விஷால், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்குத் தமிழக அரசு நோட்டீஸ்! | TN govt issued show cause notice producer council president vishal and office bearers

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)

கடைசி தொடர்பு:06:00 (09/03/2019)

விஷால், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்குத் தமிழக அரசு நோட்டீஸ்!

விஷால், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு, சங்க நிர்வாகம் குறித்து தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர் சங்க வரவு செலவு கணக்குகளில் முறைகேடு எனத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தமிழக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் இந்த நோட்டீஸுக்கு 30 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

விளக்க நோட்டிஸ்

2017-ம் ஆண்டு  விஷால் தலைமையிலான நிர்வாகக் குழு தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியேற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்த விஷால் மற்றும் குழுவினர் செய்து வரும் நிர்வாகம் மீது முன்னாள் நிர்வாகிகள் பலரும் குற்றச்சாட்டு வைத்த வண்ணம் உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வுகளை மேற்கொண்டு தமிழக அரசு நான்கு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அதற்கான விளக்கம் கேட்டுத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விளக்க நோட்டிஸ்

2017-ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரைக்கும் வருடாந்தர முறையில் நடத்தப்பட வேண்டிய பொதுக்குழு நடத்தாமல் இருப்பது, செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமல் பதிவாளருக்குத் தெரிவிக்காமல் சங்கத்தின் நிர்வாக அலுவலகத்தை தி.நகருக்கு மாற்றியது, அந்த அலுவலகத்துக்கு சங்க நிதியிலிருந்து வாடகை மற்றும் முன் பணமாகச் செலவழித்தது, காரணமின்றி நிர்வாகிகள் பதவி விலகியது,  மூத்த சங்க உறுப்பினருக்கு (தயாரிப்பாளருக்கு) பென்ஷன், தீபாவளிப் பரிசு, உறுப்பினரின் குழந்தைகளுக்கு உதவித்தொகை, உறுப்பினர் மகள்/மகன் திருமணத்துக்கு உதவித்தொகை எனச் சங்கத்தின் விதிகளுக்கு மாறாக வழங்கியது என நான்கு விஷயங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ற பதிலை 30 நாள்களில் அளிக்கவில்லை என்றால் சங்கங்கள் பதிவு சட்டம் 1975 விதிகளின் கீழ் நீதிமன்றம் நியமிக்கும் தனி அலுவலர், அடுத்த சங்கத் தேர்தல் நடக்கும்வரை சங்க அலுவல்களைக் கவனிக்க நேரிடும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

கவுன்சில்

முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் சங்க அலுவல்கள் குறித்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு  நடத்திய ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த விளக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டம் கூச்சல் குழப்பத்தால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தயாரிப்பாளர் சங்கம்

இந்த வருடம் மார்ச் 3-ம் தேதி நடக்கவிருந்த பொதுக்குழு கூட்டம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.  


[X] Close

[X] Close