Published:Updated:

`தலைவன் யார், எப்படி இருக்கணும்?'- பட விழாவில் ரஜினியை சரமாரியாக விமர்சித்த சீமான்

`தலைவன் யார், எப்படி இருக்கணும்?'- பட விழாவில் ரஜினியை சரமாரியாக விமர்சித்த சீமான்
`தலைவன் யார், எப்படி இருக்கணும்?'- பட விழாவில் ரஜினியை சரமாரியாக விமர்சித்த சீமான்

"சினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல" என்று நடிகர் ரஜினிகாந்த்தை சரமாரியாக விமர்சித்துப் பேசினார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சென்னை வடபழனியில், `மிக:மிக அவசரம்' என்ற படத்தின் முன்னோட்ட விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், சேரன், தயாரிப்பாளர் ராஜன், நடிகர் ரித்தீஷ் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

இதில் பேசிய சீமான், "பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருமே இருக்கிறது. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல்  பார்த்துக்கொள்வது தான் காவல்துறையின் கடமையாக இருக்க வேண்டும். அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது அவர்களுக்கு பண்டிகை விழா என எந்த கொண்டாட்டங்களும் கிடையாது. ஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவர்களைவிட பெண்களுக்கு அதிகம் சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அங்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அவர்களிடம் பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காக நானும் அமீர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தோம். அப்போது அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர்கள் எங்களைப் பார்த்து அழுதபடி நாங்கள் வீட்டை விட்டு வந்து நான்கு நாள்கள் ஆகிவிட்டது மாற்றுத் துணிகூட கொண்டு வரவில்லை. எங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை. தயவுசெய்து இந்த போராட்டத்தை சீக்கிரம் முடியுங்கள். அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும் என கெஞ்சியதை பார்த்ததும் பெண் காவலர்களின் நிலை என்னவென்று தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. காவலர்களுக்கு பணிச்சுமையைக் குறைத்து, நல்ல ஊதியம், நல்ல வீடு என அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும்போதுதான் அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியும். தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி மூலம்தான் லஞ்சம் ஊழலை ஒழித்து நல்லாட்சி கொடுக்க முடியும்.

இந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீஸாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும். ஜெகன் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு. இந்த படம் பார்த்துவிட்டு அது இன்னும் அதிகமானது. இவ்வளவு நல்ல கதைகளை வைத்து இருக்கும்போது, எதற்காக `என் ஆளோட செருப்ப காணோம்' என்கிற படங்களை எடுக்கிறாய் என்று நான் திட்டியது உண்மைதான். இந்த படத்தை சிறந்த சமூக பார்வையாளனாக பெண் காவலர்களை பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும் அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா நடிக்காமல் ஒரு பெரிய நடிகை நடித்திருந்தால் தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய மார்கெட் இந்த படத்துக்கு கிடைத்திருக்கும். ஆனால் படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும்போது அந்த நடிகைதான் தெரிவார். ஆனால் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பிரியங்கா நடித்திருப்பதால் தான் அந்த கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாகப் பதிகிறது அதுதான் இந்த படத்திற்கு பலம்.

சினிமா ஒரு சாக்கடை என பேசிப்பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்துவிட்டார்கள். சீரியலில் நடிக்க வரும் பெண்கள்கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள். பிரியங்காவை போன்ற பெண்களைப் பார்த்து இனி பலரும் சினிமாவுக்கு வர ஆரம்பிப்பார்கள். தலைவரை எங்கே தேடுறாங்க திரையரங்களில்தான். எல்லோரும் பேசுறாங்க. தொலைக்காட்சியில் எல்லோரும் பேசுறாங்க. ரஜினிகாந்த்தை ரஜினிகாந்த் என்று சொல்வதே இல்லை. தலைவர் படத்தில் நடிச்சிருக்கிங்க. தலைவர பாத்துட்டீங்களா என்றுதான் பேசுறாங்க. தலைவர்னா யாருன்னு தெரியாத கூட்டத்தை வைத்துக்கொண்டு எப்படி நீ வாழவைப்பே. தலைவர்ன்னா யாரு. சினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல.

ரஜினிகாந்த் உனக்கு தலைவன்னா பிரபாகரன் யாரு, காமராஜர் யாரு, கக்கன் யாரு, ஜீவானந்தம் யாரு, சிங்காரவேலர் யாரு, அயோத்திதாசன் யாரு, இரட்டைமலை சீனிவாசன் யாரு, பசும்பொன் முத்துராமலிங்கம் யாரு. இவர்கள் எல்லோரும் யாரு. இவர்களின் பெயர் என்ன. இவர்கள் என்ன சமூக விரோதியா, இல்ல நகர்ப்புற நக்சல்களா, ஆங்கிலோ இந்தியன்ஸா. என்ன கதை இது. தலைவன் என்பவன் தன்னையே தண்ணீரில் கரைத்து சுவைகூட்டும் உப்பைப்போன்றவன். தலைவன் என்பவன் தன்னையே எரித்து உருக்கிக்கொண்டு உலகத்துக்கு ஒளியைக்கொடுக்கிற மெழுகுவத்தியாக இருக்கணும். அவன்தான் தலைவன்.

தலைவன் ஒருவன் எதை ஒன்றையும் இழக்கத் தயாராக இல்லாதவன், தலைமை ஏற்கும் தகுதியைப் பெறமாட்டான். தூக்கத்தைத் தொலைக்கணும். துன்பம் தாங்கணும். விமர்சனம் தாங்கணும். தலைவன் என்பவன் தலையில் கிரீடம் சுமப்பவன் அல்ல எனது அன்பு பெற்றோர்களே உடன்பிறந்தவர்களே. தழும்புகளைத் தாங்குகிறவன்தான் தலைவன். தலைவன் என்பவன் அடக்கி ஆள்பவன் அல்ல. அனைவரையும் அரவணைத்து வாழ்பவன். இரண்டு படத்துல கையை சுண்டிவிட்டா, அப்படிப் பேசிவிட்டா தலைவனா... இந்தக் கூட்டத்தைத் திருத்துவது ரொம்பக் கஷ்டம். ரொம்பக் கஷ்டம்" என்று ஆவேசத்துடன் பேசிமுடித்தார்.