வந்தா ராஜாவாதான் வருவேன் பட ரிலீஸின் போது எனக்காக சில விஷயங்களை ரசிகர்கள் செய்ய வேண்டும் என நடிகர் சிம்பு அவரது ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
`செக்கச் சிவந்த வானம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இதில் இயக்குநர் சுந்தர்.சி உடன் சிம்பு இணைந்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்க மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் ரிலீஸை முன்னிட்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் வைத்துள்ளார்.
அதில், ``வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிக பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும். அதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட் அவுட்களை வைக்கிறீர்கள்.
ஆனால் இந்த ஒரு முறை மட்டும் பிளக்ஸ், கட் அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம். அது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் போன்றவற்றை வாங்கித்தந்து அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும். திரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை தான் காப்பாற்றுவேன். எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும்" என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார் சிம்பு. சிம்புவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேப்போன்று காவிரி பிரச்னையின் போதும், கஜா புயலின் போதும் மக்களுக்கு உதவ ஏற்கனவே சிம்பு கோரிக்கை வைத்திருந்தார்.
#Happypongal wishes from #STR #VRV #VRVFromFeb1 pic.twitter.com/99iKd2Kz3L
— Deepan Boopathy (@BoopathyDeepan) January 15, 2019
