`வாங்குன பணத்தை கொடுத்துட்டு குறை சொல்லணும்' - திருப்பூர் சுப்ரமணியம் காட்டம்! | South Indian Film Financiers Association started by top financier's from kollywood

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:47 (07/02/2019)

`வாங்குன பணத்தை கொடுத்துட்டு குறை சொல்லணும்' - திருப்பூர் சுப்ரமணியம் காட்டம்!

ஒவ்வொரு திரைப்படத்தின் தயாரிப்பில் பின்னின்று உதவுபவர்கள் சினிமா ஃபைனான்சியர்கள். திரைப்படத் துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களாக இருக்கும் சினிமா ஃபைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இதுவரை இருந்ததில்லை. பல நாள்களாக பேச்சுவார்த்தைகளில் இருந்த சினிமா ஃபைனான்சியர்களுக்கான சங்கம் இன்று தொடங்கப்பட்டது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association - SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்தச் சங்கத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. 

சினிமா பைனான்சியர்கள் சங்கம்

இச்சங்கத்தின் தலைவராக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் செயல்படுவார் என்றும், 'தலைவா' படத்தின் தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் துணைத் தலைவராகவும், 'தங்கமகன்', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் பொருளாளராகவும், நடிகர் அருண் பாண்டியன் செயலாளராகவும் செயல்படுவார்கள் என்றும், R.B.சௌத்ரி, ஜெஸ்வந்த் பண்டாரி, பங்கஜ் மேத்தா, அபிராமி ராமநாதன், அழகர் ஆகியோர் சங்கத்தின் கௌரவ உறுப்பினர்களாக இருந்து வழி நடத்துவார்கள் என்றும் ராம், அபினேஷ் இளங்கோவன், D.C.இளங்கோவன், பதாம், சீனு ஆகியோருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. 

சங்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், ``தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத்துறை நன்கு வளரப் பாடுபடும்.

திருப்பூர் சுப்ரமணியன்

ஃபைனான்ஸ் செய்து படப்பிடிப்பு முடங்கிக்கிடக்கும் திரைப்படங்கள், எல்லா வேலைகளும் முடிந்து வெளிவராத திரைப்படங்கள் ஆகியவை ரிலீஸாக இச்சங்கம் மூலம் தீர்வு காணப்படும். வரும் காலங்களில் சுமுகமாக பேசி திரைப்படங்கள் வெளிவர முடிவுகள் எட்டப்படும். நடிகர்கள் இயக்குநர்கள் மற்றும் நடிகைகள் சம்மதித்து அட்வான்ஸ் பெற்றுக்கொண்ட படங்களை முடிக்காமல் வேறு திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விடுவதால் சம்பந்தப்பட்ட திரைப்படம் முடங்கும் நிலையும், அதிக தாமதமும் ஏற்படுகின்றது. முதலில் சம்மதித்து ஆரம்பிக்கப்பட்ட படங்களையே முதலில் முடிக்க வேண்டும். அதையும் மீறி அடுத்த படங்களுக்கு தேதியைக் கொடுப்பவர்களின் படங்களுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்யப்படும். ஏற்கெனவே, பைனான்சியரின் அனுமதி பெறாமல் லெட்டர் கொடுக்கும் லேப்க்கும் இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றிப் பேசி முடிவு எடுக்கப்படும். திரைப்படத் துறையில் முதலீடு செய்பவர்களான தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், ஃபைனான்சியர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய இவர்கள் திரைப்படத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களின் சங்கங்களுடன் நட்புடன் பழகி திரைப்படத்துறை வளரப் பாடுபடுவோம். 

சில தயாரிப்பாளர்கள் தாங்கள் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத பட்சத்தில், ஃபைனான்சியரை குற்றம் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு இனிமேல் ஒத்துழைப்பு எப்படிக் கொடுப்பது என்பது பற்றியும் இச்சங்கம் பேசி முடிவு எடுக்கும். குற்றம் குறை கூறுபவர்கள் தாங்கள் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட வேண்டும்" என்று தடலடியாக முடித்தார்.