Published:Updated:

'தானே' அழிந்த நகரங்களின் கதை!

டி.கலைச்செல்வன், ரீ.சிவக்குமார், க.பூபாலன்படங்கள் : ஜெ.முருகன், எஸ்.தேவராஜன்

'தானே' அழிந்த நகரங்களின் கதை!

டி.கலைச்செல்வன், ரீ.சிவக்குமார், க.பூபாலன்படங்கள் : ஜெ.முருகன், எஸ்.தேவராஜன்

Published:Updated:
##~##

'எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே’ என்பதுபோல...  புதுவையின் அனைத்துச் சாலைகளும் கடற்கரையை நோக்கியே நீள்கின்றன! அழகிய சாலைகள்,பாரம் பரியக் கட்டடங்கள், அடர்ந்து நிற்கும் மரங்கள், உபசரிப்புக் கலாசாரம் ஆகியவை பொதிந்துகிடந்த புதுவையின் அழகு இன்று பாழ்பட்டுக்கிடக்கிறது.

 இன்னொருபுறம் வள்ளலார் முதல் ஜெயகாந்தன் வரை தமிழகத்துக்குப் பல ஆளுமைகளைத் தந்த கடலூரும் சிதைந்துகிடக்கிறது. காரணம், 'தானே’ புயல். தங்கள் அனுபவத்தில் புதுவை- கடலூர் நகரங்களைச் சிதைத்த புயல்பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்கள் இந்த நகரங்களைச் சேர்ந்த பிரபலங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லெட்சுமி நாராயணன்,  
புதுவை முன்னாள் கல்வித் துறை அமைச்சர்

'தானே' அழிந்த நகரங்களின் கதை!

'' 'தானே’வை இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய புயல் என்று சொல்லலாம். சில மணி நேரங்களில் வலுவிழக்கும் புயல்களில் இருந்து 'தானே’ விதிவிலக்கு! மதியம் 11 மணிக்குத் துவங்கி மறுநாள் மாலை வரை நீடித்தது அதன் வீரியம். குடிசை வீடுகள், கூரை வீடுகள், மண் மேடுகள், அடுக்கு மாடிக் கட்டடங்கள், மாளிகைகள் என்று வழியில் இருந்த அனைத்தையும் நிர்மூலம்ஆக்கிவிட்டுச் சென்றுள்ளது.

'தானே' அழிந்த நகரங்களின் கதை!

2006 சுனாமியின்போதுகூட, புதுச்சேரி இவ்வளவு பெரிய இழப்பைச் சந்திக்கவில்லை. வானிலை ஆய்வு மையமும், ஊடகங்களும், 'கடும் புயல் தாக்கும்’ என்று எச்சரித்த பின்னரும் புதுச்சேரி அரசு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களிலும் ஈடுபடவில்லை. ஒருவேளை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தால் பல சேதங்களைத் தவிர்த்து இருக்கலாம். அல்லதுகுறைந்த பட்சம் மிக விரைவிலேயே இயல்பு நிலைமைக்குத் திரும்பி இருக்கலாம். பல கிராமங்களில் மக்கள் குடிக்கக் கூடத் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். ஒரு பக்கம் இயற்கைச் சீற்றம், மறுபுறம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எந்த ஒரு நிவாரணமோ, நஷ்ட ஈடோ தராமல் அலைக்கழித்த அவலம், சுனாமி நிவாரணம்போல பாதிக்கப்பட்டவர்களை ஐந்தாறு வருடங்கள் அலைக்கழிக்காமல் விரைவில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் சேர்ப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்!''                          

டாக்டர் பா.ஸ்ரீகாந்த் ஐ.பி.எஸ்.,
முதுநிலை காவல் துறைக் கண்காணிப்பாளர்

'தானே' அழிந்த நகரங்களின் கதை!

''1990-ம் ஆண்டு புதுச்சேரிக்குப் பணி மாற்றலாகி வந்தேன். தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த என்னைப் புதுச்சேரி என்னும் அழகு நகரம் பிரமிக்கவைத்தது. பிரெஞ்சுக் காலக் கட்டடங்கள், நேர்க்கோடு சாலைகள், அந்தச் சாலைகளின் இரு பக்கங்களிலும் பசுமையாக வளர்ந்து நிற்கும் மரங்கள் மற்றும் புதுச்சேரி மக்களின் கலாசாரம் என புதுச்சேரி மீது நான்கொண்ட காத லுக்கு அளவே இல்லை. இவை அனைத்திலும் என்னை மிக அதிகமாகக் கவர்ந்தது புதுச்சேரியின் நீண்ட கடற் கரைதான். அதனாலேயே எனக்கு வரும் இடமாற்றங்களைத் தவிர்க்க முடியாமல் புதுப் பணியை ஏற்று, அதனை முடித்து விட்டு ஒரு சில ஆண்டுகளில் புதுச்சேரிக்குத் திரும்பிவிடுவேன். ஒவ்வொரு முறை புதுச்சேரிக்கு வரும்போதும், பிரிந்த காதலியை மீண்டும் பார்ப்பதைப் போல உணர்கிறேன். ஆனால், புதுச்சேரிக்கு அழகு சேர்த்த, அதிலும் எனக்குப் பிடித்தமான கடல், ஒட்டுமொத்த புதுச்சேரியையும் நிலை குலையச் செய்தது சோகம்தான். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் விழுந்து புதுச்சேரி வீதிகளை அலங்கோலமாக்கி உள்ளது. பசுமையை இழந்து நிற்கும் புதுச்சேரியில், ஒவ்வொருவரும் மரக் கன்றுகளைவைத்து அதனை மீண்டும் பொலிவு பெறச் செய்ய வேண்டும். இதுவே 2012 புத்தாண்டுக்கான எனது உறுதிமொழி!''

பிரபஞ்சன், எழுத்தாளர்

'

'தானே' அழிந்த நகரங்களின் கதை!

'தானே புயலை மற்றுமொரு புயல் என்றுதான் நாங்கள் நினைத்து இருந்தோம். ஆனால், ஏறக்குறைய சுனாமி அளவுக்கு அது பாதிப்பை ஏற்படுத் தும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கடந்த 50, 60 ஆண்டுகளில் நான் பார்த்த புயல்களில் தானே தான் பயங்கரமானது. 1916-ல் பாரதி புதுச்சேரியில் தங்கி இருந்தபோது வீசிய புயலைப் பற்றிப் பாடல்களிலும் வசனங்களிலும் பதிவுசெய்து இருக்கிறார். 'புதுச்சேரியில் ஒரு மரம்கூடப் பிழைக்கவில்லை’ என்று அவர் எழுதிஇருக்கிறார். அதற்குப் பிறகு இப்போது வீசிய புயல்தான் பெரும்புயல் என்று கருதுகிறேன். ஊரில் இன்னும்கூடப் பல பகுதிகளில் மின்சாரம் வரவில்லை. தகவல் தொடர்பு முற்றிலும் அழிந்து இருக்கிறது. கூரை வீடுகள், குடிசை வீடுகள் சுத்தமாகத் துடைத்தெறியப்பட்டு உள்ளன. உணவு விடுதிகளை நம்பி வாழும் மக்கள் மூன்று நாட்கள் உணவின்றித் தவித்ததை நான் பார்த்தேன். நிலைமை சீராக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றே நினைக்கிறேன்!''  

வேல்முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

'தானே' அழிந்த நகரங்களின் கதை!

''கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளும் மீனவர்களும்தான் அதிகம். அத்தியாவசியப் பொருட்களின் விலை என்னதான் உயர்ந்து இருந்தாலும் விவசாயிகள் நெல், கோதுமை, கம்பு, சோளம், கரும்பு, முந்திரி, தேக்கு என்று முப்போகமும் விவசாயம் செய்து செழிப்பான மாவட்டமாகக் கடலூரை வைத்திருந்தார்கள். அதே சமயம், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மீன் பிடித் தொழில் உள்ளது. அமோக விளைச்சல் கொடுத்த நிலங்களும், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரமாகக் கிடைத்த மீன்களும்தான் கடலூர் மக்களின் முக்கிய வாழ்வாதாரங்கள். ஆனால் இன்று, ஒரே நாளில் எல்லாமே தலைகீழ்! விவசாய நிலம் இல்லாமல், தங்க வீடு இல்லாமல், உண்ண உணவு இல்லாமல், குடிக்கத் தண்ணீர் இல்லாமல் வாழும் அவலநிலையை எட்டிவிட்டது கடலூர். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுவதும் அரசு அதிகாரிகளின் வேகமான நடவடிக்கை களும்தான் இந்த நிலையை மாற்றும் என்று நம்புகிறேன்!''

ஆயிஷா நடராஜன், எழுத்தாளர்

'தானே' அழிந்த நகரங்களின் கதை!

''புயலால் கடலூருக்குப் பாதிப்பு என்பது புதிது இல்லை. ஒரு சிறப்பு மிக்க விருந்தாளி வந்து போவதைப் போல அடிக்கடி புயல் வந்துபோகும். வழக்கமாக, தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில்தான் புயல் கரையைக் கடக்கும். ஆனால், 'என் திசையைத் தீர்மானிக்க நீ யார்?’ என்கிற ஆக்ரோஷத்தோடு கடலூரைச் சூறையாடிவிட்டுச் சென்றுள்ளது 'தானே’! 1992 புயலில் கடலூர் சிப்காட் பகுதியில் சில ரசாயனத் தொழிற்சாலைகள்தான் இருந்தன. புயல் வந்த சமயம் அந்த நிறுவனங்களுக்குப் பெரிய பேட்டரிகள் ஏற்றி அனுப்பப்பட்டன. மின்சாரம் இல்லாதபோது ரசாயன நிறுவனத்தின் பாய்லர்களை இயக்க இந்த பேட்டரிகள் தேவை. ஒருவேளை பேட்டரிகள் இயங்காவிட்டால், அந்த பாய்லர்கள் வெடித்து ரசாயனங்கள் காற்றில் கலந்து பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அந்த முன்னெச்சரிக்கை. தற்போது கடலூரில் 12 ரசாயன நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் முன்னேற்பாடுகளுடன் இருந்ததால் எந்தப் பாதிப்புகளும் இல்லை. இயற்கைச் சீற்றங்களைப் பாதுகாப்பாக எதிர்கொள் வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதில் பல படிகள் நாம் முன்னேற வேண்டும்!''