‘உதயநிதி எதார்த்தமான நடிப்பு; கவித்துவமான படைப்பு’ - கண்ணே கலைமானே படக்குழுவுக்கு திருமாவளவன் வாழ்த்து | Mutharasan and Tirumavalavan watch Udhaynidhi's Kanne Kalaimaane

வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (08/02/2019)

கடைசி தொடர்பு:21:03 (08/02/2019)

‘உதயநிதி எதார்த்தமான நடிப்பு; கவித்துவமான படைப்பு’ - கண்ணே கலைமானே படக்குழுவுக்கு திருமாவளவன் வாழ்த்து

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சீனுராமசாமி இயக்கி இந்த ஆண்டு வெளிவர இருக்கும் படம் `கண்ணே கலைமானே'. இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தில் வடிவுக்கரசி, வசுந்தர காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலன்தர் வாசன் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை மையமாகக் கொண்டும் படம் உருவாகியுள்ளது என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

உதயநிதி

இந்நிலையில், அரசியல் தலைவர்கள் தொல்.திருமாவளவன், முத்தரசன் உட்படப் பல முக்கிய பிரமுகர்களுக்குச் சிறப்புக் காட்சி ஒன்றைப் படக்குழுவினர் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். படத்தைப் பார்த்துவிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ``படம் மிகவும் யதார்த்தமானதாக இருக்கிறது. உதயநிதி உட்பட நடித்திருக்கும் அனைவரும் யதார்த்தத்துக்குச் சற்றும் மாறாமல் நடித்திருந்தனர். குறிப்பாக, யுவன் ஷங்கர் ராஜாவின் கிராமத்து இசையும், வைரமுத்துவின் அர்த்தமுள்ள வரிகளும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இது கவித்துவமான திரைப்படம்" எனப் பாராட்டினார்.

அதேபோல, குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ``சீனு ராமசாமி, கிராமத்து மனிதர்களின் வாழ்வியலையும், குடும்ப உறவுகளின் பற்றுதலையும் மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார். காண்பதற்கு நிறைவான படமாக இருக்கிறது," எனக் கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.

ஏற்கெனவே படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி, தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் வெளியிட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல படத்தின் முதல் பாடலான, `எந்தன் கண்களைக் காணோம்' என்ற பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். இப்போது அரசியல் தலைவர்களின் பாராட்டும் சேர்ந்து பாடத்துக்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.