Published:Updated:

கலகமும் காமமும் தடை தாண்டும்

கலகமும் காமமும் தடை தாண்டும்
பிரீமியம் ஸ்டோரி
News
கலகமும் காமமும் தடை தாண்டும்

யமுனா ராஜேந்திரன்

கலகமும் காமமும் தடை தாண்டும்

ப்பானிய இயக்குநர் நகிசா ஒசிமா ‘உணர்ச்சிகளின் சாம்ராஜ்யம்’ எனப் பொருள்தரும்  ‘The Realm of the senses (1976)’ என்ற தலைப்பிலான  ஒரு படம் எடுத்தார். இயற்கையான பாலுறவை அதன் அத்தனை உக்கிரங்களுடனும் காட்சிப்படுத்திய படம் அது. திருமணமான ஓர் ஆணின்மீது காதல்கொண்ட ஒரு பெண், அவன் தனது மனைவியிடம் திரும்பிப் போகப்போகிறான் என்பதை உணர்ந்து, அவனது ‘சாமானை’க் கத்தியால் அறுத்துத் தன்னுடன் வைத்துக்கொண்டு, நாள்கணக்கில் அறைக்குள் அடைந்துகிடக்கிறாள். பின், டோக்கியோ நகரின் தெருக்களில் அலைந்து திரியும் ஒரு பெண் குறித்த சித்திரம் இப்படம்.

இது ஒரு நிஜ நிகழ்வின் அடிப்படையிலான படம். இப்படத்தின் ஒரு காட்சியில், வேகவைத்த முட்டையைத் தனது புழைக்குள் செலுத்தி, பின் வெளியிலெடுத்துத் தன் காதலனை ருசித்து உண்ணச் செய்வாள் காதலி. இப்படம் ஜப்பானில் உடனடியாகத் தடைசெய்யப்பட்டது. கலைகளின் தாயகமான பாரீசில் இப்படம் கொட்டகை நிறைந்தபடி ஓடியது. இப்படத்தைப் பார்க்கவெனவே ஜப்பானியர்கள் மூட்டைகட்டிக்கொண்டு விமானமேறி பாரீஸ் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.

ஒசிமாவின் படத்தின் அளவே மேற்கத்திய நாடுகளில் அதிர்வை உண்டாக்கிய இன்னொரு திரைப்படம், இத்தாலிய இயக்குநரான பெர்னார்டோ பெர்ட்டுலூசியின் ‘த லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் (The Last tango in Paris (1972)’. அமெரிக்காவிலும் இத்தாலியிலும் இப்படம் தடைசெய்யப்பட்டது. யதேச்சையாகச் சந்திக்க நேரும் அந்நியர்களான மத்தியதர வயது ஆண், இளம் பெண் என இருவருக்கும் இடையில் பெருகும் விட்டுவிலகிய,  கட்டற்ற காமத்தை முன்வைத்த படம் இது. குதத்தில் பாலாடைக் கட்டியைத் தேய்த்து, பலவந்தமாக இளம்பெண்ணுடன் உறவுகொள்ளும் ஆணின் வன்முறையை இப்படம் காட்சியாகக் கொண்டிருந்தது.

இத்தாலிய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரான குசிப்பி தொர்னதோரின் ‘சினிமா பாரடைசோ (Cinema paradiso (1988)’ படத்தில் ஒரு காட்சி வரும். சினிமாக் கொட்டகையில் படம் வெகுமக்களுக்குப் போடப்படும் முன்னால், கையில் வெண்கல மணியுடன் ஒரு பாதிரியார் வந்து அமர்வார். படத்தில் எங்கெல்லாம் முத்தமும் ஆண் - பெண் கட்டிப்பிடிக்கும் காட்சியும் மார்பு விளிம்பு தெரியும் காட்சியும் வருகிறதோ, அப்போதெல்லாம் எரிச்சலுடனும் சலிப்புடனும் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டு, பாதிரியார் விசிறி விசிறி மணியாட்டுவார். மணியடிக்கப்பட்ட அந்தக் காட்சிகள் எல்லாம் படச்சுருளின் இடையில் காகித அடையாளம் வைக்கப்பட்டு, பின்னர் கத்திரியால் வெட்டி எடுக்கப்படும். இப்படி வெட்டியது போக மிஞ்சிய படத்தைத்தான் அந்த நாட்டின் மக்கள் பார்க்க வேண்டும். திரைத் தணிக்கையின் ஆதி வடிவம் என்பது இப்படித்தான் கிறித்தவக் கத்தோலிக்கத் திருச்சபையினால் ஐரோப்பாவில் கட்டுப்படுத்தப்பட்டது.

