'வா வா பெண்ணே' - காதல் ததும்பும் 'உறியடி-2'வின் முதல் சிங்கிள் | First single of Uriyadi-2 Vaa vaa penne

வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (04/03/2019)

கடைசி தொடர்பு:21:05 (04/03/2019)

'வா வா பெண்ணே' - காதல் ததும்பும் 'உறியடி-2'வின் முதல் சிங்கிள்

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அதிக எதிர்பார்ப்புள்ள படங்களில் மிகவும் முக்கியமானது, 'உறியடி-2'. கடந்த 2016-ம் ஆண்டு அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்கி நடித்த படம், 'உறியடி'. தான் முன்னெடுத்த அரசியலுக்காகவும், பேசிய சமூகச் சிக்கலுக்காகவும், அந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த ஆண்டு, அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி 2' வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை, 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, இணை தயாரிப்பாளராக இந்தப் படத்தின் இயக்குநர் விஜயகுமாரும் இணைந்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இன்று, அந்தப் படத்தின் முதல் சிங்கிள், 'வா வா பெண்ணே'வின் லிரிக்கல் வீடியோ யூடியூபில் வெளியானது.

வா வா பெண்ணே

முதல் பாகத்தில், காதலுக்கு பெரும் முக்கியத்துவம் இல்லையென்றாலும், ஒரு காதல் பாடல் இடம்பெற்றிருந்தது. அதேபோல இந்தப் படத்திலும், இது ஒரு அழகிய டூயட் பாடலாக வந்துள்ளது. ஒருவேளை, இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிந்த் வசந்தா இசையில், விஜயகுமார்-நாகராஜி வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, சித் ஶ்ரீராம், பிரியங்கா பாடியுள்ளனர்.

இந்தப் படத்தில், விஜயகுமாருக்கு ஜோடியாக அறிமுக நாயகி விஸ்மயா நடிக்கிறார். அவர்களோடு, 'மெட்ராஸ் சென்ட்ரல்' சுதாகர், 'உறியடி' ஷங்கர்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், முதல் பாகத்தைப் போன்று இதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகச் சிக்கலைப் பற்றி பேசும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மக்களுக்குத் தேவையான சோஷியல் மெசேஜுடன் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

 

 

 


[X] Close

[X] Close