நாளொன்றுக்கு 17,000 ரசிகர்கள் இளையராஜா 75ஐ காண வருவார்கள்: விஷால் தகவல் | Vishal press meet for Ilayaraja 75 at YMCA

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (01/02/2019)

கடைசி தொடர்பு:13:58 (01/02/2019)

நாளொன்றுக்கு 17,000 ரசிகர்கள் இளையராஜா 75ஐ காண வருவார்கள்: விஷால் தகவல்

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில், தமிழ்த் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வியாழனன்று, இந்த நிகழ்ச்சிக்கான மேடை வடிவமைப்பு, திறந்தவெளி அரங்க அமைப்புப் பணிகளைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், "நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் 3-ம் தேதி நிகழ்ச்சியிலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2-ம் தேதியன்றும் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளனர்" என்றார்.

"மேலும், முதல் நாள் நிகழ்ச்சியன்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விழாவைத் தொடங்கிவைக்க, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பங்கேற்பதாகச் சொல்லியிருக்கின்றனர்" என விஷால் தெரிவித்தார்.

இளையராஜா

 "இந்த விழாவில் நாளொன்றுக்கு 17,000 இசை ரசிகர்கள் வருகைதருவார்கள். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா என இந்தியா முழுக்க பலர் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளனர்" என்றார்.

வேறெந்த அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களெல்லாம் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு, "அன்னக்கிளி தொடங்கி இன்று வரை யாரோடெல்லாம் இளையராஜா பணியாற்றியுள்ளாரோ, அவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து மூத்த மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது" என விஷால் கூறினார்.

முதல் நாளன்று இளையராஜா கண்டுகளிக்க, திரையுலகப் பிரபலங்கள் கலை நிகழ்ச்சிகளை அவர் முன் அரங்கேற்றுவர். இரண்டாவது நாள், ஹங்கேரியிலிருந்து சென்னை வந்துள்ள குழுவுடன் இணைந்து இளையராஜா தன் இசை நிகழ்ச்சியை நடத்துவார்.

ராஜாவின் இசையில் நம்மை மூழ்கடிக்க இருக்கும் இந்த நிகழ்வுகளுக்கு டிக்கெட்டுகள் உங்களுக்கு இலவசமாக வேண்டுமா? இங்கு க்ளிக் செய்யுங்கள்.