கலகமும் காமமும் தடை தாண்டும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஐரோப்பியத் தணிக்கை மரபில், மிக முக்கியமான காலகட்டமாக இருந்தது ரஷ்யப் புரட்சியும் பாசிசத்திற்கு எதிரான அரசியல் காலகட்டமும் எனச் சொல்லலாம். பிரிட்டன் உள்பட ‘அக்டோபர் புரட்சி’ உலகெங்கிலும் எற்படுத்திய மக்கள் எழுச்சிகளை அடுத்து, ரஷ்ய இயக்குநரான செர்காய் ஐசன்ஸ்டீனின் (Sergei Eisenstein) ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின் (Battleship Potemkin -1925)’ படம், பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டது. இதையடுத்து, ஹிட்லரின் புகழ்பாடி பாசிசக் கருத்தியலை முன்வைத்த காரணத்திற்காக லெனீ ரிப்சந்தாலின் (Leni Riefenstahl) ‘தி ட்ரயம்ப் ஆப் தி வில் (The Triumph of the Will (1935)’ படமும் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டது.

ஈரானில் 70-களில் அயதுல்லா கொமேனியின் தலைமையில், ஷா மன்னருக்கு எதிராக ‘ஈரானியப் புரட்சி’ வெற்றிபெற்றவுடன், கலாசாரக் காவல்துறையின் மேற்பார்வையில், புனித நூல் ‘குரான’து அடிப்படையில் திரைப்படத் தணிக்கை விதிகள் கொண்டுவரப்பட்டன. ஷாவினது காலத்தில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் அழிக்கப்பட்டன. வீட்டில் இருக்கும் பெண் பிம்பம் மற்றும் அவர்களது கைகளின் அருகாமைக் காட்சி போன்றன திரைப்படங்களில் தடைசெய்யப்பட்டன.

‘தி சர்க்கிள் (The Circle (2000)’, ‘த ஒயிட் பலூன் (The White balloon (1995)’ போன்ற அற்புதமான படங்களை உருவாக்கிய ஜாபர் பனாஹி (Jafar Panahi) போன்ற இயக்குநர்கள், ஈரானிலிருந்து உலகப் படவிழாக்களுக்குப் பயணம் செய்யக் கூடாது எனத் தடைவிதிக்கப் பட்டுள்ளார்கள். தாலிபான்களின் கீழ் ஆப்கான் மக்களின் வாழ்வைப் பதிவுசெய்த  ‘கந்தஹார் (Kandahar - 2001)’ போன்ற படங்களை எடுத்த இயக்குநர் மக்பல்ஃப் (Mohsen Makhmalbaf), படம் தயாரிக்கும் முன்பே அரசுக்குத் திரைக்கதையைத் தந்து ஒப்புதல் பெறவேண்டும் என வற்புறுத்தப் பட்டதையடுத்து, ஈரானிலிருந்து வெளியேறி தற்போது பாரீசில் வாழ்கிறார். சிறுபான்மையின மக்களான ‘குர்திஸ்’ மக்களது வாழ்வு பற்றிய இவரது படமான ‘கப்பா (Gabbeh - 1996)’ முன்பாக ஈரானில் தடைசெய்யப்பட்டது.

சீனாவில் நிகழ்ந்த கலாசாரப் புரட்சிக் கால அத்துமீறல்கள் தொடர்பான அனைத்துப் படங்களும் அங்கு தடைசெய்யப்பட்டன. இயக்குநர் சென் கெய்கே-வின் ‘பேர்வல் டு மை கான்குபைன் (Farewell to my Concubine - 1993)’, ஷாங் இமுவின் ‘டு லிவ் (To Live - 1994)’ மற்றும் தியான் சுவான் சுவாங்கின் ‘தி ப்ளு கைட் (The Blue Kite - 1993)’ போன்ற படங்கள் இவ்வாறு தடைசெய்யப்பட்டன. உலகப் புகழ்பெற்ற சீன இயக்குநரான ஷாங் இமு, நெடுங்காலம் நாட்டைவிட்டுப் பயணம் செய்து, உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இப்போது, அவர் முழுமையமாக அரசியல் படங்களை இயக்குவதை நிறுத்திக்கொண்டு, கடந்தகாலச் சீன மன்னர்களின் சாகசமும் பெருமிதமும் பற்றிய ‘ஹீரோ (Hero - 2002)’ போன்ற படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

