எனக்கு இரண்டாவது முறை 'கலைமாமணி' விருதா? - குழப்பத்தில் நடிகை எஸ்.என்.பார்வதி | name confusion in recently announced kalaimamani awardees list

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (01/03/2019)

கடைசி தொடர்பு:16:30 (01/03/2019)

எனக்கு இரண்டாவது முறை 'கலைமாமணி' விருதா? - குழப்பத்தில் நடிகை எஸ்.என்.பார்வதி

கலைகளை வளர்த்தெடுக்கும் முயற்சியாக பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களுக்குத் தமிழ்நாடு அரசு 'கலைமாமணி' விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகிறது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருதுகள் 1959-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். கருணாநிதி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் 'கலைமாமணி' விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கடைசியாக 2010-ம் ஆண்டு வரை இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தது.

அதற்குப் பிறகு 2011 முதல் 18 வரையிலான எட்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து தற்போது விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்திக், பொன்வண்ணன், சரவணன், பிரசன்னா, பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன், பிரபுதேவா, சசிகுமார், எம்.எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, சிங்கமுத்து, ஶ்ரீகாந்த், சந்தானம் என நடிகர்களின் பட்டியல் நீள்கிறது. இதேபோல் நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், நாட்டுப்புற பாடகர்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் விருதுகள் வழங்கப் பட்டுள்ளன. நடிகைகளில் 2012-ம் ஆண்டுக்கான பட்டியலில் நாடக நடிகை என்கிற பிரிவில் என்.எஸ்.பார்வதி என்பவருக்கு `கலைமாமணி' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த இனிஷியலில்தான் குழப்பம்.

எஸ் என் பார்வதி

ஏனெனில் பழம்பெரும் நாடக நடிகை எஸ்.என். பார்வதியைத்தான் சினிமா உலகம் அறியும் . எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன் எனப் பலரின் படங்களிலும் நடித்திருக்கும் இவர், 1985-ம் ஆண்டிலேயே 'சுமை' என்கிற படத்தில் நடித்ததற்காக 'கலைமாமணி' விருது வாங்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் செல்லப் பெயரான 'அம்மு' என்கிற பெயரையே தன் மகளுக்குச் சூட்டியவர் இவர்.' தற்போதைய பட்டியல் வெளியான நிமிடம் தொட்டு, இவருக்கு ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகளாம். 'விருது பெற்றதற்கு வாழ்த்துகள்' என வந்த அந்த போன் கால்களால் ஏகத்துக்கும் குழம்பிப் போயிருக்கிறார்.

எஸ் என் பார்வதி

அவரிடம் பேசினோம், ``'கலைமாமணி' ஒரு தடவைதான் தருவாங்கன்னுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ஒரே குழப்பமா இருக்கு. நானே நாடக நடிகைதான். ஆனா என்.எஸ் பார்வதிங்கிற பெயர்ல ஒரு நடிகை இருக்காங்களான்னு எனக்குத் தெரியல. இந்தக் குழப்பத்தை அரசுதான் தீர்த்து வைக்கணும்' என்கிறார்.

இதுதொடர்பாக இயல் இசை நாடக மன்றத்தில் பேசினோம். 'கலைமாமணி' ஒரு தடவைதான் வழங்கப்படுகிறது. அதுல எந்த சந்தேகமும் வேண்டாம். இப்ப வெளியாகியிருக்கிற பட்டியல்ல இருக்கிறவங்க என்.எஸ், பார்வதி. சென்னை தேனாம்பேட்டையில குடியிருக்கறதா எங்க ரிக்கார்டுல இருக்கு' என்கிறார்கள் இவர்கள்.


[X] Close

[X] Close