`விவரம் தெரியாமல் யாரையும் எடைபோடாதீர்கள்' - விமர்சித்தவர்களை விளாசிய ரஹ்மான் மகள் கதிஜா! | I’m a sane mature adult who knows to make my choices in life says khatija rahman

வெளியிடப்பட்ட நேரம்: 06:19 (07/02/2019)

கடைசி தொடர்பு:08:01 (07/02/2019)

`விவரம் தெரியாமல் யாரையும் எடைபோடாதீர்கள்' - விமர்சித்தவர்களை விளாசிய ரஹ்மான் மகள் கதிஜா!

அண்மையில் மும்பையில் நடந்த '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா இருவரும் மேடையில் கலந்துரையாடியது மிகப் பரவலாய் பேசப்பட்டது. அந்த நிகழ்வில் கதிஜா, தன் முகத்தைப் பர்தாவால் முழுதாக மூடியிருந்தார். இது சமூகவலைதளங்களில் ரஹ்மான் பிற்போக்குவாதி, அவர் மகளை வற்புறுத்தி இப்படி செய்யச் சொல்லியிருக்கிறார் என விஷயம் வேறு திசையில் செல்ல ஆரம்பித்தது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கதிஜாவும், ரஹ்மானும் தங்கள் விளக்கங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

கதிஜா

கதிஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``நானும், அப்பாவும் மேடையில் பேசிக்கொண்டது இவ்வளவு பரவலாக பேசப்படுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அதேசமயம், நான் அணிந்திருந்த முகத்திரை என் தந்தையின் வற்புறுத்தலாலே நடந்தது என்றும், அவர் உள் ஒன்று புறம் ஒன்று என இரட்டை நிலைகொண்டவர் என்ற பேச்சுகளையும் ஆங்காங்கே காண முடிந்தது. நான் உடுத்தும் உடையோ அல்லது என் தோற்றமோ, நான் என் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளுக்கோ எனது பெற்றோர்களுக்கு துளியும் சம்பந்தம் கிடையாது. நான் முழுமையாக ஏற்று, பெருமையுடனும் சுய விருப்பத்துடன்தான் பர்தாவை அணிந்திருக்கிறேன். எனக்கு எது வேண்டுமென்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்கள் எது அணிய வேண்டுமென்ற சுதந்திரம் இருக்கிறது. அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். விவரம் தெரியாமல் யாரையும் எடைபோடாதீர்கள்" எனப்பதிவிட்டுள்ளார்.

 கதிஜா

 

இதைத் தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில், 'நீட்டா அம்பானியுடன் எனது குடும்பத்தின் பெண்கள் கதிஜா, ரஹீமா, சாயிரா" என ஒரு புகைப்படத்தை  #freedomofchioce என்ற ஹேஷ்டேக்குடன் பதிவு செய்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

 rahman #freedomofchoice

 

அதில் அவரது இரண்டாவது மகளும், மனைவியும் பர்தா அணியவில்லை. தன் குடும்பத்தில் அவரவர் விருப்பு, வெறுப்புகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதைத் தெரிவிக்கும் விதமாக அந்தப் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.