காலனியாதிக்க இங்கிலாந்தின் தணிக்கை விதிகளில், இந்தியா குறித்த ஷரத்து ஒன்று தனியாக இருந்தது. இந்தியாவில் பிரித்தானிய அரசு மேற்கொண்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையை அடுத்து, இங்கிலாந்தின் இடதுசாரிகள், காலனிய அரசின்மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். உலகிலேயே காட்டு மிராண்டித்தனமானது ஆங்கிலக் காலனியாதிக்கம் என்பது அந்த விமர்சனம். காலனியாதிக்க ஆட்சியின்மீது இத்தகைய விமர்சனங்களைத் தடைசெய்வதற்காக, இந்திய விவகாரங்களை இங்கிலாந்தில் பேச-சித்திரிக்கக் கூடாது எனப் புதிய தணிக்கைச் சட்ட ஷரத்து உருவாக்கப்பட்டது. திரைப்படைப்பின் மீது அரசின் தலையீட்டை மையமாகவைத்த இந்தத் தணிக்கைச் சட்டத்தின் அடிப்படையில்தான் 1918-ம் ஆண்டு காலனியாதிக்க அரசினால் இந்தியத் திரைப்படத் தணிக்கை விதிகளும் உருவாக்கப்பட்டன.

இந்தியாவிலும் தமிழகத்திலும் நம் நினைவுக்கெட்டிய ஆண்டுகளில், தணிக்கைத் துறையில் பிரச்னைக்கு உள்ளான படங்கள் எந்தப் பிரச்னைகள் சார்ந்தன? பாப்ரி மஜீத் இடிப்புக்குக் கொஞ்சம் முன்னும் பின்னுமான ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படங்களான ‘ஃபாதர் சன் அண்டு ஹோலி வார் (Father, Son, and Holy War (1995)’ போன்றன அதனது இந்துத்துவப் பாசிசம் குறித்த சித்திரிப்புக்காகத் தணிக்கைக் குழுவில் பிரச்னைகளைச் சந்தித்தன. ‘பண்டிட் குயின் (Bandit Queen - 1994)’ திரைப்படம், அதனது சாதி எதிர்ப்புக்காகவும் மேல் சாதியினரின் பாலியல் வன்முறை சித்திரிப்பிற்காகவும் தணிக்கைக் குழுவினால் சிக்கலுக்கு உள்ளாகியது.

கலகமும் காமமும் தடை தாண்டும்

நேபாள மாவோயிஸ்ட்டுகள் பற்றிய ‘ஃபிளேம்ஸ் ஆஃப் த ஸ்னோ (Flames of the Snow - 2010)’ அல்லது ‘பனி ஜூவாலைகள்’ அதனது மாவோயிச அரசியலுக்காகத் தடைசெய்யப்பட்டது. குஜராத் இனப்படுகொலையை முன்வைத்து எடுக்கப்பட்ட தொலாக்கியாவின் ‘பர்சானியா (Parzania - 2007)’ மற்றும் நந்திதா தாஸின் ‘பிராக் (Firaaq - 2008)’ போன்றவை தணிக்கையில் தடையை எதிர்கொண்டு, ரிவைசிங் கமிட்டிக்குச் சென்று வெளியாயின. தீபா மேத்தாவின் இந்திய விதவைகள் பற்றிய ‘வாட்டர் (Water - 2005)’ மற்றும் இந்திய சம பாலுறவுப் பெண்கள் பற்றிய ‘ஃபயர் (Fire - 1996)’ போன்ற படங்களும் இங்கு தணிக்கைக் குழுவினால் நெருக்கடிக்கு உள்ளாகின.

