பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை நித்யா மேனன் நடிக்க, `அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ப்ரியதர்ஷினி. ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக வித்யாபாலனும் சசிகலாவாக சாய்பல்லவியும் நடிக்கவிருக்கிறார்கள் என்றும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடிப்பார் என்றும் கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். தமிழ்ப் பெண்ணான வித்யாபாலனுக்கு இதுவே முதல் நேரடித் தமிழ்ப்படமாக அமையுமாம். யாரோ ஒருத்தர் சீக்கிரம் ஆரம்பிங்க!

இன்பாக்ஸ்

ந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தின் இளைய மருமகளான மேகன் மார்கில், புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற ‘பிரிட்டிஷ் ஃபேஷன் விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சியில், லண்டனின் முதன்மை ஆடை வடிவமைப்பாளரும் தன் திருமண ஆடையை வடிவமைத்தவருமான கிளார் வெயிட் கெல்லருக்கு (Clare Waight Keller) விருதளிக்க ‘சர்ப்ரைஸ்’ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மார்கில். இவ்விழாவில் அவர் அணிந்திருந்த கறுப்பு நிற ‘One Shoulder’ ட்ரெஸ் மற்றும் அடர்ந்த நிற நெயில் பாலிஷ்தான் புதிய சர்ச்சைக்கான காரணம். ஏனென்றால், ராயல் குடும்பத்தினர் யாரும் அடர்த்தியான நிறங்களை உபயோகப்படுத்தக் கூடாதாம். அதிலும், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாதாம்! கறுப்பே சிறப்பு

இன்பாக்ஸ்

தீபிகா-ரன்வீரைத் தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்த பரபரப்பு ஜோடி ரன்பீர் கபூர்-அலியா பட். சமீபத்தில், அலியா மற்றும் அவரின் தந்தை மகேஷ் பட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது பத்திரிகை யாளர்கள், மகேஷ்பட்டிடம் அலியா-ரன்பீர் காதல் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, `‘ரன்பீர் மற்றும் அலியாவின் காதலை நினைத்து சந்தோஷப்படுகிறேன்” என்று மகிழ்ச்சியாகியிருக்கிறார் மகேஷ். அலியாவோ, “இதைப் பற்றிப் பேச எனக்கு வெட்க வெட்கமாய் வருகிறது” என நகத்தைக் கடித்திருக்கிறார். அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாவோம்!

இன்பாக்ஸ்

‘இன்கெம் இன்கெம் காவாலி’ பாடல் மூலம் ஹிட் அடித்தவர் ராஷ்மிகா மந்தனா, நீர் மாசுபாடு விழிப்பு உணர்வுக்காக, பெங்களூரிலுள்ள அதிக மாசுபட்ட பெல்லாந்தூர் ஏரித் தண்ணீருக்கடியில் வித்தியாச போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். “இந்தப் போட்டோஷூட் பண்ணுற வரைக்கும் எனக்கு இதைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. இப்போவே இவ்வளவு மோசமா இருக்கு, வருங்காலத்தைப் பற்றி நினைச்சுக்கூடப் பார்க்க முடில” என்று விழிப்பு உணர்வு பேட்டியும் கொடுத்திருக்கிறார். அச்சம்விட்டு சுத்தம்செய்வோம்!

இன்பாக்ஸ்

காற்று மாசு டெல்லியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரட்டும் பிரச்னை என அச்சுறுத்துகிறது சமீபத்தில் வெளியாகியுள்ள இந்திய மெடிக்கல் ரிசர்ச் கவுன்சிலின் அறிக்கை. இந்தியாவில் 2017-ம் ஆண்டு எட்டில் ஒரு மரணம் காற்று மாசு காரணமாக நடந்ததாக திகிலூட்டுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள்தான் என சிவப்புக் கோடிட்டுக் காட்டுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆக்ஸிஜன் விக்க ஆரம்பிச்சுடுவாங்களே!

இன்பாக்ஸ்

2018-ம் ஆண்டிற்கான ‘`Person of the Year’’ அங்கீகாரத்தை நான்கு பத்திரிகையாளர்களுக்குக் கூட்டாக வழங்கியுள்ளது டைம்ஸ் இதழ். அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட சவுதி அரேபியப் பத்திரிகையாளர் ஜமால் கஸோகி; மியான்மர்ப் படுகொலைகளை வெளிக்கொணர்ந்ததற்காகச் சிறை சென்ற, ராய்ச்சர் பத்திரிகையாளர்களான வா லோன் - யா சோ வூ; பிலிப்பைன்ஸ் அதிபரின் சட்டமீறல்களைத் தோலுரிக்கும் அந்நாட்டுப் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா ஆகியோருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பேனாப் போராளிகள்!

இன்பாக்ஸ்

2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாஸைத் திருமணம் செய்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் டிசம்பர் 10-ம் தேதி ராஞ்சியில் நடைபெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீபிகா, இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். சர்வதேச வில்வித்தை தரவரிசைப் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் தீபிகா குமாரியும், 17-வது இடத்தில் இருக்கும் அதானு தாஸும் 2020 ஒலிம்பிக்கைக் குறிவைத்து தீவிரப் பயிற்சியில் இருக்கிறார்கள். வாழ்த்துகள் ஆர்ச்சர்ஸ்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு