``அதப்பத்தி நான் பேச விரும்பல!" -விஜய் சேதுபதி மீது விரக்தியில் `96' தயாரிப்பாளர் | Clash between producer and rest of 96's crew

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:14:30 (05/02/2019)

``அதப்பத்தி நான் பேச விரும்பல!" -விஜய் சேதுபதி மீது விரக்தியில் `96' தயாரிப்பாளர்

சென்ற ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த `96' படத்தின் 100 நாள் வெற்றிவிழா நேற்று நடைபெற்றது. புதுமுக இயக்குநர் பிரேம்குமாரின் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்ப்ரைஸுக்காக நந்தகோபால் தயாரித்தார்.

படம் ரீலிஸ் முதலே தயாரிப்பாளர் தரப்பு பல பிரச்னைகளைச் சந்தித்துவந்தது. கடைசி நிமிடச் சிக்கல்களால் படத்தின் அதிகாலைக் காட்சி ரத்தானது. ரிலீஸ் தாமதமானபோது விநியோகிஸ்தர் லலித் குமார் தலையீட்டால் படம் அன்று காலையே வெளியானது.

96

இந்நிலையில், நேற்று நடந்த விழாவில் தயாரிப்பாளர் நந்தகோபால் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ``எனக்கு அந்த விழாவுல உடன்பாடே இல்ல. போஸ்டர்ல கூட எங்க பெயர ரொம்ப சின்னதா போட்டிருந்தாங்க. மூணு நாளா அந்த வாக்குவாதம் தான் எங்களுக்குள்ள நடந்துச்சு" என்றார். 

விஜய் சேதுபதியிடம் இதைப்பற்றிக் கேட்டீர்களா என்றதற்கு, ``அவரு எப்பவுமே இயக்குநருக்குதான் சப்போர்ட் பண்ணுவாருங்க. இதுக்கு மேல இந்த விஷயத்தப்பத்தி பேசுனா ரொம்ப காண்ட்ராவெர்ஷியல் ஆயிடும். அதான் நான் அந்த விழாவுக்கும் போகல. அதப்பத்தி நான் பேச விரும்பல" என நந்தகோபால் கூறினார்.

இது இப்படி இருக்க, இயக்குநர் பிரேம் நம்மிடம் பேசுகையில், ``அந்த விழாவ நடத்துனதே லலித் குமார் தரப்புதான். அப்படின்னா அவங்க பேருதான் பெருசா இருக்கும் போஸ்டர்ல. அதுவும் இல்லாம லலித் சார் தான் விஜய்யை வச்சு அடுத்த படம் `துக்ளக்' பண்றாரு. அதோட அறிமுக விழாவும் சேர்த்து பிளான் பண்ணியிருந்தாங்க" என்றார்.

ஏன் நந்தகோபால் வரவில்லை என்ற கேள்விக்கு, ``அவர் வராதது ஒரு பெரிய விஷயமே இல்ல. படத்துல த்ரிஷாவுக்கு டப்பிங் பேசுன சின்மயி கூட தான் விழாவுக்கு வரல. அத ஒரு பிரச்னையாக பாக்க வேண்டாம்" என கூலாகப் பதிலளித்தார்.