Published:Updated:

ராயல்டி குறித்து விரைவில் இளையராஜா முக்கிய அறிவிப்பு - விஷால் தகவல்

ராயல்டி குறித்து விரைவில் இளையராஜா முக்கிய அறிவிப்பு - விஷால் தகவல்
ராயல்டி குறித்து விரைவில் இளையராஜா முக்கிய அறிவிப்பு - விஷால் தகவல்

‘இளையராஜா 75’ கொண்டாட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள். ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியின் முன்னோட்டமாக  அதன் டிக்கெட் விற்பனை தொடக்க விழா செங்கல்பட்டு அருகே உள்ள மஹிந்திரா வேல்டு சிட்டியில் நடைபெற்றது. பலூன் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், இசையமைப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியின் நாயகன் இளையராஜா!

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் சங்கத் தலைவர் தினா, ``இளையராஜா என்னும் இசைக் கடவுள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் இசையைக் கொடுத்து வருபவர். அவரின் இசையை 45 வருங்களாக கேட்டுகேட்டு ஊறிப்போய் வளர்ந்திருக்கிறோம். இப்போதும் அந்த இசை கேட்பதற்கு புதிதாகத்தான் இருக்கும். இந்த நிகழ்ச்சி வெறும் டிரெய்லர்தான், மெயின் ஷோவை சென்னையில பார்க்கலாம்” என்றார்.

பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, ``சரியாக 30 வருடத்திற்கு முன்பு இதே நாளில் முதல் எனது முதல் படமான புலன் விசாரணை படத்துக்கு ரெக்கார்டிங் நடந்தது. இன்று அதே நாளில் இசைஞானியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. செம்பருத்தி பாடல்கள் ரீரெக்கார்டிங்கில் 9 பாடல்களை 45 நிமிடங்களில் ரீரெக்கார்டு செய்து கொடுத்தவர் இளையராஜா” எனப் பழைய நினைவுகளைப் பகிர்ந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ``இது நான் பிறந்த மண். இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்து பெருமை சேர்த்த இளையராஜாவுக்கு என் மண்ணின் சார்பாக நன்றி. ‘இளையராஜா 75’, இளையராஜா 1000 படங்களைக் கடந்தார் என பல்வேறு எண்ணிக்கைகளில் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இளையராஜா எண்ணிக்கையில் அடங்காதவர். ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் நவீன இசையின் ஒற்றை அடையாளமாகப் பார்க்கிறேன்.’ என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், ``என் வாழ்க்கையில் என் கூடவே பயணம் செய்வது இளையராஜா இசைதான். பூட்டுப் போட்டு பிரச்னையான சம்பவத்தில் வண்டியில் ஏறும்போதுகூட தென்றல் வந்து தீண்டும் போது பாட்டுதான் கேட்டேன். இளையராஜாவுக்கு விழா எடுப்பது நமக்குக் கிடைத்த பாக்கியம். சென்னையில் நடக்கும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த திரைத்துறையினரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிப்பார்கள். இளையராஜாவுக்கு விழா எடுப்பதை நாங்கள் ஒரு பாக்கியமாக நினைக்கிறோம். பிப்ரவரி 2-ம் தேதி வெளிமாநிலத்திலிருந்து வரும் கலைஞர்கள் கலந்துகொண்டு இளையராஜா இசைக்கு பர்பாமென்ஸ் செய்யப் போகிறார்கள். 3-ம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இருக்கும். இதற்காக ஹங்கேரியிலிருந்து கலைஞர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இதற்காகக் கடந்த மூன்று மாதமாகப் பயிற்சி எடுத்து வருகிறார்கள்” என்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷால், ``இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவரைக் கௌரவப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் நலனுக்காகவும் அந்த நிதியைப் பயன்படுத்தப் போகிறோம். 500 ரூபாய் டிக்கெட்டில் இருந்து 25,000 வரை டிக்கெட் விலையை முடிவு செய்துள்ளோம். ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர்கள்  கலந்து கொள்வார்களா என்பது பிறகுதான் தெரியவரும். எல்லோருக்கும் அழைப்பு விடுப்போம். திரைப்படப் பாடல்களுக்கான ராயல்டி குறித்து எனக்கு ஓரளவுக்குத்தான் தெரியும். ஆனால், இது குறித்து இளையராஜா ஒரு முக்கிய அறிவிப்பை விரைவில் அறிவிப்பார். திரைப்படப் பாடல்களிலிருந்து கிடைக்கும் ராயல்டியில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைக் தயாரிப்பாளர் சங்கத்தின் ட்ரஸ்ட்டுக்கும், மியூசிக் யூனியனுக்கும் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.