வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (14/01/2019)

கடைசி தொடர்பு:17:13 (14/01/2019)

`என்னப்பா, பேய் 'பேட்ட' டயலாக் பேசுது’- வெளியானது 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் 2-வது டீசர்

சந்தானத்துக்கு சின்னத்திரையில் ஹிட் கொடுத்தவர்தான், ‘லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலா. இவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு வெள்ளித்திரையில் இணைந்து, `தில்லுக்கு துட்டு' என்ற படத்தைக் கொடுத்தனர்.

பேயை கலாய்க்கும் விதமாக, காமெடி - த்ரில்லரில் உருவான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால், இதன்பின் வந்த 'சக்க போடு போடு ராஜா' படம் ஹிட்டாக அமையவில்லை. இந்தநிலையில்தான், ராம்பாலா - சந்தானம் கூட்டணி மீண்டும் இணைந்து `தில்லுக்கு துட்டு - 2' படத்தை எடுத்துவருகிறது. இதில், சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்துள்ளார். மேலும், மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, லொள்ளு சபா டீமைச் சேர்ந்தவர்கள் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சபிர் இசையமைக்க ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் படத்தைத் தயாரித்துள்ளது. இதற்கிடையே, இப்படத்தின்  இரண்டாவது டீசர் இன்று வெளியாகியுள்ளது. ரஜினியின் `பேட்ட' பட வசனத்தையும், அஜித்தின் `விஸ்வாசம்' பட வசனத்தையும் இணைத்து சந்தானத்துக்கே உரித்தான கேலி, கிண்டல்களுடன் வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியான சில மணிநேரங்களிலேயே, சந்தானம் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.