இடஒதுக்கீடு குறித்த சர்ச்சையினால் தமிழ்ப் படமான ‘ஒரே ஒரு கிராமத்திலே’ மற்றும் இந்திப் படமான ‘ஆராக்ஷன் (Aarakshan (2011)’ போன்றன தணிக்கைக் குழு பிரச்னைகளுக்கு உள்ளாகின. இலங்கையில் இந்தியப் படையினர் தலையீட்டையடுத்து, அங்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறவைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான தமிழ்ப் படம் ‘குற்றப் பத்திரிகை’ தடைசெய்யப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரழிவை முன்வைத்து தமிழக அரசியல் கட்சிகளையும் இந்திய அரசையும் கடுமையாக விமர்சித்த ‘செங்கடல்’ படத்திற்குப் பிராந்தியத் தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டது. இதுபோலவே, கோவைக் கலவரம் குறித்து மறுவிசாரணை செய்த ஆவணப்படமான ‘தெளிவுப் பாதையின் நீசதூரம்’ படத்திற்குத் தணிக்கைக் குழு தடைவித்திருக்கிறது.

‘டேம் 999, ‘இனம்’, ‘மெட்ராஸ் கபே (Madras cafe - 2013)’, ‘விஸ்வரூபம்’, ‘சர்கார்’  போன்ற படங்கள் தொடர்பான அரசியல் சர்ச்சைகள் தமிழகத்தில் வெடித்தன. இதுவன்றி, திராவிட இயக்க அரசியல் குறித்த ‘இருவர்’ படம் ஏற்படுத்திய சர்ச்சையும் தமிழக அளவில் திமுக அரசும் தணிக்கை அமைப்பும் குறித்த முக்கியமான பிரச்னையாக எழுந்தன. அரசு, மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் என மூன்று விதமான தணிக்கைகளை இப்போது இந்திய-தமிழகத் திரைப்படங்கள் எதிர்கொள்கின்றன.

ரசியல்-வன்முறை-பாலுறவு போன்றவற்றின் அடிப்படையில்தான் திரைப்படத் தணிக்கை விதிகள் உலகெங்கிலும் வரலாறு முழுக்கவும் உருவாகிவந்திருக்கின்றன. மத நிறுவனங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட நவீனத்துவ மேற்கத்திய தாராளவாத அரசுகள், பாலுறவுச் சித்திரிப்பு என்பதில் தளர்த்துதலைச் செய்தாலும் வன்முறை மற்றும் அரசியல் என்பன சார்ந்து தமது உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் தணிக்கை முறைகளை இன்றுவரையிலும் இறுக்கமாகவே வைத்திருக்கின்றன.

அறம்-ஒழுக்கம், அது சார்ந்த நம்பிக்கைகள் எனும் அடிப்படைகளுக்கு மாற்றாக, துறைசார் வளர்ச்சி  குறிப்பாகத் திரைத் துறைசார் வளர்ச்சிக்கு ஒப்ப, காட்சி ஊடக வளர்ச்சிக்கு ஒப்ப, புதிய நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் வகையிலான திரைப்படத் தணிக்கை முறைகளை இப்போது உலகெங்கிலும் அரசுகள் கைக்கொள்ளத் தொடங்கியுள்ளன. அரசியல்-வன்முறை-பாலுறவு சார்ந்த விஷயங்களைக் குடிமக்கள் புரிந்துகொள்ளும் வயதும், அந்த வயது தரும் முதிர்ச்சியும், மனநிலையும் சார்ந்து, எவரெவர் எப்போது எதை எங்கு பார்க்கலாம் எனத் திரைப்படங்களை வயதின் அடிப்படை கொண்டு தரப்படுத்தவும் வகைப்படுத்தவும் செய்கிறார்கள்.  அமெரிக்கத் தணிக்கை முறை இதற்கோர் எடுத்துக்காட்டு.

மத அடிப்படைவாதம் கோலோச்சுகிற ஈரான் உள்பட்ட இஸ்லாமிய நாடுகள், கிறித்தவ அடிப்படைவாதம் மேலோங்கியிருக்கும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், பாசிச வன்முறையிலிருந்து இன்னும் விடுபடாத நினைவுகளைக்கொண்ட ஜெர்மனி (விதிவிலக்காக, 60-களின் அரசியல் வன்முறை, கட்டுதளையற்ற சுதந்திரப் பாலுறவு போன்றவற்றைச் சித்திரித்த ‘சிவப்புப் படையணி’ பற்றிய ‘தி பாதார் மெயின்காப் காம்ப்ளக்ஸ் (The Badar Meinhalf Complex - 2008)’ போன்ற படங்களோடு, ஹிட்லரது வாழ்வைச் சித்திரித்த ‘டவுண்ஃபால் (Downfall (2004)’ போன்ற படங்களும் ஜெர்மனியிலிருந்து இப்போது வரவே செய்கின்றன) போன்ற நாடுகள், எதேச்சதிகார அரசியல் அமைப்புகளைக் கொண்ட ரஷ்யா, வடகொரியா, சீனா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் இன்னும் இத்தகைய தாராளவாத ஜனநாயகத் தணிக்கை முறைக்கு வந்து சேரவில்லை.

