`சுந்தர்.சி அப்படியில்ல!’ - புதிய படம் குறித்து நெகிழும் உதவி இயக்குநர் கதிர் | Sasikumar-19 movie about village and city life

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (07/02/2019)

கடைசி தொடர்பு:16:20 (07/02/2019)

`சுந்தர்.சி அப்படியில்ல!’ - புதிய படம் குறித்து நெகிழும் உதவி இயக்குநர் கதிர்

இந்த ஆண்டின் பிஸியான நடிகர்களிலும் பிஸியானவர் சசிகுமார் தான் என்றே சொல்லலாம். 'பேட்', 'கென்னடி கிளப்', 'நாடோடிகள்-2', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'கொம்பு வச்ச சிங்கம்டா' என அவருக்கான 2019-ன் ரிலீஸ் பட்டியலே நீளமானது. இதற்கிடையில், அவரின் அடுத்த படத்துக்கான ஷூட்டிங்கும் இந்த வாரம் தொடங்கியது.

சுந்தர்.சி-யின் உதவியாளர் கதிர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம், மலேசியா மற்றும் பொள்ளாச்சியில் மூன்று கட்டமாகப் படமாக்கப்பட உள்ளது. தற்காலிகமாக 'சசிகுமார்-19' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் பெயரும் ஃபர்ஸ்ட் லுக்கும் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

சசிகுமார்

இதுகுறித்து இயக்குநர் கதிரிடம் பேசினோம். ``இந்தப் படம் கிராமம், நகரம்னு ரெண்டு வாழ்க்கையைப் பற்றி பேசும். இந்தக் கால ஓட்டத்துல நாம எதையெல்லாம் இழந்திருக்கோம்னு பேசக்கூடிய படமா இது இருக்கும்" என படத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

அப்படியென்றால், இது கொஞ்சம் சீரியஸான படமா இருக்குமா என்ற கேள்விக்கு, ``இல்லை, இது ரொம்ப கமர்ஷியலாகத்தான் இருக்கும். நகைச்சுவைக்கும் இதில் நிறையப் பங்கு இருக்கும். ஆனால், சசிகுமாரின் கேரக்டர் மிக சீரியஸானதாக இருக்கும். இதுவரை பார்க்காத கோணத்தில் அவரை இந்தப் படத்தில் பார்க்கலாம். மேலும், படத்தில் சதீஷ் விஜயகுமார், சிங்கம்புலி, நிரோஷா, ரேகா உட்பட கிட்டத்தட்ட 30 கதாபாத்திரங்களுக்கும் மேல் இருப்பார்கள்'' என்றார்.

படத்தை மலேசியாவில் எடுப்பதற்கான காரணத்தைக் கேட்டபோது, ``சசிகுமாரின் வாழ்க்கை முறை கிராமம் சார்ந்ததாக இருக்கும். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நிக்கி கல்ராணியின் வாழ்க்கை, வெளிநாட்டில் ஒரு நகரம் சார்ந்து இருக்க வேண்டும் என்பதால், மலேசியாவைத் தேர்ந்தெடுத்தோம். அப்போதுதான், இருவரின் வாழ்க்கை முறைகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஈஸியாக பார்ப்பவர்களிடம் கொண்டுசேர்க்க முடியும்" என்று கதிர் விளக்கினார்.

முதல் வாய்ப்பு கிடைத்ததும் சுந்தர்.சி என்ன சொன்னார் என்றதும், ``அவருக்கு ரொம்ப ஹேப்பி. பொதுவா உதவியாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது நிறைய இயக்குநர்களுக்குப் பொறாமையாக இருக்கும். ஆனா, இதுவரை நான் சுந்தர்.சி சார்கூட இருந்த 5 வருஷத்துல, அவருடைய உதவியாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதை நல்லா ஊக்குவிப்பார். எனக்கு, ஒருபடி மேல போய்... இந்தப் படத்துக்காக நிறைய மறைமுக உதவியும் பண்ணுனாரு," என்று கூறி நெகிழ்ந்தார்.