கீர்த்தி சுரேஷ் படத்துக்கு 7 ஏக்கரில் பிரமாண்ட செட்! -மார்ச் 15 முதல் படப்பிடிப்பு | Keerthy Suresh to act in a big budget Tamil-Telugu bilingual film

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (09/03/2019)

கடைசி தொடர்பு:13:55 (09/03/2019)

கீர்த்தி சுரேஷ் படத்துக்கு 7 ஏக்கரில் பிரமாண்ட செட்! -மார்ச் 15 முதல் படப்பிடிப்பு

'மகாநடி'க்குப் பிறகு மீண்டும் முன்னணிப் பாத்திரம் ஏற்று நடிக்கவிருக்கிறார், கீர்த்தி சுரேஷ். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் இவர், தற்போது ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவிருக்கும் இந்தப் படம், பெரும் பொருள் செலவில் படமாக்கப்பட இருக்கிறது. புதுமுக இயக்குநர் நரேந்திரா இயக்கும் இந்தப் படத்துக்காக, ஹைதராபாத்தின் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் 7 ஏழு ஏக்கரில் செட் எழுப்பப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக செட் அமைக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில், வரும் மார்ச் 15 -ம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் வரை அந்த செட்டில் படப்பிடிப்பு நடக்கும் என்றும், அதன்பிறகு அடுத்த கட்டமாக அமெரிக்காவிலும் படத்தின் சில காட்சிகள் படம்பிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

'சாமி-2', 'சண்டக்கோழி-2', 'சர்கார்' எனத் தொடர்ச்சியாக கீர்த்தி நடித்து வந்த படங்கள் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்றாலும், அவர் நடித்த 'மகாநடி' (தமிழில் 'நடிகையர் திலகம்') இரு மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், தற்போது தெலுங்கில் கீர்த்தியின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது என்பதால், இந்தப் பெரிய பட்ஜெட் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் அல்லாமல், மலையாளாத்தில் 'மரக்கார்: அரபிக்கட்லின்டே சிம்ஹம்', இந்தியில் 'பதாய் ஹோ' இயக்குநரின் அடுத்த படம் எனக் கைவசம் இரண்டு படங்களை வைத்திருக்கிறார் கீர்த்தி.


[X] Close

[X] Close