வெளியிடப்பட்ட நேரம்: 04:56 (14/01/2019)

கடைசி தொடர்பு:08:15 (14/01/2019)

`13 வயதில் வந்தேன்... 20 ஆண்டுகள் முடிந்துவிட்டன' - நெகிழ்ந்த டிடி!

விஜய் டிவி-யில் இணைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் தொகுப்பாளினி டிடி என்னும் திவ்யதர்ஷினி.

டிடி திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான மனம் கவர்ந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகள், பேட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகளை டிடி தொகுத்து வழங்கி வருகிறார். பேசத் தயங்கும் பிரபலங்கள், எப்போதுமே லைம் லைட்டில் இருக்கும் செலிபிரட்டிகளிடம் சாமானியன் கேட்க விரும்பும் கேள்விகள் என மக்களின் பல்ஸ் பிடித்து இன்டர்வியூ செய்வதில் இவர் கில்லாடி. இதற்கிடையே, இவர் விஜய் டிவியில் இணைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி அவருக்கு நினைவுப் பரிசு ஒன்றை அளித்து கௌரவப்படுத்தியுள்ளது விஜய் டிவி. அதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், ``எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை. என் மனம் முழுக்க நன்றிகள் நிறைந்திருக்கின்றன. என்னுடைய 13 வது வயதில் ஆடிஷனுக்காக விஜய் டிவி-க்கு வந்தேன். தற்போது வரை இங்கு இருக்கிறேன். பல்வேறு நபர்களின் கொண்டாட்டங்களில் பங்கேற்று உள்ளேன். அந்தக் கொண்டாட்டம் மறக்க முடியாததாக இருக்க வைக்க வேண்டியது என் கடமை என்றே இருந்திருக்கிறேன். ஆனால், இம்முறை அந்தக் கொண்டாட்டங்களை நான் பெறும் இடத்தில் இருப்பது, வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இந்த 20 வருடப் பயணம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது. பயணம் தொடர்கிறது.

டிடி திவ்யதர்ஷினி

கடவுளுக்கும் விஜய் டிவி குடும்பம், திரைப் பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், ஊடகத்துறை மற்றும் ஊடக நண்பர்கள் என என்மீது அன்பு கொண்ட அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி. எனக்காக நேரிலும் கடிதம், வலைதளங்கள் மூலமாகவும் தொடர்புகொண்டு என் மீது அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. அன்று முதல் இன்று வரை எனக்காக இருந்ததற்கு நன்றி. இன்னும் 20 வருடங்களைக் கடக்க உங்கள் அன்பே எனக்குப் போதும். வாழ்வின் அடுத்தகட்டத்திலும் உங்களை மகிழ்விப்பேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க