Published:Updated:

`எந்தத் தடையும் இல்லை’ - `இளையராஜா 75’ விழாவுக்கு நீதிமன்றம் அனுமதி!  

`எந்தத் தடையும் இல்லை’ - `இளையராஜா 75’ விழாவுக்கு நீதிமன்றம் அனுமதி!  
`எந்தத் தடையும் இல்லை’ - `இளையராஜா 75’ விழாவுக்கு நீதிமன்றம் அனுமதி!  

`இளையராஜா 75’ பாராட்டு விழாவுக்கு எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

1,000 படங்களுக்குமேல் இசையமைத்த இசைஞானி இளையராஜாவைக் கௌரவப்படுத்தும் விதமாகத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பாராட்டு விழா ஒன்றை நடத்துகிறது. அதன்படி `இளையராஜா 75’ விழா, பிரமாண்டமாக வரும் 2, 3-ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இளையராஜாவின் 75 வது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையிலும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர். 

இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆப் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. அது தொடர்பான ஒப்பந்தத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பாராட்டு விழா எனக் கூறிவிட்டு, நிதி திரட்டும் நிகழ்ச்சியாக நடத்துகின்றனர். 7 கோடி ரூபாய் வரை நிதி திரட்டுவதாகக் கூறியுள்ளனர். அதனால் அனைத்தையும் மேற்பார்வையிட நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “இந்த நிகழ்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வீடுகட்டித் தர நிதி திரட்டும் நோக்கில் இளையராஜா நிகழ்ச்சி நடத்த வேண்டும் என 2016-ம் ஆண்டே முடிவு செய்யப்பட்டது. அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்துதான் இளையராஜா 75 நிகழ்ச்சி குறித்து முடிவெடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அப்போது, ``இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியைத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தத் தடையில்லை. அதேநேரம் கணக்கு வழக்குகளை மார்ச் 3-ம் தேதி பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்ய வேண்டும். உரிய ஆதாரங்களின்றி கடைசிநேரத்தில் வழக்கு தொடுத்ததால் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் தாக்கல்செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர்.