ஸ்டெர்லைட் முதலாளிகளுக்கு 'ஸ்டண்ட்' சில்வா கண்ணீர் வேண்டுகோள்! | stund silva shares his opinion regarding sterlite issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (20/02/2019)

கடைசி தொடர்பு:13:10 (20/02/2019)

ஸ்டெர்லைட் முதலாளிகளுக்கு 'ஸ்டண்ட்' சில்வா கண்ணீர் வேண்டுகோள்!

`சட்ட நிபுணர்களுடன் ஆலோசிச்சு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்'னு ஸ்டெர்லைட் முதலாளிகள் தெரிவிச்சிருக்கிறதா பேப்பர்ல படிச்சேன். அந்த முதலாளிகளை ஒண்ணே ஒண்ணு கேட்க விரும்பறேன். 'நீங்கெல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்கதான். உங்களுக்குத் தெரியாத விஷயமில்லை. `எத்தனை பெரிய நிபுணர்கள் இயற்றினாலும் சட்டம்கிறது மக்களுக்குத்தானேங்கய்யா! அந்த மக்கள் வேண்டாம்கிற விஷயத்தை அவங்க மேல அடம் பிடிச்சுத் திணிக்கணும்னு நினைக்கிறீங்களே, நியாயமாய்யா' என  சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வினா எழுப்பியுள்ளார்.

ஸ்டண்ட் சில்வா

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உடன்பிறந்த தங்கையின் கணவர் அந்தோணி செல்வராஜ் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானது நினைவிருக்கலாம்.

``சமீபத்துல `விகடன் நம்பிக்கை விருதுகள்' நிகழ்ச்சியில தூத்துக்குடி போராட்டத்துல இறந்தங்களோட குடும்பத்தினரை அழைச்சுட்டு வந்து மரியாதை செய்த நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். அப்ப அந்த மக்கள் மேடையில் கலங்கின நிமிஷம், என்னாலயும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியலை.

சில தினங்களுக்கு முன்னாடி அந்த நிகழ்ச்சி டிவியில ஒளிபரப்பான அன்னைக்கு நண்பர்கள் வட்டாரத்துல இருந்து அவ்வளவு விசாரிப்புகள். ஒரு ஸ்டண்ட் மாஸ்டரை அழுது பார்த்திராத சினிமா சர்க்கிள் இல்லையா அது' என்ற சில்வா, `நானும் மனுஷந்தானேங்க. படத்துல துப்பாக்கியால தாறுமாறா சுடற சீன் வச்சு ஒர்க் பண்றது நிழல். இங்க நடந்தது கண் முன்னாடி நடந்த நிஜங்க' என்கிறார்.


[X] Close

[X] Close