Published:Updated:

நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளா

நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளா
பிரீமியம் ஸ்டோரி
நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளா

நூறாண்டு காலம் வாழ்க

நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளா

நூறாண்டு காலம் வாழ்க

Published:Updated:
நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளா
பிரீமியம் ஸ்டோரி
நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளா

சென்னை கோவூரில், ஒற்றைப் படுக்கையறை கொண்ட அந்த வீட்டுக்குள் நுழையும்போது, நம்மை முந்திக்கொண்டு இரண்டு, மூன்று தெரு நாய்கள் வாலாட்டியபடியே வீட்டுக்குள் நுழைகின்றன. பாயில் உட்கார்ந்துகொண்டிருந்த சரளாம்மா, ‘`வாம்மா’’ என்று அழைக்கையில் கூடவே ஒரு ‘மியாவ்’ சத்தமும் சேர்ந்துகொண்டு நம்மை வரவேற்கிறது.

யார் இந்த சரளாம்மா?

எந்த வி.ஐ.பி-யின் பிறந்தநாள் வந்தாலும், தொலைக்காட்சியில், ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...’ என்று பின்னணியில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் இவருடையது.  ‘பேசும் தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடிய சரளா இப்போது எப்படியிருக்கிறார்?

‘`பக்கவாதம் வந்து ஒரு வரி பாடறதுக்கே இன்னிக்குப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்குற நான், 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்வாங்கு வாழ்ந்தவம்மா. பெரியார்,  கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலின்னு என் குரலைப் பாராட்டாத வி.ஐ.பி-க்களே இல்லை. அந்த அளவுக்குக் குரலால் கொடிகட்டிப் பறந்தவ நான்’’ என்கிற சரளாம்மாவின் குரலில்  இப்போதும் இருக்கிறது கம்பீரம்.

‘`மயிலாப்பூரில் பிறந்தேன். இன்னிக்கு ஊருக்கு வெளியே இந்தச் சின்ன கூண்டுக்குள்ள இருக்கேன். சின்ன வயசுல சினிமாப் பாட்டுன்னா உயிரு. அம்மா பாடகி, அப்பா பாடகர் போன்ற பின்னணியெல்லாம் எனக்குக் கிடையாது. பாட்டுச் சொல்லிக்கொடுக்கக் குருவும் கிடையாது. சினிமா பாடல்களைக் கேட்டு நானா பாடக் கத்துக்கிட்டேன். அம்மாவுக்கு நான் பாட்டுப் பாடறது ரொம்பப் பிடிக்கும். அவங்க சப்போர்ட் இருந்ததால, எம்.ஆர்.ராதா நாடகம், தங்கவேலு நாடகத்திலெல்லாம் பாட்டுப் பாட ஆரம்பிச்சேன்.

நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளா

ஒரு தடவை மயிலாப்பூர் ஆர்.ஆர் சபாவில் நடந்த நாடகத்தில் ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் வருகிற ‘சத்தியம் சிவம் சுந்தரம்' பாடலைப் பாடிக்கிட்டிருந்தேன். அப்போ என் பாட்டைக் கேட்ட இசையமைப்பாளர் ராமமூர்த்தி (விஸ்வநாதன்), ‘உச்ச ஸ்தாயியிலும் எவ்வளவு இனிமையா இருக்கு இந்தப் பொண்ணோட குரல்’னு சொல்லி ‘தேன்மழை’ படத்துல பின்னணிப் பாடகியா அறிமுகப்படுத்தினார். அதுக்கப்புறம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ‘வருவாயா வேல்முருகா’, சீர்காழி கோவிந்தராஜனுடன் ‘சிந்தனையில் மேடைகட்டி’, இளையராஜா வுடன் ‘உனக்கெனத்தானே இந்நேரமா’... இப்படி 20 பாடல்கள்தான் சினிமாவில் பாடியிருக்கேன். ஆனா, மேடைக் கச்சேரிகளில் நான் பாடின பாடல்களை எண்ணவே முடியாது.

வாலியோட ‘எத்தனைப் பெரிய மனிதருக்கு இத்தனை சிறிய மனமிருக்கு’, ‘நீயா இல்லை நானா’ பாடல்களையெல்லாம் மேடைக் கச்சேரிகளில் பாடியிருக்கேன். ‘என் பாடல்களை இந்தக் கறுப்புக் குயில்தான் பாடணும்’னு  என்னைக் குறிப்பிட்டுச் சொல்வார் வாலி’’ என்கிறவரின் பழுப்பேறிய கண்கள், அந்தநாள் நினைவுகளில் மின்னுகின்றன.

