`இது ஒண்ணு போதும்யா!- இயக்குநர் சேரனைப் புகழ்ந்த வைரமுத்து | Director cheran's Thirumanam audio launched with tamil cinema's promising technicians

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (21/01/2019)

கடைசி தொடர்பு:18:45 (21/01/2019)

`இது ஒண்ணு போதும்யா!- இயக்குநர் சேரனைப் புகழ்ந்த வைரமுத்து

தன் படத்தின் கேரக்டர்களுக்கிடையில் நிலவும் உணர்வுகளை அவற்றின் உண்மைத் தன்மையோடு திரையிலிருந்து பார்வையாளர்களிடம் கடத்தும் கைதேர்ந்த இயக்குநர்களுள் சேரன் முதன்மையானவர் என்று வந்த அனைவரும் புகழ்ந்த வண்ணம் இன்று நடந்தது சேரனின் 'திருமணம் (சில திருத்தங்களுடன்) 'படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி.  

சேரன் திருமணம் குழுவுடன்

இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், பாடலாசிரியர் வைரமுத்து  என பல முன்னணி கலைஞர்கள் இசையை வெளியிட, மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அருண்ராஜா காமராஜ் உட்பட பல இளம் இயக்குநர்கள் பெற்றுக்கொண்டனர். விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, ``சேரனுக்குப் பாடல் எழுதும் அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானதாகவும் அதே வேளையில் கடினமானதாகவும் இருக்கும். ஆனால், எங்கள் கூட்டணியில் வந்த பாடல் ஒன்று வரலாறு படைத்தது" என பொற்காலம் படத்தில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றி  பகிர்ந்தார். ``அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு மண்ணு எடுத்துப் பாடல் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல். அது அவர் இறந்தபின் இறுதிச் சடங்கில் இசைக்கப்பட்டது. இது ஒண்ணு போதும்யா சேரன். இதுவே வரலாறு நீ இயக்குநரா இருந்ததுக்கு" என வைரமுத்து கூறினார்.

திருமணம் | சேரன்

இயக்குநர் சேரன் பேசும்போது, ``இத்திரைப்படம் பொருளாதாரச் சூழ்நிலைகள் எப்படி திருமணம் மற்றும் குடும்ப உறவுகளுக்கிடையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதை எப்படித் தவிர்ப்பது என்பதைப்பற்றி அலசும் ஒரு படைப்பாக இருக்கும். ``மேலும், விழாவில் பங்கேற்ற கலைஞர்களைப் பற்றி, ``மூத்த இயக்குநர்களை மதிக்கும் கலாசாரம் இங்கே குறைந்துவருகிறது. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் போன்றோரை அழைத்து இங்கே மரியாதை செய்கிறோம். இவர்களைப்போன்ற மூத்தவர்கள் இல்லையென்றால் இன்று தமிழ் சினிமாவே இல்லை. அவர்களையும் அவர்கள் வழிவந்த இளம் தலைமுறை இயக்குநர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, செழியன் போன்றவர்களை இங்கே கௌரவப்படுத்தினாலே அது அடுத்த தலைமுறை இயக்குநர்களாக வரவிருப்பவர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கையைத் தரும்," என்றார் சேரன்.

திருமணம்

குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஹீரோவாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் ஹீரோயினாகவும் நடிக்கும் திருமணம் (சில திருத்தங்களுடன்) படத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.