க சீனு. அவனுடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. செம்ம ஜாலியான டைப். என்னோட, `மைக்கேல் மதன காம ராஜன்' படத்தை பார்த்துட்டு `இது ஒரு சகாப்தமா மாறப்போகுதுன்னு சொன்னான். தொடர்ந்து, என்னுடைய வேலைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துட்டே இருப்பான்.

சீனுவோட நடிப்பில் எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்னா அது `தளபதி' தான். சினிமான்னா, அவனுக்கு ரொம்ப ஆசை. கார்த்திக் சுப்புராஜோட இறைவில அவ்வளவு பிரமாதமா நடிச்சிருந்தான். சமீபத்தில், இரண்டு நாளைக்கு முன்னாடி தான் சீனுவைப் பார்த்துப் பேசினேன். ரொம்ப நல்லாத்தான் இருந்தான். நல்லா பேசிக்கிட்டு இருந்தோம். இப்படி ஆகிப்போச்சு. ரொம்ப நாளா டிராமால நடிக்காமலே இருந்தான். சீனு இல்லாத டிராமா இனிமே எப்படிங்க என்னால போட முடியும்?" எனக் கவலையுடன் தனது பேச்சை நிறைவு செய்தார் 'கிரேஸி' மோகன்.