`தெர்மக்கோல், பசுக் காவலர்கள், யோகா!’ - ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' டிரெய்லர் | RJ Balaji's LKG trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (02/02/2019)

கடைசி தொடர்பு:19:54 (02/02/2019)

`தெர்மக்கோல், பசுக் காவலர்கள், யோகா!’ - ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' டிரெய்லர்

நடிகர்  ஆர்ஜே பாலாஜி  கதாநாயகனாக அறிமுகமாகும் 'எல்.கே.ஜி' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆர்ஜே பாலாஜி

ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை பிரபு இயக்கியிருக்கிறார். படத்தில் பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுக்கே பாலாஜியை அரசியலுக்கு வரவேற்பதுபோல் சுவர் விளம்பரங்கள், வைகோ-வுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி, கிரிக்கெட் வீரர்களைக்கொண்டு முடிவை அறிவித்தது எனப் பல விளம்பரங்களைச் செய்தார், ஆர்ஜே பாலாஜி. 

ஆர்ஜே பாலாஜி

இந்தப் படத்தில் நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்திஷ், சந்தான பாரதி, ராம்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த படம், சில காரணங்களுக்காகத் தள்ளிப்போனது. ஷான் ரோல்டன் பாடியிருந்த `இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ பாடல் வெளியாகி ஏற்கெனவே ஹிட்டடித்திருந்த நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. 

ஆர்ஜே பாலாஜி

2 நிமிடங்களுக்கு மேல் ஓடும் டிரெய்லரில், உள்ளூர் அரசியல் முதல் தேசிய அரசியல் வரை பல்வேறு ரெஃபரன்ஸுகள் காட்டப்பட்டிருக்கின்றன. ஆற்றில் தெர்மக்கோல் அட்டைகளை விடுவது, பசு மற்றும் மனிதன் ஆகியோர் ஆபத்தில் இருக்கும்போது யாரைக் காப்பாற்றுவாய் என ஆர்ஜே பாலாஜியை, ப்ரியா ஆனந்த் கலாய்ப்பது, யோகா சேலஞ்ச் என ஏகப்பட்ட அரசியல் வாடை டிரெய்லரில் அடிக்கிறது.