"இப்போ வர்ற எல்லா படத்துக்கும் இளையராஜாதான் மியூசிக் டைரக்டர்" - இயக்குநர் பாக்யராஜ் | director Bhagyaraj praises ilayaraja in mehandi circus audio launch

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (25/01/2019)

கடைசி தொடர்பு:17:15 (25/01/2019)

"இப்போ வர்ற எல்லா படத்துக்கும் இளையராஜாதான் மியூசிக் டைரக்டர்" - இயக்குநர் பாக்யராஜ்

'மெஹந்தி சர்க்கஸ்' இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாக்யராஜ், இளையராஜாவின் இசையைப் பற்றி பேசினார். 

சர்கஸ்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்த சரவண ராஜேந்திரன், தன் முதல் படைப்பான 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தை வெளியிட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார். தேசியவிருது பெற்ற இயக்குநர் ராஜு முருகனின் அண்ணனான இவர், ஏற்கெனவே 'ஜோக்கர்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். அறிமுகங்கள் ரங்கராஜ், சுவேதா திரிபாதி நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் வெளியாகவிருக்கும் மெஹந்தி சர்க்கஸ், திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.

பாக்யராஜ்

மூத்த இயக்குநர் பாக்கியராஜ், நடிகர் சிவகுமார், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, வினோத், நலன் குமாரசாமி உட்பட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில், ஷான் ரோல்டன், பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் செல்வா, கதை ஆசிரியர் ராஜு முருகன் என படக்குழுவினரும் பங்கேற்று சரவண ராஜேந்திரனை வாழ்த்தினர்.

விழாவில் பேசிய இயக்குநர் பாக்கியராஜ், "எனக்கு இங்கே வரும்வரை சரவணனைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், இந்தப் படத்தின் கலை நேர்த்தி, முன்னோட்டம், இசை என எல்லாம் இவர் எப்படிப்பட்ட கலைஞர் என்பதைக் காட்டுகின்றன. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது" என்று பாராட்டினார்..

பாக்யராஜ்

மேலும், படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு, "படத்தில் இசைக்கு ஒரு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. அதிலும் ராஜு முருகனின் 'குக்கூ'வைப் போல இதிலும் இளையராஜாவின் இசை ஒரு தனி கதாபாத்திரமாக இருக்குமோ என்றே தோன்றுகிறது. அப்படியென்றால், இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டனோடு சேர்த்து, இளையராஜாவும்  ஓர் இசையமைப்பாளர் தான். இந்தப் படம் மட்டுமல்ல, இன்று வரும் அத்தனை படங்களிலும் இளையராஜா இருக்கிறார் என்பதே உண்மை. எல்லாப் படங்களுக்கும், அவரும் ஒரு ஓர் இசையமைப்பாளர்தான்" என்றார்.