Published:Updated:

தஞ்சாவூரில் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் இணைந்து கொண்டாடிய 'விஸ்வாசம்' வெற்றி விழா!

தஞ்சாவூரில் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் இணைந்து கொண்டாடிய 'விஸ்வாசம்' வெற்றி விழா!
தஞ்சாவூரில் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் இணைந்து கொண்டாடிய 'விஸ்வாசம்' வெற்றி விழா!

தஞ்சாவூரில், அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் 50-வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் கலந்துகொண்டு கொண்டாடியது பார்ப்பவர்களை பெருமைப்பட வைத்துள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் எடுக்கப்பட்ட 'விஸ்வாசம்' படம், கடந்த பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன் திரைக்கு வந்தது. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டு, குடும்ப செண்டிமென்டுடன் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி  நேற்றுடன் 50 நாள் ஆனது. இந்த நாளை தஞ்சாவூரில் வெற்றி விழாவாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுசெய்தனர் அவரது ரசிகர்கள்.

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி, விஜய், கமல் என அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் அஜித் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு, அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துக் கூறினர். இதைப் பார்த்த பொது மக்கள்,  நடிகர்களுக்காக சண்டை போட்டுக் கொள்ளும் ரசிகர்களுக்கு மத்தியில், அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு நடிகரின் விழாவைக் கொண்டாடியிருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோல், எல்லா ஊர்களிலும் இருந்தால் எந்தச் சண்டை சச்சரவும், ரசிகர்களுக்குள் வேறுபாடும் இருக்காது எனப் புகழ்ந்தனர்.

இதுகுறித்து அஜித் ரசிகர் மன்றத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் வின்சென்ட் என்பவரிடம் பேசினோம், `` 'தல' படம் வரும்போதும் சரி அந்தப் படம் வெற்றியடையும்போதும் சரி, நாங்க சிறப்பாகக் கொண்டாடுவோம். இதேபோல், அஜித் மற்றும் அவரது மகள் அனோஸ்கா பிறந்தநாளையும் சுவர் விளம்பரம் செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுக்கு ரிலீஸான விஸ்வாசம் படம், 50 நாள்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித் ரசிகராக இதற்கு நாங்க ரொம்பவே பெருமைப்படுறோம். படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட முடிவுசெய்தோம். அதன்படி, படம் ஓடிக்கொண்டிருக்கும் தஞ்சாவூர் சாந்தி திரையரங்க காம்ப்ளக்ஸில், இதற்கான ஏற்பாட்டைச் செய்தோம்.

10 கிலோ எடைகொண்ட கேக் வாங்கி வெட்டினோம். மேலும்,  படம் பார்க்க வந்த  ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்பு பாக்ஸ் வழங்கினோம். தியேட்டர் ஊழியர்களுக்கு ஷீல்டு கொடுத்தோம். இதில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் என அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் கலந்துகொண்டதோடு, எங்களுக்கு கேக் ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர். இது எனக்கு பெரும் நெகிழ்ச்சியைத் தந்தது. மற்ற ஊர்களில்,  நடிகர்களின் ரசிகர்களுக்குள் வேறுபாடு, போட்டி, பொறாமை இருந்தாலும், எங்க ஊரில் நாங்க எப்பவுமே ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். எங்க தல படத்தை நாங்க கொண்டாடுவதைவிட மற்ற நடிகர்களின் மன்ற நிர்வாகிகளும் எங்க அழைப்பை ஏற்று வந்து கொண்டாடியதுதான், எங்களுக்கு மட்டும் இல்லை; எங்க தல-க்கும் பெருமை" என்றார்.