'பரியேறும் பெருமாள்' படத்தைப் பாராட்டிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் | Pariyerum Perumal appreciated at Washington Tamil Sangam

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:18:00 (05/02/2019)

'பரியேறும் பெருமாள்' படத்தைப் பாராட்டிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கம்

அமெரிக்க தமிழ்ச் சங்கம், 'பரியேறும் பெருமாள்' பட இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் சிக்கல்களை அதன் உண்மைத் தன்மையோடு பேசிய படங்களில், 'பரியேறும் பெருமாள்' தமிழ் சினிமாவில் மிக முக்கியமானது. அதற்காக, அந்தப் படம் பல விருதுகளையும் பாராட்டுகளையும் அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவான இத்திரைப்படம், பெரும் வெற்றிபெற்றது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க தமிழ்ச் சங்கம் அதன் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கிறது. 

பரியேறும் பெருமாள்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள தமிழ்ச் சங்கம் நடத்திய ஒரு பாராட்டு விழாவில், மாரி செல்வராஜுக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து, அச்சங்கத்தின் சார்பில், "இதுபோன்ற  திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்க வேண்டும், சமூகத்தில் நிலவும் சாதிய வர்க்க வேறுபாடுகளைக் கலைகள் மூலமாக உடைத்தெறியும் வேலை இயக்குநர்களுக்கு உள்ளது" என ஒரு அறிக்கையில் கூறப்பட்டது.

மேலும், "பரியேறும் பெருமாளின் வெற்றியால், இது போன்ற படங்களைத் தைரியமாகத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் இனி முன்வருவார்கள். இந்தப் படத்தின் குழுவினருக்கு வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.