மத நல்லிணக்கம், சாதிய நல்லிணக்கம், இன நல்லிணக்கம், பெண்புனிதம் போன்றவற்றை முன்வைத்துத் தணிக்கையைக் கொண்டிருக்கும் இந்திய- தமிழக அரசியல் அமைப்பு மதம்-இனம்-சாதி-பெண் எனும் எல்லா அடிப்படைகளிலும் மேட்டிமைச் சமூகத்தவர்களால் நிர்வகிக்கப்படுகிற, விளிம்புநிலை மக்களை ஒடுக்குகிற அமைப்பாகத்தான் இருக்கிறது. தமிழகத் திரைப்படத் தணிக்கை அமைப்பும் இந்த இயந்திரத்தின் ஒரு திருகாணிதான்.

40,000 வெகுமக்களைக் கொல்கிற வன்முறை அமைப்பையும் தொகையாகப் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்குகிற அமைப்பையும் கொண்டிருக்கிற இலங்கையும், பழங்குடி மக்களை ஆயிரமாயிரமாகக் கொன்றொழிக்கிற, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எனச் சிறுபான்மையின மக்களைக் கொன்றொழிக்கிற, தலித் மக்களைத் துப்பாக்கி முனையில் கொன்றொழிக்கிற, இடதுசாரி அறிவுஜீவிகளைக் குறிவைத்துச் சுட்டுக் கொல்கிற இந்துத்துவவாதிகளைக் கொண்டிருக்கிற, வல்லுறவை வாழ்முறையாக ஆக்கிவைத்திருக்கும் அமைப்பைக்கொண்டிருக்கிற ஒரு நாடு, ‘வன்முறையற்ற-பாலுறவுப் பிரச்னைகள் தவிர்த்த’ திரைப்படங்கள் வேண்டும் எனக் கோருவதிலுள்ள அபத்தத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். லெஸ்லி உத்வினின் நிர்பயா வல்லுறவு பற்றிய ‘இந்தியாஸ் டாட்டர் (India’s Daughter - 2015)’ ஆவணப்படம் இந்த அபத்தமான தணிக்கைச் சட்டத்தினால்தான் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.

ரோப்பாவை ஒரு ‘பிசாசும்’ ஒரு  ‘பூதமும்’ பிடித்து ஆட்டியது. பிசாசு ஹிட்லரின் பாசிசம். மார்க்ஸ்,  ‘ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டும் ‘பூதம்’ கம்யூனிசம்’ எனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதினார். இந்த பூதம் அமெரிக்கக் கலைத்துறையையும் திரைப்படத் துறையையும் பிடித்து ஆட்டியது. ‘த கிரேட் டிக்டேட்டர் (The Great Dictator - 1940)’ படத்தை உருவாக்கிய சார்லி சாப்ளின், ‘மதர் (Mother)’ நாடகத்தை எழுதிய பெர்டோல்ட் பிரெக்ட், ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ எழுதிய ஜான் ரீட் போன்ற கலைஞர்களை ‘கம்யூனிஸ எதிர்ப்புக் கறுப்புப் பட்டியலின்’ கீழ் இன்றைய டிரம்ப்பின் முப்பாட்டன் அமெரிக்க ரிபப்ளிகன் செனட்டரான மெக்கார்த்தி நாற்பது ஐம்பதுகளில் வேட்டையாடினார்.

