`துருவ்வின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை!’ -'வர்மா' விவகாரத்தில் இயக்குநர் பாலா | director bala clarifies his state on the ongoing Varma issue

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (10/02/2019)

கடைசி தொடர்பு:08:00 (10/02/2019)

`துருவ்வின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை!’ -'வர்மா' விவகாரத்தில் இயக்குநர் பாலா

தெலுங்கில் வெளிவந்து  அர்ஜுன் ரெட்டி படத்தைத் தமிழில் பாலா இயக்க  விக்ரம் மகன் துருவ் நடித்து  `வர்மா’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் படம் வரும் பிப்ரவரி  14ம் தேதி  திரைக்கு வரவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது கைவிடப்பட்டு நிற்கிறது. 

பாலா

படத்தின் ஃபைனல் கட் பார்த்த பட நிறுவனம் " படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் இதற்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை. அதற்கு பதில் ஷூட்டிங்கை மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். துருவ்தான் படத்தின் நாயகனாக நடிப்பார். ஆனால், இந்தப் படத்தை வேறொருவர் இயக்குவார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும், இயக்குநர் குறித்தும் பின்னர் அறிவிப்போம். " என்ற திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த விவகாரத்தில் படத்தின் கதாநாயகன் துருவோ, துருவின் தந்தையும் , இயக்குநர் பாலாவின் நண்பருமான விக்ரமும் மௌனம் காத்து வருகின்றனர். கோலிவுட்டின் ஒருசாரார், தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம் விக்ரம்தான் என அடித்துக் கூறுகின்றனர்.  

வர்மா - பாலா அறக்கை

இந்நிலையில் இயக்குநர் பாலா நேற்று இரவு அளித்த அறிக்கையில் " தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்ட தவறான தகவலாலேயே இந்த விளக்கத்தை தர நேரிட்டது என்றே ஆரம்பிக்கிறார்.

தனது படைப்பு சுதந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் தான் வர்மா படத்தில் இருந்து விலகியதாக தெரிவித்திருக்கிறார்.

வர்மா சர்ச்சை

இதற்கென கடந்த ஜனவரி 22ம் தேதி தயாரிப்பு நிறுவனத்திற்கும், பாலாவுக்கும் இடையே ஒரு  பேச்சுவார்த்தை விக்ரம் முன்னிலையிலேயே நடந்ததுள்ளது. அக்கூட்டத்தில் தான் இப்படத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்று இயக்குநர் பாலா கேட்டுக்கொண்டதை ஏற்று தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டிருக்கும் ஒப்பந்தத்தையும் அந்த அறிக்கையுடன் பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார்.   இந்த விளக்க அறிக்கையின் கடைசி வரியாக "துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை" என்று முடித்திருக்கிறார் இயக்குநர் பாலா