வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (09/01/2019)

கடைசி தொடர்பு:13:20 (09/01/2019)

`மகனை டாக்டராக்க நினைத்தேன்; படம் எடுத்து பெருமை சேர்த்துட்டான்!'‍ -`கனா' பட இயக்குநரின் தந்தை நெகிழ்ச்சி

அருண்ராஜா காமராஜா குடும்பத்தினரைச் சந்தித்த குளித்தலை இளைஞர்கள்

"என் மகன் அருண்ராஜா காமராஜை டாக்டராக்க நினைத்தேன், முடியவில்லை. அவனுக்கு கிரிக்கெட் விளையாடுவதுனா உயிர். ஆனா, இயக்குநராகிட்டார்" என்று அவரது தந்தை தெரிவித்திருக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு வீராங்கணையாக உருவாவதில் பெண்களுக்கு உள்ள சிரமங்களையும், 'காவிரிப் பிரச்னை'யில் அடிக்கடி பாலையாகும் டெல்டா விவசாயத்தின் அவல நிலையையும் 'சிங்க்' செய்து எடுத்த படம் கனா. சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தயாரித்ததோடு, அதில் கௌரவ வேடத்தில் நடித்தும் இருக்கிறார். நல்ல விமர்சனங்களோடு திரையரங்குகளில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், குளித்தலைப் பகுதியை கதைக்களமாக படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

குளித்தலை

இந்நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலையில் வசிக்கும் இயக்குநரின் குடும்பத்தை சந்தித்த குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், "டெல்டா விவசாயத்தை, குறிப்பாக குளித்தலைப் பகுதி விவசாயிகளின் நிஜத்தை குறுக்குவெட்டுத்தோற்றமாக திரையில்சுந்தர் உங்க பிள்ளை காண்பித்திருக்கிறார். எங்க விவசாயிகளின் வலியை உலகுக்கு உணர்த்திய உங்க மகனுக்கு, குளித்தலைப் பகுதி மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குளித்தலை இளைஞர்கள் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதுகுறித்து, குளித்தலை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சுந்தரிடம் பேசினோம். 

"என்னைப் போன்றவர்கள் அதிகம் நேசிக்கும் விளையாட்டு கிரிக்கெட்தான். அதேநேரம், எங்க பெற்றோர்கள் செய்யும் தொழில் விவசாயம். அதனால், எங்களோடு தொடர்புடைய கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் இணைத்து அருண்ராஜா எடுத்த 'கனா' படத்தை பார்த்ததும், நெகிழ்ந்து போய்ட்டோம். பல காட்சிகளைப் பார்த்தப்ப, கண்ணீர்விட்டோம். அப்புறம்தான், அருண்ராஜா காமராஜுக்கு சொந்த ஊர் குளித்தலைனு தெரிஞ்சுச்சு. குளித்தலையில் யாருக்கும் தெரியாமல் வாடகை வீட்டில் வசித்த அவரது குடும்பத்தை சந்தித்தோம். இயக்குநரின் அப்பா காமராஜ், தோகைமலை பக்கத்துல ஒரு ஊர்ல உள்ள அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக இருந்து ஓய்வுபெற்றவர். மனைவி ஈஸ்வரி, மூத்த மகன் ராஜாவோடு வசித்துவந்தார். இப்போ, காமராஜ் ஜோதிடம் பார்க்கும் தொழிலைப் பார்த்து வருகிறார்.

அருண்ராஜா காமராஜா பெற்றோர் மற்றும் அண்ணன் ராஜா

நாங்க அவரை சந்தித்து, 'எங்க விவசாயிகளின் வலியை உலகுக்கு  உணர்த்திய உங்க மகனுக்கு நன்றி'ன்னு சொன்னோம். அதைக் கேட்டு நெகிழ்ந்த அவரது தந்தை, 'அருண்ராஜாவுக்கு சின்ன வயசுல கிரிக்கெட் மேல அதிக ஆர்வம். காவிரி ஆத்துலதான் விளையாடுவான். அதேபோல, விவசாயத்தைப் பத்தி அதிகம் பேசுவான். ஆனா, எங்களுக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்ற அளவுக்கு வசதி இல்லை. நான், அவன் கிரிக்கெட் விளையாடியதை பெருசா ஊக்குவிச்சதில்லை. அவனை ஒரு மருத்துவராக்கணும்னுதான் நினைச்சேன். ஆனா, சினிமாவுக்கு போய், நமக்கு சோறு போடுற விவசாயத்தைப் பத்தி படம் எடுத்து, எங்களுக்கு பெருமை சேர்த்துட்டான். 'சீக்கிரம் சொந்தமா நிலம் வாங்கி விவசாயம் பண்ணணும்'னு சொல்லிக்கிட்டு இருக்கான்'னு சொன்னார். அதைக் கேட்டதும், எங்களுக்கு பெருமையா இருந்துச்சு" என்றார் மகிழ்ச்சியாக.