விஷாலின் சின்னம்; மைக்கேல் ஜாக்சியின் டான்ஸ்! - விகடன் சினிமா விருதுகள் ஹைலைட்ஸ் | Highlights of vikatan cinema awards

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (06/02/2019)

கடைசி தொடர்பு:17:46 (06/02/2019)

விஷாலின் சின்னம்; மைக்கேல் ஜாக்சியின் டான்ஸ்! - விகடன் சினிமா விருதுகள் ஹைலைட்ஸ்

விகடன் சினிமா விருதுகள்

2018-ம் ஆண்டின் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி, ஜனவரி மாதம் 5-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. தமிழ் சினிமாவின் பல உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொள்ள, மிகப் பிரமாண்டமாக அரங்கேறியது விகடன் சினிமா விருதுகள். இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சன் டிவி-யில் ஒளிபரப்பான அதே நேரம், சினிமா விகடன் யூடியூப் சேனலிலும் அந்த வீடியோக்கள் வெளியாகின. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த வீடியோக்களின் சிறு தொகுப்பு இதோ...

 

’காலா’ படத்துக்காக சிறந்த வசனகர்த்தா விருதை இயக்குநர் பா.இரஞ்சித், ஆதவன் தீட்சண்யா, மகிழ்நன் ஆகியோர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் கைகளால் பெற்றுக்கொண்டனர். சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார், நடிகை ஈஸ்வரி ராவ். பிரபுதேவா நடித்த ’லட்சுமி’ படத்தின் மூலம் தன்னை ஒரு மைக்கேல் ஜாக்சி என நிரூபித்த தித்யா பாண்டே, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக விருதை இயக்குநர் விஜய்யிடம் இருந்து வாங்கிப் பிறகு, தனது ஸ்டைலில் ஒரு நடனமும் ஆடினார்.

சிறந்த வில்லிக்கான விருதை, தனது குரு பாலாவின் கரங்களால் பெற்றுக்கொண்டார் நடிகை வரலட்சுமி. சிறந்த படத்திற்கான விருதைப் பெறுவதற்கு, ’மேற்குத்தொடர்ச்சி மலை’ படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் மேடை ஏறி, விழாவை மேலும் பிரமாண்டமாக்கினர். நடிகை இந்துஜா, தான் அறிமுகமான ’மேயாத மான்’ படத்தின் பாடலில் தொடங்கி சில ஹிட் பாடலுக்கு கலக்கல் நடனம் ஆடினார். ’96’ படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்யா பாஸ்கருக்கு அவரது அப்பா எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து நடிகர்கள் ரமேஷ் கண்ணா, கலையரசன் ஆகியோர் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை வழக்கினர். தனது மகன் விருது வாங்கிய மகிழ்ச்சியை முத்தங்களால் பரிமாறிக்கொண்டார், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

 

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்திலிருந்து வந்திருந்த நடிகர்கள் சிவக்குமார், நாசர், விஷால், அரவிந்த் சாமி பொன்வண்ணன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோருக்கு ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசன் அவர்கள் காசோலைகளை வழங்கினார். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் சதீஷ், ‘விஷால் தனது கட்சிப் பெயரை தற்போது அறிவிப்பார்’ என கலகலப்பாகச் சொல்ல, ‘ஏங்க நீங்க வேற... தயாரிப்பாளர் சங்கத்துக்கே பூட்டு போடுறாங்க’ என விஷால் பதில் சொன்னதும், ‘அப்போ உங்க கட்சி சின்னமா பூட்டை வாங்கிடலாமா’ என சதீஷ் கேட்க, ‘சாவி’ என்றார் விஷால். மேலும், ’96’ படத்துக்காக நடிகை த்ரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை அரவிந்த் சாமி கொடுக்க, ’96’ படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார், த்ரிஷா.