வால்ட் டிஸ்னி, எலியா காசன் போன்ற திரைத்துறை சார்ந்தவர்கள், அமெரிக்கக் கம்யூனிஸ்ட் திரைப்பட இயக்குநர்களைக் காட்டிக்கொடுத்தார்கள். அவர்கள் கைதுசெய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, படம் எடுக்கவிடாமல் தடைசெய்யப்பட்டார்கள். இந்த வேட்டை, பின்னாள்களில் கியூபத் திரைப்பட இயக்குநர் கிதராஸ் அலியாவின் (Tomas Gutierrez Alea) திரைப்படமான ‘மெமரீஸ் ஆப் அண்டர் டெவலப்மென்ட் (Memories Of Underdeveopment - 1968)’, அமெரிக்க விமர்சகர்கள் கூட்டமைப்பின் விருதைப் பெற்றபோது, அவரை அந்தக் கூட்டமைப்பு விருதைப் பெற நியூயார்க்கிற்கு அழைத்தனர். அப்போது அமெரிக்க அரசு, கிதராஸ் அலியாவுக்கு விசா தர மறுத்தது. இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சிக் காலத்தின் பின்னணியில், மார்கஸ் டி சேட்டின் ‘120 Days of Sodom’ நாவலை அடிப்படையாக வைத்து மார்க்ஸிஸ்ட் கலைஞன் பாவ்லோ பசோலினி (Pier Paolo Pasolini) ‘ஸலோ(Salo (1975)’ எனும் படத்தை எடுத்து வெளியிட்டார். அந்தப் படம் பிராங்கோவின் ஸ்பெயினில் இத்தாலியில் பல ஆண்டுக்காலம் தடைசெய்யப்பட்டது. பாசிசத்தின் மட்டுமீறிய பாலுறவு வன்முறையைச் சித்திரித்தது அந்தப் படம். இதைப்போலவே, பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரடிய அல்ஜீரிய விடுதலை இயக்கம் பற்றிய ‘தி பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் (The Battle of Algiers (1966)’ படத்தை எடுத்தார் இத்தாலிய இயக்குநரான ஜில்லோ பொன்டெ கார்வோ.  பிரெஞ்சுக் காலனிய ராணுவ வன்முறைக்கு எதிரான அல்ஜீரிய விடுதலை இயக்க எதிர்வன்முறை குறித்தது அந்தப் படம். அந்தப் படத்தை பிரெஞ்சு அரசு தடைசெய்தது.

அன்று ஐரோப்பிய அரசுகள் தடைசெய்த ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்’, ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ போன்ற புரட்சிகர இயக்கங்கள் குறித்த படங்கள்,  ‘தி கிரேட் டிக்டேட்டர் (The Great Dictator)’ போன்ற பாசிச எதிர்ப்புப் படங்கள், ‘த ட்ரயம்ப் ஆப் த வில் (The Triumph of the Will)’ போன்ற பாசிச ஆதரவுப் படங்கள் என அனைத்துப் படங்களும் அவற்றின் வரலாற்று - அரசியல் முக்கியத்துவம், திரைப்பட வடிவம் எனும் அளவில் அவற்றின் அழகியல் மேன்மை போன்ற காரணங்களால், இன்று அவர்தம் திரைப்படக் கல்லூரிகளில் பாடங்களாக வைக்கப்பட்டுப் போதிக்கப்படுகின்றன. இன்று அமெரிக்காவிலும் சரி, மேற்கத்திய நாடுகளிலும் சரி அரசியல் காரணங்களால் எந்தப் படத்திற்கும் தடை என விதிக்கப்படுவதில்லை.

இரு காரணங்களால் இந்த நிலைப்பாடு தோன்றியது. ஒன்று, இன்றைய தகவல் தொழில்நுட்ப ஒலி, ஒளித்தட்டு யுகத்தில், சைபர் ஸ்பேஸ் யுகத்தில் எந்தப் படத்தையும் எவரும் தடைசெய்வது என்பது சாத்தியமில்லை. எனவே, இந்த வயதினர் இதைப் பார்க்கலாம் எனும் ரேட்டிங் சிஸ்டத்தை அவர்கள் கொணர்ந்தார்கள். இரண்டாவதாக, சுயாதீனத் திரைப்பட வெளியீட்டு நிறுவனங்களான கிரைட்டெரியன் கலக்ஷன் (Criterion Collection), ஆர்ட்டிபிஷியல் ஐ (Artificial eye), மற்றும் செகண்டு ரன் டிவிடி (second Run DVD) போன்ற அமைப்புகள் இத்தகைய திரைப்படங்களை வெளியிடுவதற்கெனவே தோன்றிவிட்டன.

