Published:Updated:

`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன?'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்

`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன?'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்
`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன?'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்

கரூரில் இருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்தில் `பேட்ட' படத்தை திருட்டு வி.சி.டியில் ஒளிப்பரப்ப, அதை ரஜினி ரசிகர் ஒருவர்,  ரஜினி ரசிகர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் டேக் செய்ய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அதை விஷாலும் முதல்வருக்கும், கடம்பூர் ராஜுவுக்கும் டேக் செய்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருக்க, கொதித்துப் போயிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

`பிரிக்க முடியாதது எது' என்று கேட்டால், 'தமிழ் சினிமாவும், திருட்டு வி.சி.டியும்' என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் திருட்டு வி.சி.டி குற்றம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. எவ்வளவுதான் டெக்னாலஜி வந்தாலும், அவற்றை எல்லாம் துச்சமாக மதித்து திருட்டு வி.சி.டி மூலம் புதுப்படங்களை பிரின்ட் போட்டு சப்ளை செய்யும் அவலம் நடக்கிறது. நடிகர்கள் சங்கத்தின் பொறுப்புக்கு விஷால் வந்தபிறகு, திருட்டு வி.சி.டி ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். நேரடியாக அவர் கடைகளுக்குச் சென்று திருட்டு வி.சி.டி வைத்திருந்தால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வைக்கிறார். தமிழக அரசும் திருட்டு வி.சி.டி தயாரிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கிறது. இந்நிலையில்தான், கரூரில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்திலேயே ரஜினிகாந்த் நடித்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் `பேட்ட' படத்தின் திருட்டு வி.சி.டியை ஒளிப்பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இரு தினங்களுக்கு முன்பு கரூரில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த அரசுப் பேருந்தில், `பேட்ட' படத்தின் திருட்டு பிரின்ட் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. `அரசுப் பேருந்திலேயே இந்த நிலமையா. அதுவும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்டத்திலேயே இந்த நிலைமையா' என்று அந்தப் பேருந்தில் பயணித்த ஒரு ரசிகர் கொந்தளித்துப் போய் உள்ளார். இதை வீடியோவாக ரெக்கார்ட் செய்த அந்த நபர், ரஜினியின் நான்கு லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள அங்கீகாரமான ரசிகர்கள் ஃபேஸ்புக் பக்கமான RBSI மற்றும் ட்விட்டர் பக்கங்களுக்கு அனுப்பியதின் மூலம், அரசுப் பேருந்தில் நடந்த இத்தகைய மோசமான செயலை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் சமூக வளைதளத்திலும் கண்டிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் பலரும் கைக்கோத்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் தயாரிப்பாளர் தரப்பான ஜே.எஸ்.கே கோபியின் மூலம் தெரிவித்துள்ளனர். 

RBSI ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை நிர்வகித்து வரும் முக்கிய நபர் ஒருவரிடம் பேசினோம். `` 'போக்குவரத்துத்துறை அமைச்சர் மாவட்டத்திலேயே அரசுப் பேருந்தில் இப்படி `பேட்ட' படத்தை ஒளிபரப்புகிறார்கள்'ன்னு எங்க பக்கத்துக்கு டேக் பண்ணினார். நாங்க உடனே ஆதாரம் கேட்டோம். அந்த ரசிகர் அரசுப் பேருந்தில் `பேட்ட' படம் ஓடும் வீடியோ, பேருந்து எண், தடம் எண்ணுன்னு பல்வேறு தகவல்களையும் அனுப்பினார். உடனே, இந்தத் தகவல்களைக் கொண்டு நாங்க ரஜினிகாந்துக்கும், விஷாலுக்கும் டேக் பண்ணினோம். விஷால் உடனே, தமிழக முதலமைச்சருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் இதை டேக் செய்தார். அதோடு, விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், `தகுந்த ஆதாரங்களோடு `பேட்ட' படம் அரசுப் பேருந்தில் ஓடிக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கோம். என்ன நடவடிக்கை?'ன்னு கேட்டார்.

ஆனால், இன்று வரைக்கும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயணிகளை கவர்வதற்காக புதுப்படமான `பேட்ட`யை ஒளிப்பரப்பி இருக்கிறார்கள். எங்க சோர்ஸில் கரூர் போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் விசாரித்தோம். 'பயணிகளை தங்கள் பேருந்தில் ஏற வைப்பதற்காக வயதான நடத்துநர் ஒருவர் இப்படி `பேட்ட' படத்தை ஒளிப்பரப்பிவிட்டார். அதிகாரிகள் அவரை கண்டிச்சுட்டாங்க'ன்னு சொன்னாங்க. அரசே இப்படி திருட்டு வி.சி.டி பெருகுவதற்கு துணை போயிருக்கிறது. மத்தவங்களுக்கு இது கெட்ட முன்னுதாரணமா ஆயிடாதா. அரசு இதை சாதாரணமாக கடந்தாலும், நாங்க விடுவதாக இல்லை" என்றார் ஆக்ரோஷமாக!