குழந்தை வளர்ப்பில் நான் சந்திக்கும் பிரச்னையும் தீர்வும்!-வி.ஜே.அஞ்சனா வெளியிடும் அடுத்த வீடியோ | My son giving a chance to share my parenting experience - vj Anjana

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (18/01/2019)

கடைசி தொடர்பு:13:00 (18/01/2019)

குழந்தை வளர்ப்பில் நான் சந்திக்கும் பிரச்னையும் தீர்வும்!-வி.ஜே.அஞ்சனா வெளியிடும் அடுத்த வீடியோ

குழந்தை வளர்ப்பில் நான் சந்திக்கும் பிரச்னையும் தீர்வும்!-வி.ஜே.அஞ்சனா வெளியிடும் அடுத்த வீடியோ

வி.ஜே.அஞ்சனா தன்னுடைய சமூக வலைதளங்களில் தாய்மையைப் பிரதிபலிக்கும் விதமாக புது அம்மாக்களுக்கு உதவும் வீடியோக்களை உரிய விளக்கங்களுடன் பேசி வெளியிட்டு வருகிறார். அஞ்சனா வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் இளம் அம்மாக்களிடம் நல்ல வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. இது குறித்து அஞ்சனாவிடம் பேசினேன்.

                                                                                              அஞ்சனா

``என்னுடைய தாய்மை என்னை புதுசா யோசிக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது. இதில் இந்தத் திட்டமிடலும் இல்லை. என்னுடைய மகப்பேறு காலத்தில் நான் சந்தித்த, சிக்கல்களையும், பிரச்னைகளைக் கையாண்ட விதத்தையும், அதற்கான தீர்வுகளுடன் வெளியிட்டு வருகிறேன். பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான என்னுடைய முதல் வீடியோவே மக்களிடம் நிறைய பாசிட்டீவ் கமென்ட்களைப் பெற்றுத்தந்தது. அதன் பின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பு, தாய்மைக்குப் பின்னான உடல் குறைப்பு, தழும்புகளுக்கான தீர்வுகள், போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை எளிதாகக் கடக்க உதவும் வழிமுறைகள் என இளம் தாய்மார்களுக்குப் பயன்படும் நிறைய வீடியோக்களை வெளியிட்டு வருகிறேன்.

குழந்தையுடன் அஞ்சனா

சில பெண்கள் தாங்கள் சந்தித்த பிரச்னைகளையும் தீர்வுகளையும் பகிர்ந்து வீடியோ வெளியிடும் படியும் கூறுகின்றனர். மற்றவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பை எனக்கு என் குழந்தை உருவாக்கித் தந்திருக்கிறான். தாய்மை வீடியோக்கள் மூலமாகச் சமூக வலைதளத்தைச் சரியாகப் பயன்படுத்தும் முழு மன திருப்தி வந்துள்ளது. தொடர்ந்து குழந்தை வளர்ப்பில் அன்றாடம் நான் சந்திக்கும் பிரச்னைகளை தீர்வுகளுடன் வீடியோக்களாக வெளியிட உள்ளேன். குழந்தைக்கு இப்போது ஏழு மாதம் ஆகிறது. இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். மற்றபடி இப்போதைக்கு, வேறு எந்த எதிர்காலத் திட்டமும் இல்லை'' என்கிறார் தாய்மை பொங்க.