பாலுறவு என்பது குறித்த ஆட்சேபத்தை முடியாட்சிகள் என்றும் கொண்டிருக்கவில்லை. போர்னோகிராபி இலக்கிய வடிவங்கள் என்பது முடியாட்சி சார்ந்தவர்களிடமே நிலைபெற்றிருந்தன. பாலுறுவு என்பது எப்போதுமே மதவாதிகளுக்கு அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த பிரச்னைகளாகவே இருந்தன. சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளின் திரைப்படங்கள் பாலுறவுப் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசியதேயில்லை. அத்தகைய வேறுநாட்டின் படங்களையும் இவர்கள் தமது எல்லைகளுக்குள் அனுமதித்தது இல்லை. நிர்வாணம், கலவி, முத்தம் போன்றவை இடம்பெற்ற படங்களைக்கூட இந்த நாடுகள் தடைசெய்தன. இஸ்லாம் அல்லாத நாடுகளில் சாதாரணமாகக் காணக்கிடைக்கிற ஸ்டான்லி குப்ரிக்கின் ‘எ கிளாக்வொர்க் ஆரஞ்சு (A Clockwork Orange)’, ‘பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே (Fifty Shades of Grey (2017)’ போன்ற படங்கள்கூட இந்த நாடுகளில் காணக்கிடைக்காது.

நாடுகள் எனும் அளவில், கிறிஸ்தவ மதம் சார்ந்த யதார்த்தப் படங்களைத் தடைசெய்த நாடுகள், வாடிகன் அமைந்திருக்கும் இத்தாலி மற்றும் அடிப்படைவாதக் கத்தோலிக்க நாடான அயர்லாந்து குடியரசு என்பனவாகும். மார்ட்டின் ஸ்கோர்சிசேயின் ‘த லாஸ்ட் டெம்ப்டேஷன் அப் ஜீசஸ் கிரைஸ்ட் (The Last Temptation of Jesus Christ - 1988)’, டான் பிரவுனின் நாவலை வைத்து உருவாக்கப்பட்ட ‘த டாவின்ஸி கோட் (The Da Vinci Code - 2006)’, கனடியப் படமான டெனிஷ் ஆர்கான்டின் ‘ஜீசஸ் ஆஃப் மான்டரியல் ( Jesus of Montreal (1989)’ போன்ற படங்களை இந்த நாடுகள் தடைசெய்தன. மார்ட்டின் ஸ்கோர்சிசே படத்தில் ஜீஸஸ் பாலுறவுகொள்ளும் காட்சிகள் இருந்தன. அவர் ஒரு சாதாரண மனிதனாக அந்தப் படத்தில் சித்திரிக்கப்பட்டிருந்தார். கிரேக்க நாவலாசிரியரான கசான் சாகிஸின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்தத் திரைப்படம். டெனிஷ் ஆர்மோன்டின் படம் ஜீஸஸ் சம காலத்தில் தோன்றினால், அவரது நிலை என்னவாக இருக்கும் எனும் ஒரு குறியீட்டு அடிப்படையில் அமைந்தது. ஜீசஸின் வழிவழிக் குருதி மரபைப் பாதுகாக்கும் ஒரு குழு குறித்த விசாரணை ‘தி டாவின்சி கோட் (Da Vinci Code)’ படம். இதே வகையிலான மதவெறி இந்தியாவிலும் வெளிப்படுகிறது. ‘ஃபயர்’, ‘பத்மாவதி’, ‘பர்சானியா’, ‘தெளிவுப் பாதையின் நீசதூரம்’ போன்ற படங்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகளும் தணிக்கை அமைப்பும ஏற்படுத்தும் நெருக்கடிகள் இத்தகையவைதான்.  

கலகமும் காமமும் தடை தாண்டும்

மெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னாக, கம்யூனிசம் குறித்த அதீத பயம் விலகிய பின்னாலும், புதிய தொழில்நுட்ப சைபர் யுகத் தோற்றத்தின் பின்னான ரேட்டிங் முறை தோன்றிய பின்னாலும், அரசியல் காரணங்களுக்காகத் திரைப்படங்களைத் தடைசெய்வது என்பது இந்த நாடுகளில் முடிவுக்கு வந்துவிட்டது. என்றாலும், இன்று வரையிலும் அரசியல் தாண்டிய சமூக வன்முறையைச் சித்திரிப்பது தொடர்பாகவும் குறிப்பாக, பாலுறவு சார்ந்த வன்முறையைச் சித்திரிப்பது தொடர்பாகவும் இந்த நாடுகளில் இன்றும் தணிக்கை நிலவவே செய்கிறது.

