`என் மக்களின் நம்பிக்கையை குலைக்குமாறு நடந்துகொள்ள மாட்டேன்' - விஜய் சேதுபதி! | vijay sethupathi's clarification on a bhagavad gita issue

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (12/02/2019)

கடைசி தொடர்பு:16:46 (12/02/2019)

`என் மக்களின் நம்பிக்கையை குலைக்குமாறு நடந்துகொள்ள மாட்டேன்' - விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி ஒரு டிஜிட்டல் படம் ஒன்று வைரலாகப் பகிரப்பட்டு வந்தது. தான் அப்படிப் பேசவில்லை என்றும் பகிரப்பட்டு வரும் படம் போட்டோஷாப் செய்தது என்றும் நிரூபிக்கும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கத் தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட, 'டிஜிகாப்' என்ற மொபைல் செயலி குறித்து, காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது விஜய் சேதுபதி, `காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, இந்த `டிஜிகாப்' செயலி மூலம் குறையும்" என்றார். இதைப் பிரபல செய்தி தொலைக்காட்சி பதிவிட்டது. இதை வேறு சிலரோ, விஜய் சேதுபதி சொன்ன கருத்துக்கு மாறாக பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை போட்டோஷாப் மூலம் வைத்துள்ளனர். அதை சில சமூக வலைதள பக்கங்கள் விஜய் சேதுபதியின் கருத்து போல் பதிவிட்டிருந்தன.

போட்டோஷாப் செய்யப்பட்ட படம்

இதற்கு நிறைய எதிர்மறை கருத்துகள் வந்த வண்ணம் இருக்க, இச்செய்தியை அறிந்த விஜய் சேதுபதி தனது முக நூலில் விளக்கம் அளித்துள்ளார். அதில், செய்தி நிறுவனத்தின் உண்மைச் செய்தியையும், விஷமிகள் பரப்பிவிட்டு போட்டோ ஷாப் கருத்தையும் பதிவிட்டு, ``‪என் அன்பிற்குரிய மக்களுக்கு‬ ‪பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை‬ பேசவும் மாட்டேன்‬. ‪சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது‬. ‪எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்‬." எனப் பதிவிட்டிருந்தார். இப்பதிவுடன் தான் பேசிய காணொலிக்கான லிங்கையும் பதிவு செய்தார்.  

vijay sethupathi

இதேபோல் அந்தச் செய்தி நிறுவனமும் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வந்த செய்திகளே உண்மையானது என விஜய் சேதுபதியின் கருத்து அடங்கிய படத்தை ட்வீட் செய்தது.