வெப் சீரிஸாகும் `பொன்னியின் செல்வன்’ நாவல்! - சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார் | soundariya rajinikanth to produce adaptation of ponniyin selvan novel as web series

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (30/01/2019)

வெப் சீரிஸாகும் `பொன்னியின் செல்வன்’ நாவல்! - சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார்

பழந்தமிழரின் வீர வரலாற்றுக்கும் தமிழ் நாவல் கலாசாரத்துக்கும் சாட்சியாகத் திகழும் `பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சிரீஸாகத் தயாரிக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். 

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அமர காவியமான `பொன்னியின் செல்வன்’ நாவலின் கதாநாயகன் வந்தியத்தேவனாக நடிக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் எனப் பலரும் ஆசை கொண்டிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக இயக்க ஆரம்பகட்டப் பணிகளில் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் சௌந்தர்யா, 'பொன்னியின் செல்வன்' நாவலைத் தழுவி ஒரு சரித்திர வலைத்தொடரை தயாரிக்கவுள்ளார்.

பொன்னியின் செல்வன்

இதுகுறித்துப் பத்திரிகை அறிக்கை அனுப்பியுள்ள சௌந்தர்யா, ``பல்லாண்டுகளாகத் தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரசின் காலத்தைப் பற்றி விறுவிறுப்பும் வீரமும், தொன்மையும், காதலும் நகைச்சுவையும் கலந்த காவியமாக இது இருக்கும். இந்த நாவலைப் படித்த நாள் முதலே எனக்கு இதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.   

சௌந்தர்யா ரஜினிகாந்த்

இத்தொடரைத் தயாரித்து ஆக்கத்தலைமை பொறுப்பை மேற்கொள்கிறார் சௌந்தர்யா. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளராக இருந்த சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகிறது இத்தொடர். இதில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. டைம்ஸ் இன்டெர்நெட் நிறுவனம் சமீபத்தில் எம் எக்ஸ் ப்ளேயர் நிறுவனத்தை கையகப்படுத்தியது. அந்த நிறுவனத்தின் வழியே தயாராகும் இந்த வெப் சிரீஸ் மட்டுமல்லாமல், தமிழில் பற்பலத் தொடர்களையும் தயாரிக்கவுள்ளது.