பரபரப்பாக விற்பனையாகிய ஈ.எல்.ஜேம்ஸ் எழுதிய ‘பிஃப்டி ஷேட்ஸ் ஆப் கிரே’ நாவலை ஒட்டிய அதே பெயரிலான படமும் டேனிஷ் இயக்குநரான லார்ஸ் வான் டிரையரின் ‘நிம்ப்போமேனியாக் (Nymphomaniac (2013)’ படமும், ஸ்ட்ரானட் சோஜெவிக்கின் ‘எ செர்பியன் பிலிம் (A Serbian Film - 2010)’ படமும் அதனது அதீதமான பாலுறவு வன்முறைக் காட்சிகளுக்காகப் பல ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்யப் பட்டிருக்கின்றன. அநேகமாக மேற்கல்லாத உலக நாடுகள் அனைத்திலும் இந்தப் படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. பிற இரண்டு படங்களை ஒப்பிடுகிறபோது, ‘எ செர்பியன் ஃபிலிம்’ அதீதப் பாலுறவு கொண்ட படம்தான்.

பிற இரு படங்களிலும் ஹார்ட்கோர் போர்னோகிராபி படங்களின் தன்மை இருக்கின்றன என்று சொல்வதோடு, அவை நிலைபெற்றுவிட்ட ‘போர்னோகிராபி இன்டஸ்ட்ரி’ படங்களின் பகுதியாகவும் இருக்கின்றன என்றும் நாம் பார்க்க முடியும். இந்த இரண்டில் லார்ஸ் வான் ட்ரையரின் படம், பாலுறவில் பெண்பாத்திரம் குறித்துப் பேசும் படம் என்றாலும், இதை ‘எ செர்பியன் பிலிம்’ படத்தின் உக்கிரமான சமூகச் செய்தியுடன், வெளிப்பாட்டு முறையுடன்  ஒப்பிட முடியாது.

சோவியத், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிஸம் வீழ்ந்தபின் அந்த நாடுகளில் வளர்ந்துவரும் போர்னோகிராபி இன்டஸ்ட்ரியும், அதன் உலகச் சந்தையும், அதில் அரசு சார்ந்தவர்களும், அதிகார வர்க்கத்தவரும் திரட்டிக்கொண்ட வகையில் ஈடுபடுவதும், அதனால் அந்த நாட்டுப் பெண்களின்மீது செலுத்தப்படும் மட்டுமீறிய பாலுறவு வன்முறையையும் ‘எ செர்பியன் ஃபிலிம்’ படம் முன்வைக்கிறது. சொல்லவொணாத வன்முறைகொண்டது இந்தப் படம். பெண்கள், குழந்தைகள், பிறக்கவிருக்கும் சிசுக்கள் எல்லோரின்மீதும் அரசு எனும் ஓர் அமைப்பே திட்டமிட்டு வன்முறையை ஏவும் அவலம் குறித்த நெஞ்சை உலுக்கும் மனதை உறையச் செய்யும் காட்சிகளாலானது இந்தத் திரைப்படம்.

திரைப்படத்திற்கான அரசியல் தணிக்கையும் தடைசெய்வதும் மேற்கில் முடிவுக்கு வந்துவிட்டன. இந்தியா, இலங்கை உள்பட அனைத்து மேற்கல்லாத நாடுகளில் இன்னும் அரசியல் காரணங்களால் படங்கள் தணிக்கைக்கு உள்ளாகின்றன; தடையும் செய்யப்படுகின்றன. பாலுறவு வன்முறை என்பது அரசுகளால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படும்போது, ஈழம், காஷ்மீர் போன்ற உள்நாட்டுப் போர்களில் அரச படையினர் பாலியல் வன்முறையை அந்தந்த மக்கள் கூட்டத்தைப் பணிய வைக்கும் ஓர் ஆயுதமாகக் கையாளுகிறபோது, அத்தகைய வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வைப் பரந்துபட்ட உலகில் உருவாக்க, இத்தகைய வன்முறையைத் திரைப்படங்களில் சித்திரிப்பது என்பது, இன்று சமூகப் பொறுப்புள்ள திரைப்படக் கலைஞனின் முன்னுள்ள அத்தியாவசியக் கடமையாகவே இருக்கிறது.