கோலிவுட்டைக் குறிவைத்து ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் அல்லு அர்ஜுன் | Allu Arjun to join with AR Murugadoss for Tamil Telugu bilingual

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (07/03/2019)

கடைசி தொடர்பு:14:20 (07/03/2019)

கோலிவுட்டைக் குறிவைத்து ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் அல்லு அர்ஜுன்

டோலிவுட்டின் விஜய் சேதுபதி, நடிகர் அல்லு அர்ஜுன் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட ஆறு படங்களில் ஒரே சமயத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். வெவ்வேறு நிலைகளில் இருக்கும் இந்தப் படங்களைத் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்குகின்றனர்.

தற்போது தெலுங்கின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதுபோக இயக்குநர்கள் த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் மற்றும் லிங்குசாமியுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், டோலிவுட்டின் மிக முக்கியமான படமான சயீரா நரசிம்மா ரெட்டியிலும் ஒரு கெளரவக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் அல்லு அர்ஜுன். சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா என பெரும் நடிகர் பட்டாளமே இடம்பெறுகின்றனர். அதில் அல்லுவின் கதாபாத்திரம் என்ன என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளது படக்குழு.

அல்லு அர்ஜுன்

அந்தப் படங்களின் வரிசையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவிருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே மகேஷ் பாபுவுக்கு 'ஸ்பைடர்' படம் மூலமாகத் தமிழில் ஓப்பனிங் கொடுத்த முருகதாஸ் இந்தப் படம் வாயிலாக அல்லுவுக்குத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸான பெயரைப் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அல்லு நடிப்பில் வெளியான டப்பிங் படமான 'என் பேரு சூர்யா, என் வீடு இந்தியா' (தெலுங்கில் 'நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா') ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுபோக, மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா எனத் தெலுங்கு நடிகர்கள் எல்லோரும் தமிழ்த் திரையுலகில் தடம் பதிக்க முயன்றுகொண்டிருக்கின்றனர். அதனால், அல்லுவும் கோலிவுட்டில் ஒரு நல்ல ஓப்பனிங்கை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதனால், முருகதாஸ் அதற்குச் சரியான இயக்குநராக இருப்பார் என்று அவர் நம்புகிறார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தற்சமயம் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார் முருகதாஸ். அல்லு அர்ஜுனும் தன் மற்ற படங்களையெல்லாம் முடித்துவிட்டு முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


[X] Close

[X] Close