‘இந்திய சினிமாவின் பிதாமகன்’ மிருணாள் சென் காலமானார்! | legendary filmmaker Mrinal Sen passes away at 95

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:16:00 (30/12/2018)

‘இந்திய சினிமாவின் பிதாமகன்’ மிருணாள் சென் காலமானார்!

இந்திய சினிமாவின் பிதாமகர்களில் ஒருவரான மிருணாள் சென் வயது மூப்பு காரணமாக இன்று காலை கொல்கத்தாவில் காலமானார். 95 வயதான இவர் கடந்த சில நாள்களாகவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார். 

மிருணாள் சென்

இந்திய சினிமா  அவருடைய கை பிடித்து நடை பழகியதுதான் என்று சொல்லலாம். இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு  உயர்த்திய இயக்குநர்களில் இவரும் ஒருவர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மிருணாள் சென் இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் ஆகிய 4 மொழிகளில் ஏறக்குறையத் 30 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் 4 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். 

80-களில் இருந்த பெண்களின் கலாச்சாரத்தை மாற்றி மக்களிடையே ஒரு புதிய அதிர்வுகளை கொண்டுவந்ததில் இவரின் பங்கு பெரியது.  இவரின் திரைப்படங்கள் அனைத்தும் நடுத்தர வகுப்பு மக்களின் குடும்பப் பிரச்னைகளை சித்தரிக்கும் படங்களாக, குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை. இவர் இயக்கி 1969-ம் ஆண்டு வெளியான ‘புவன் ஷோம்’  என்ற மிருணாள் சென்னை உலக அளவிலும் இந்திய அளவிலும் பெரிய இயக்குநராக அடையாளப்படுத்தியது. 

இவரின் பல திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது கேன்ஸ், வெனிஸ், மாஸ்கோ, பெர்லின் உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதுகளை வென்றன. இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்படப் பல விருதுகளை வென்றுள்ளார். 

இவரது இறப்புக்குப்  அரசியல் தலைவர்கள், இந்திய திரைத் துறையினர் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும்,  இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.