வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (12/01/2019)

கடைசி தொடர்பு:13:00 (12/01/2019)

``என். டி.ஆர் ஆகவே வாழ்ந்து காட்டிவிட்டாய்..." பாலகிருஷ்ணாவைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு #N.T.R

கோலிவுட்டில் கலக்கிவரும் தல - தலைவர் ஃபீவரைப் போல் தெலுங்கு திரையுலகில் தற்போது என்.டி.ஆர் ஃபீவர். காரணம் கடந்த புதன்கிழமையன்று வெளியான மறைந்த முன்னாள் ஆந்திர மாநில முதல்வரும் பழம்பெரும் நடிகரான என்.டி.ராமாராவின் பயோபிக்  (N.T.R. கதாநாயகுடு) திரைப்படம் தான். கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியான "மகாநதி" திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் பிரமாண்ட வெற்றி பெற்றது.

அதேபோல் தற்போது என்.டி.ஆரின் மகனான பாலகிருஷ்ணா, வித்யா பாலன், ராணா, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ``என். டி. ஆர். கதாநாயகுடு" திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இரண்டு  பாகங்களாக தயாராகியுள்ள இந்த பயோபிக்கின் முதல் பாகம் கடந்த புதன்கிழமையன்று  (9-ம் தேதி) இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் 1500 திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தை நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாலகிருஷ்ணா, இப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஆகியோர் இப்படத்தைப் பார்த்தனர். படத்தைப் பார்த்த சந்திரபாபு நாயுடு ``என்.டி.ஆர். ஆகவே வாழ்ந்து காட்டிவிட்டாய் எனப் பாராட்டினாா்.

இதைத் தொடர்ந்து நேற்றையதினம் மீண்டும் நடிகர் பாலகிருஷ்ணாவையும், இயக்குநர் கிரிஷ்யையும் அழைத்து சிறந்த படத்தை கொடுத்ததற்காக பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அத்தோடு என்.டி.ஆர் தனது அரசியல் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டாா்.

இத்திரைப்படத்தில் ஆந்திர முதல்வர் சந்திரரபாபு நாயுடுவின் கதாபாத்திரத்தை ராணா டகுபதி ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.