வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (08/01/2019)

கடைசி தொடர்பு:19:55 (08/01/2019)

விஷாலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்! - சிம்பு வழக்கில் நீதிபதிகள் உத்தரவு

புதிய படங்கள் ஒப்பந்தம் செய்வது தொடர்பாகவும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எதிராகவும் சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷால் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

சிம்பு - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம்  ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. தமன்னா, ஸ்ரேயா, சனா கான் ஆகியோர் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான சிம்பு படம் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், படம் சரியாக ஓடவில்லை. இந்தப் படத்தில் நடிப்பதற்கு சிம்புவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் ஆனால் படம் ஓடவில்லை என்பதால் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

`படம் ஓடாததற்கு சிம்புதான் காரணம்' என்றும் `அவர்தான் படத்துக்கான பணத்தை தனக்கு தரவேண்டும்' என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டிருந்தார் மைக்கேல் ராயப்பன். இதனால் தன்னை அவதூறாகப் பேசிய மைக்கேல் ராயபப்பன் மீது நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கைத் தொடுத்தார். ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், புதுப்பட ஒப்பந்தங்களில் தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் தலையிடக்கூடாது எனவும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

நீதிமன்றம்

இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் கட்டப் பஞ்சாயத்து செய்வதாகவும் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் சிம்பு தரப்பினர் குற்றம் சாட்டினர். வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அனைவரும் வரும் 18-ம் தேதிக்குள் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.