`ஜாங்கிரி' மதுமிதாவுக்கு விரைவில் டும், டும்..! யாரை மணக்கிறார்? | actress Jangiri Madhumitha get married soon

வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (13/02/2019)

கடைசி தொடர்பு:17:59 (13/02/2019)

`ஜாங்கிரி' மதுமிதாவுக்கு விரைவில் டும், டும்..! யாரை மணக்கிறார்?

மதுமிதா

 `ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மதுமிதா, அவரின் தாய்மாமா மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலை பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்.  

திருமண பிஸியில் இருக்கும் நடிகை ஜாங்கிரி மதுமிதாவை மாலை நேரத்தில் சந்தித்தேன். சிரித்த முகத்துடன் வரவேற்றார். புதுப்பெண்ணுக்குரிய வெட்கம் அவரின் முகத்தில் குடிகொண்டிருந்தது. நம்மிடம் அவர், ``2012ல், `ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படத்தை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. அதற்குச் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது எனக்குக் கிடைத்தது. அதன்பிறகு `மிரட்டல்', `அட்டக்கத்தி', `கண் பேசும் வார்த்தைகள்' எனப் பல படங்களில் நடித்துள்ளேன். `இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் பேபி கதாபாத்திரத்தில் நடித்தேன். அதற்கு 2-வது தடவையாக விகடன் விருது கிடைத்தது.

2019-ல் விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்துக்கு தங்கையாக நடித்தேன். தற்போது சில படங்களில் நடித்துவருகிறேன். என்னுடைய தாய்மாமா மகன் மோசஸ் ஜோயல், குறும்பட இயக்குநர். அதோடு பிரபல சினிமா இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். அவர், இந்தத் துறையில் இருப்பதைப் பார்த்துதான் நானும் நடிக்க வந்தேன். இப்போது அவர்தான் என்னுடைய வாழ்க்கையிலும் துணையாக வரப்போகிறார். என்னுடைய அப்பா வண்ணை கோவிந்தன், அ.தி.மு.கவின் பேச்சாளர். அவர் மறைவுக்குப் பிறகு போராடி வாழ்க்கையில் முன்னேறியுள்ளேன். 

 நடிகை ஜாங்கிரி மதுமிதாவின் திருமண அழைப்பிதழ்

எங்கள் குடும்பத்துக்கும் மோசஸ் குடும்பத்துக்கும் 18 ஆண்டுகள் பேச்சுவார்த்தை கிடையாது. ஆனால், எங்கள் இருவருக்கும் ஒருவொருக்கொருவர் புரிதல் இருந்துவந்தது. எங்களின் திருமணத்தால் குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். அது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிப்பையும் வாழ்க்கையையும் என்றுமே நான் பிரித்துப் பார்த்ததில்லை. அவை என்னுடைய இரண்டு கண்கள். ரசிகர்கள் மனதில் ஜாங்கிரி மதுமிதாவுக்குத் தனி இடம் உள்ளது. அந்த இடத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள்வேன். 

மதுமிதா

சினிமாவோடு சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்துவருகிறேன். அங்கேயும் எனக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர்களின் ஆசீர்வாதம் நிச்சயம் எனக்கு எப்போதும் உண்டு. மோசஸ் பத்தி சொல்லவேண்டும் என்றால் அன்பானவர், அழகானவர், அசராதவர். நடிகர் சிம்பு பட லைட்டில் என நினைக்காதீர்கள். மோசஸ், பழகுவதற்கு நல்ல மனிதர். எல்லோருக்கும் உதவ வேண்டும் என விரும்புவார். அவருக்குள் நிறைய திறமைகள் இருக்கின்றன. அவர் இயக்கிய குறும்படத்தில் நான் நடித்திருக்கிறேன். விரைவில் புதிய படத்தை இயக்க உள்ளார். அதுதான் எங்களின் முதல் குழந்தை. திருமணத்துக்குப் பிறகும் ஆச்சி மனோரமாவைப் போல நடித்துக்கொண்ட இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்றார் சிரித்தப்படி 

 மதுமிதா

விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது என்று கேட்டதற்கு, `` விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவம் இன்னமும் இருக்கிறது. அவருக்குத் தங்கையாக வரும் கேரக்டரில் உண்மையிலேயே நிஜ தங்கையான உணர்வு எனக்குள் ஏற்பட்டது. பெண் காமெடி நடிகைகளுக்கு இன்னமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. அதுவே சிலருக்கு அடையாளமாகிவிடுகிறது. அதுபோலதான் எனக்கும் ஜாங்கிரி அடைமொழியாகிவிட்டது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிகர் சந்தானம், என்னை ஜாங்கிரின்னு அழைப்பார். இப்போது எங்கு சென்றாலும் ஜாங்கிரி என்றே என்னை ரசிகர்கள் அழைக்கின்றனர். எங்களுடைய திருமணத்தை சிம்பிளாக நடத்த முடிவு செய்துள்ளோம். கோயம்பேட்டில் பிப்ரவரி 15ம் தேதி காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள் திருமணம் நடைபெறவிருக்கிறது. கட்டாயம் வந்து வாழ்த்திடுங்க" என்று அவருக்கே உரிய ஸ்டைலில் பேசி முடித்தார்.