‘`என் கணவர் பெயர் அம்பி சுவாமிநாதன். அவர் ஒரு தபேலா ஆர்ட்டிஸ்ட். எம்.எஸ்.சுப்புலட்சுமி, குன்னக்குடி வைத்தியநாதன், டி.ஆர். மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.செளந்தர்ராஜன்னு என் கணவர் தபேலா வாசிச்சவங்க எல்லாருமே லெஜண்ட்ஸ்தான். எம்.எஸ்ஸுக் கும் சீர்காழிக்கும் அம்பின்னா உயிர். அவரைக் காதலிச்சேன். ரெண்டு பேரும் வேற வேற சாதிங்கிறதால் ரெண்டு பக்க குடும்பமும் எங்க கல்யாணத்துக்குச் சம்மதிக்கலை. வேறு வழியில்லாமல், வீட்டை எதிர்த்து, 1961-ல் சைதாப்பேட்டை கோர்ட்டில் பதிவுத் திருமணம் செய்துகிட்டோம். ரெண்டு பேரும் சம்பாதிச்சோம். அதனால எந்தச் சங்கடமும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தோம். ரெண்டு பெண் குழந்தைகள் பிறந்தாங்க.

இப்ப நீங்க எல்லாம் கொண்டாடுற எத்தனையோ பெரிய மியூசிக் டைரக்டர்ஸ் எல்லோரையும் அவர்களுடைய ஆரம்பக்கட்டத்தில் பார்த்தவ நான். அவங்களுக்கெல்லாம் நானும் என் கணவரும் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கோம்’’ என்கிறவர் அடுத்தடுத்த வார்த்தைகளை அப்படியே மென்று விழுங்குகிறார். தொண்டைக்குழி மேலும் கீழுமாக அசைய, அவர் எதையோ கொட்டத் துடிப்பது புரிகிறது.

சில நொடிகளில் தன்னைச் சமன்படுத்திக்கொண்ட சரளாம்மா, ‘`செய்ததையெல்லாம் சொல்லிக் காட்டுகிற வயசில் இப்ப நான் இல்லைம்மா.

80 வயசாயிடுச்சு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மேடைக் கச்சேரி பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். திடீர்னு வந்த பக்கவாதம் பாட முடியாதபடிக்கு என் குரலை எடுத்துட்டுப் போயிடுச்சு. எவ்வளவோ மேடு பள்ளங்கள் பார்த்துட்டேன். இஸ்லாமியப் பாடல்கள் பாடறதுல ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு பெயர் வாங்கினது ஒரு காலம். பாட முடியாம முடங்கிக் கிடக்குறது ஒரு காலம்’’ என்கிறவர் பழைய நினைவுகளில் சில நொடிகள் மூழ்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளா

சரளாம்மாவின் இளைய மகள் கஜலட்சுமி, ‘`அப்பா 1999-ம் வருஷம் ஹார்ட் அட்டாக்கில் இறக்கிற வரைக்கும் எங்களுக்குக் கஷ்டம்னா என்னன்னே தெரியாது. இன்னிக்கு நிலைமை தலைகீழ். நானும் அக்காவும் அம்மாகூடவே இருக்கணும்கிறதுக்காக கல்யாணமே பண்ணிக்கலை. வயசு 55-ஐ தாண்டிடுச்சி எங்களுக்கு.

அம்மாவுக்கும் எங்களுக்கும் நாய், பூனை, மாடுன்னு விலங்குகள்னா ரொம்பப் பிடிக்கும். அதனால, எவ்வளவு கஷ்டம்னாலும் கைப்பிடி அரிசி அதிகமாகப் போட்டு வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற வாயில்லா ஜீவன்களுக்குச் சாப்பாடு போடுவோம். அது எந்த ஹவுஸ் ஓனருக்கும் பிடிக்க மாட்டேங்குது. வீட்டை காலி பண்ணச் சொல்லிடுறாங்க. இப்படியே பல வீடுகள் மாறிட்டோம். இந்த வீடு இன்னும் எத்தனை நாளைக்கோ தெரியலை. அம்மாவுக்குக் கடைசி காலத்துல, அவங்க பிறந்த மயிலாப்பூரில் வாழணும்னு ஆசை. அம்மா காலத்துக்கு அப்புறம் எங்க நிலைமை என்னன்னு எங்களுக்குத் தெரியலை. ஏதாவது ஆசிரமத்துல சேர்ந்திடலாம்னு விசாரிச்சா ஆளுக்கு ஒரு லட்சம் கேட்கிறாங்க. நாங்க அவ்ளோ பணத்துக்கு எங்க போறது?’’ என்கிறார் வருத்தமாக.

மகள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த சரளாம்மா, ‘`என் மகள்கள் படிக்கலை. எனக்கப்புறம் அவங்களுக்கு யார் பாதுகாப்புத் தருவாங்க, புகலிடம் தருவாங்கன்னே தெரியலை’’ என்று கலங்குகிறார்.

‘`இப்பவரைக்கும் எஸ்.பி.பி, ரஹ்மான் தம்பி, விஷால் தம்பி மூணு பேரும்தான் கைகொடுத்து காப்பாத்திட்டு வர்றாங்க. அவங்க மூணு பேரும் நல்லா இருக்கணும்னு நான் ஆசீர்வதிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லிடுறீங்களா’’ என்றவாறே, நடுங்கும் கரங்களால் கும்பிட்டு வழியனுப்புகிறார் சரளாம்மா.

- ஆ.சாந்தி கணேஷ்,  படங்கள் : க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism