Published:Updated:

`சாப்பாட்டைவிட இளையராஜா இசைதான் முக்கியம்னு சொல்லுவாங்க!' - நடிகர் பார்த்திபன் பேச்சு

`சாப்பாட்டைவிட இளையராஜா இசைதான் முக்கியம்னு சொல்லுவாங்க!' - நடிகர் பார்த்திபன் பேச்சு
`சாப்பாட்டைவிட இளையராஜா இசைதான் முக்கியம்னு சொல்லுவாங்க!' - நடிகர் பார்த்திபன் பேச்சு

இளையராஜாவின் 75 அகவையை முன்னிட்டு, தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், பிப்ரவரி 2, 3-ம் தேதிகளில், பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், இந்தியாவில் உள்ள அனைத்து திரைத்துறை கலைஞர்களும் கலந்துகொண்டு இளையராஜாவை கெளரவிக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடக்க விழா, செங்கல்பட்டு அருகே உள்ள மஹிந்திரா வேல்டு சிட்டியில் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற பலூன் திருவிழாவின் ஒரு நிறைவாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், “தமிழ்நாட்டுல லேட்டஸ்ட்டா வைரலா போய்க்கிட்டு இருக்குற விஷயம் சங்கம் முக்கியமா… சாப்பாடு முக்கியமா தான். வீடியோவில் இருக்கும் அந்த பொடிப்பையன், சாப்பாடுதான் முக்கியம்னு சொல்லுவான். ஆனா, உலகத்துல இருக்குற எல்லோருக்கும் சாப்பாடு முக்கியமா இளையராஜா இசை முக்கியமான்னு கேட்டா, இளையராஜா இசைதான் முக்கியம்னு சொல்லுவாங்க. நமது வாழ்க்கைப் பயணத்தை கலர்ஃபுல்லாக்குவது இளையராஜா இசைதான். தொலைதூரப் பயணம் போகும் டிரைவர்களைக் கேட்டுப்பாருங்க. வண்டியில டீசல் இல்லாட்டாலும், பெட்ரோல் இல்லாட்டாலும் இளையராஜா இசை இருந்தால் கவலைப்படாமல் போய்க்கொண்டிருப்பான்” என்றார்.

அடுத்து பேசிய மன்சூர் அலிகான், “ இன்றைய தேதியில், தமிழகம் முழுவதும் பிரச்னைக்குரிய பூமியாக மாற்றப்பட்டுள்ள நிலையில் அவரின் பாடல்கள்தான் நம்ம மனசை இலகுவாக்கி வைத்திருக்கிறது. நான் இன்றைக்கு உண்ணாவிரதம், முக்கியமா ‘மௌனவிரதம்’  இருக்கிறேன்'' என்கிறார்.

அடுத்து பேசிய நடிகர் விஷால், “என் வாழ்க்கையில் என்கூடவே பயணம் செய்வது இளையராஜா இசைதான். பூட்டுப் போட்டு பிரச்னையான சம்பவத்தில் வண்டியில் ஏறும்போது, தென்றல் வந்து தீண்டும்போது பாட்டுதான் கேட்டேன். இளையராஜாவுக்கு விழா எடுப்பது நமக்குக் கிடைத்த பாக்கியம். சென்னையில் நடக்கும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில், ஒட்டுமொத்த திரைத்துறையினரும் கலந்துகொண்டு, இளையராஜா விழாவைச் சிறப்பிப்பார்கள்” என்றார். இதைத் தொடர்ந்து, 25,000 மதிப்புடைய முதல் டிக்கெட்டை நாசர் மற்றும் கமீலா நாசர் பெற்றுக்கொண்டனர். மைக்ரோ பிளேஸ் நிறுவனத்தின் இயக்குநர், 2.5 லட்ச ரூபாயில் 10 டிக்கெட் வாங்கினார்.

நிறைவாகப் பேசிய இளையராஜா, “என்னை எல்லோரும் கடவுள்னு சொல்றாங்க. நாள் கடவுள் கிடையாது. எலும்பும் சதையும் இருக்கும் உங்களில் ஒருத்தன். நீங்க விடும் மூச்சை நான் இழுக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சராசரி மனிதன்” என்றவர், தனக்கே உரிய பாணியில் பாடத் தொடங்கினார்.

“உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே... பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை. ராகங்கள் கோடிகோடி... அதுவும் புதிதில்லை” என்ற காந்தக் குரல் மேடையில் ஒலிக்க, கைதட்டலால் அதிர்ந்தது மைதானம்.