பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' - ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி! | Parthiban's next movie titled Oththa Seruppu

வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (09/03/2019)

கடைசி தொடர்பு:20:31 (09/03/2019)

பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' - ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன், தான் அடுத்து இயக்கவிருக்கும் 'ஒத்த செருப்பு' படத்தின் முதல் பார்வைக் காணொலியை ட்விட்டரில் வெளியிட்டார் விஜய் சேதுபதி.

ஒத்த செருப்பு

'ஹவுஸ் ஃபுல்', 'புதிய பாதை', 'இவண்', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என மாறுபட்ட படங்களை உருவாக்கியவர் பார்த்திபன். தனக்கென்றே ஒரு தனி பாணியில் படம் எடுப்பவர் என ரசிகர்களிடம் பெயரைச் சம்பாதித்து வைத்துள்ளார்.

பாடல் இல்லாத படம், கதை இல்லாத படம், க்ளைமாக்ஸ் இல்லாத படம் எனப் பல முயற்சிகளையும் எடுத்துள்ளார் பார்த்திபன். அந்த வரிசையில், 'ஒத்த செருப்பு' படமும் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையே முதல் பார்வை என்ற பெயரில் தான் வெளியிட்டுள்ளார்.

காவல் துறையினரின் வாக்கி டாக்கியின் அலறல்கள் கலந்த, ஒரு அமானுஷ்யமான இசைக் கோர்வையுடன் இந்தப் படத்தின் டைட்டில் ஒரு செருப்பைப் பின்னணியில் வைத்து அந்த வீடியோவில் தெரிகிறது. பின்னர் கண்களைத் தவிர்த்து முகத்தை மொத்தமாக மூடியபடி பார்த்திபன் திரையின் ஒரு ஓரத்தில் காட்சியளிக்கிறார். ஹாரரா, த்ரில்லரா, ஆக்‌ஷனா என இது என்ன ஜானர் படம் என்பதே புரியாத அளவுக்கு அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இந்தப் படத்தில் பார்த்திபனுடன் இணைந்து பணியாற்றவிருக்கிறார். அது தவிர ஒளிப்பதிவாளர், ராம்ஜி என்பது மட்டும் அந்த வீடியோவில் சொல்லப்படுகிறது. இன்று முதல் படப்பிடிப்பு துவங்கும் இந்தப் படத்தைப் பற்றிய வேறு எந்த விவரமும் தரப்படவில்லை.

 


[X] Close

[X] Close